செய்திகள் :

ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்' என்னென்ன? |In Depth

post image

டொனால்ட் ஜெ ட்ரம்ப் – ‘இரண்டாவது முறையாக’ அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று, நாளையுடன் (ஜனவரி 20) ஓராண்டு முடிவடைகிறது.

இந்த ஓராண்டிலேயே ட்ரம்பின் அதிரடிகளால் உலக நாடுகளும், உலக நாடுகளின் பொருளாதாரமும் திணறிவிட்டன.

கடந்த ஓராண்டாக, ‘அமெரிக்க அதிபர்’ ட்ரம்ப் செய்த 'சம்பவ'ங்களைப் பார்க்கலாமா?

ட்ரம்ப் பதவியேற்றதும் அவர் முதன்முதலாக கையில் எடுத்த பெரிய அஸ்திரம், ‘வெளியேற்றம்’.
வெளியேற்றம்
வெளியேற்றம்

“அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக பலர் குடியேறியிருக்கிறார்கள். இவர்கள் அமெரிக்காவில் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்… போதை மருந்து கடத்துகிறார்கள்” என்று புகார்களை அடுக்கினார்.

இதை சரிசெய்ய அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்களை வலுகட்டாயமாக வெளியேற்றினார்.

சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்களை வலுகட்டாயமாக வெளியேற்றுவதைக்கூட ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் கண்ணியமாக வெளியேற்றப்படாததை நிச்சயம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சட்டத்திற்குப் புறம்பாக குடியேறிய மக்கள் கை, கால் விலங்கிட்டு, ராணுவ விமானத்தில் அவரவர் நாட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

பொதுவாக, போர்க் குற்றவாளிகள் தான் ராணுவ விமானத்தில் நாடு கடத்தப்படுவர். ஆனால், பொதுமக்கள் ராணுவ விமானத்தில் அனுப்பப்பட்டனர்.

ஏன் இங்கே பொதுமக்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றால், சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறிய அனைத்து மக்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என்று கூறமுடியாது.

காரணம், பல மக்கள் தங்களது நாட்டில் வேலை கிடைக்காததால்... சரியான நிதி ஆதாரம் இல்லாததால் தான், அமெரிக்காவில் குடியேறியிருக்கிறார்கள். சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியது தவறு தான். ஆனால், உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்குக் கண்ணியம் என்பது அடிப்படையானது.

மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகள் ட்ரம்பின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தாலும், இந்தியா இதை அமைதியாகவே கடந்தது.

ட்ரம்ப் - பரஸ்பர வரி
ட்ரம்ப் - பரஸ்பர வரி
அடுத்தது, அமெரிக்காவின் 'சுதந்திர தினம்'.

இதை அமெரிக்காவின் சுதந்திர தினம் என்று கூறுவதை விட, ட்ரம்பின் சுதந்திர தினம் என்று கூறலாம். காரணம், இந்தச் சுதந்திர தினத்தை அறிவித்ததே ட்ரம்ப் தான்.

அனைத்து நாடுகளும் அமெரிக்கப் பொருள்களுக்கு அதிக வரி வசூல் செய்கின்றன. இதனால், அமெரிக்கா பாதிக்கப்படுகிறது என்று கூறி, நாடுகள் மற்றும் அதன் அமெரிக்கப் பொருள்களுக்கு விதிக்கும் வரியைப் பொறுத்து, அந்தந்த நாடுகளுக்குப் பரஸ்பர வரியை விதித்தார்.

ட்ரம்ப் கூறிய அந்தச் சுதந்திர நாள், ஏப்ரல் 2, 2025.

இந்தியாவிற்கு ஆரம்பத்தில் 25 சதவிகித வரி விதிக்கப்பட்டது. ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளுக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை.

இந்த வரியினால் மிகவும் பாதிக்கப்பட்டது சீனா தான்.

பிற நாடுகளுக்கு பரஸ்பர வரி அறிவிக்கப்பட்டாலும், அதை பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யவும்... குறைக்கவும் அவகாசம் கொடுத்தார் ட்ரம்ப்.

ஆனால், சீனாவிற்கு மட்டும் உடனடியாக வரி விதிப்பு அமலுக்கு வந்தது.

இதை சீனா சும்மா விடவில்லை. பதிலுக்கு, அமெரிக்காவின் மீது வரி விதித்தது.

இதனால், கோபமடைந்த அமெரிக்கா, சீனா மீது மீண்டும் வரி விதித்தது. இதற்கு பதிலடியாக, சீனா அமெரிக்கப் பொருள்களுக்கு வரி விதித்தது.

இப்படியே மாறி மாறி நடந்து, அமெரிக்கா சீனா மீது 145 சதவிகிதம் வரை வரி விதித்தது. சீனா அமெரிக்கா மீது 110 சதவிகித வரை வரி விதித்தது.

பிறகு, 2025-ம் ஆண்டு ஜூன் மாதம், இரு நாடுகளும் அமைதியாகி, பேச்சுவார்த்தையைத் தொடங்கின. இப்போது வரை பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கிறது. எந்த முடிவும் எட்டப்படவில்லை.

பேச்சுவார்த்தைக்கு இடையில் அக்டோபர் மாதம், சீனா தனது கனிமப் பொருள்கள் ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீனப் பொருள்களுக்கு 100 சதவிகிதம் வரி என்று அறிவித்தார். ஆனால், அது அமலுக்கு வரவில்லை.

ட்ரம்ப் - நோபல் பரிசு
ட்ரம்ப் - நோபல் பரிசு
அடுத்த முக்கியமான சம்பவம் - அது 'நோபல் பரிசு ஆசை'.

ட்ரம்பிற்கு ஏனோ நோபல் பரிசு மீது தீராத ஆசை போலும். நான் அந்தப் போரை நிறுத்தினேன்... இந்தப் போரை நிறுத்தினேன் என்று பட்டியலை அடுக்கி, பல முறை நோபல் பரிசைக் கேட்டார் ட்ரம்ப்.

ட்ரம்பிற்கு நோபல் பரிசு தர இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், கம்போடியா பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் பரிந்துரைத்தனர்.

ஆனால், இவர்களெல்லாம் மே மாதத்திற்கு பிறகே, ட்ரம்பின் பெயரைப் பரிந்துரைத்தார்கள்.

ஜனவரி மாதத்திற்குள் பரிந்துரைத்தால் தான், ட்ரம்பினால் நோபல் அமைதிப் பரிசு பெற்றிருக்க முடியும்.

அதனால், 2025-ம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசைத் தட்டிச் சென்றார் வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ.

இதில் ட்ரம்பிற்கு 'வருத்தம் தாம்பா'.

தற்போது லேட்டஸ்டாக மச்சாடோ ட்ரம்பிற்கு நோபல் அமைதிப் பரிசைத் தந்திருக்கிறார். ஆனால், இது நோபல் பரிசு கமிட்டியின் விதிமுறைகள் படி செல்லாது.

மச்சாடோவிற்கு முன்பே, FIFA அமைப்பு ட்ரம்பிற்கு 'ஃபிஃபா அமைதி பரிசை' வழங்கியது. இந்த அமைப்பு அமைதிப் பரிசு வழங்க தொடங்கிய முதல் ஆண்டு சென்ற ஆண்டு தான்.

ட்ரம்ப் நோபல் பரிசு கேட்ட தனது அமைதிக் கொடி பட்டியலில், 'இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தமும்' இருந்தது.

'நான் தான்' இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று ட்ரம்ப் கூறி வருவதை இந்தியா பலமுறை மறுத்துவிட்டது. இருந்தாலும், இன்னமும் அவர் அந்தக் கூற்றைக் கூறுவதை நிறுத்தவில்லை.

புதின் - ட்ரம்ப்
புதின் - ட்ரம்ப்
இப்போது ட்ரம்பின் 'ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த' முயற்சிகள்.

ரஷ்ய அதிபர் புதினும், ட்ரம்பும் நண்பர்கள் என்பது உலகம் அறிந்தது. இதனால், ட்ரம்ப் எளிதாக ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்திவிட முடியும் என்று கணக்குப் போட்டிருந்தார்.

ஆனால், 'நட்பு வேறு... அரசியல் வேறு' என ட்ரம்பிற்குக் காட்டிவிட்டார் புதின்.

ஜெலன்ஸ்கியை அழைத்துப் பேசுவது... புதினை அழைத்துப் பேசுவது என பல முயற்சிகளைச் செய்தார் ட்ரம்ப்.

அது இன்னமும் முயற்சிகளாகவே இருந்து வருகின்றன.

ஆரம்பத்தில் புதினை 'சாஃப்ட்டாக' கையாண்டாலும், இப்போது வரியைக் காட்டி பயமுறுத்தத் தொடங்கிவிட்டார் ட்ரம்ப். இருந்தும் புதின் வழிக்கு வருவதாக இல்லை.

புதினை வழிக்கு கொண்டுவரும் முயற்சிகளில் ஒன்று தான், 'இந்தியா மீது 25 சதவிகித வரி ப்ளஸ் கூடுதல் 25 சதவிகித வரி விதித்தது'. கூடுதல் 25 சதவிகித வரி என்பது இந்தியா, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக.

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்துடன் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரைப் பார்த்துவிடுவோம்.

ட்ரம்ப் பேசிக்கொண்டு மட்டுமில்லை... சில போர்களை நிறுத்தியும் இருக்கிறார். அதில் ஒன்று தான், இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர். இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் தரப்பு இரண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டன.

இப்போது காசா அமைதி அமைப்பிற்காக ட்ரம்ப் கடுமையாக முயற்சித்து வருகிறார் என்பதை நேற்றிலிருந்து காண முடிகிறது.

மேலே சொன்ன போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்துவிட்டன தான் இரு தரப்பும். ஆனால், இப்போதும் அவ்வப்போது பாலஸ்தீனம் மீது தாக்குதலை நடத்தி வருகிறது இஸ்ரேல்.

'இது இஸ்ரேலின் தற்காப்பு தாக்குதல்' என்று இதற்கு ட்ரம்ப் ஆதரவு தெரிவித்து வருகிறார்.

கம்போடியா - தாய்லாந்து, எகிப்து - எத்தியோப்பியா, செர்பியா - கொசாவோ போன்ற பல நாடுகளின் போர்களை ட்ரம்ப் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். எனவே ட்ரம்ப் என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.

ட்ரம்ப் - நெதன்யாகு - காமேனி
ட்ரம்ப் - நெதன்யாகு - காமேனி
இந்தப் போர் வரிசையில், ஈரானை விட்டுவிட முடியாது.

'முன்னெச்சரிக்கை தாக்குதல்' என ஈரானின் அணு ஆயுதங்களை அழிக்க கிளம்பியது இஸ்ரேல். இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரானின் அணு ஆயுதக் கிடங்குகளின் மீது குண்டு வீசியது.

இது அமெரிக்காவிற்கு வெற்றிகர தாக்குதலே.

இப்போது ஈரானில் நடக்கும் உள்நாட்டு பிரச்னையிலும் தலையிட்டு வருகிறார் ட்ரம்ப்.

காசு... பணம்... துட்டு... Money... Money...

அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையைக் குறைக்கப் பார்க்கிறார் ட்ரம்ப். இவர்களின் வருகை அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கிறது என்றும் கருதுகிறார் ட்ரம்ப்.

இதனால், ஹெச்-1பி விசாவிற்கு கடும் நெருக்கடிகளை விதித்திருக்கிறார். ஹெச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலர்களாக உயர்த்தினார்.

இந்த விலை உயர்வு இந்தியா, சீனாவை அதிகம் பாதித்தது. ஏனெனில், 67 சதவிகித இந்தியர்களும், 10 சதவிகித சீனர்களும் தான் இந்த விசாவைப் பெற்று அமெரிக்கா சென்றுவந்தனர்.

அடுத்ததாக, தனிநபர்களுக்கு ட்ரம்ப் கோல்டு கார்டு பெற 1 மில்லியன் டாலர் என அறிவித்தார். இந்தக் கோல்டு கார்டு அமெரிக்காவின் நிதிக்காகவே வழங்கப்பட்டது.

ஹெச்-1பி விசாவிற்கு மட்டுமல்ல... அனைத்து விசாக்களுக்குமே கெடுபிடிகளை அதிகரித்து வருகிறது ட்ரம்ப் அரசு. அவர்களுக்குத் தேவையெல்லாம், அரசிற்கு பிரச்னை ஏற்படுத்ததாத மக்கள்.

Trump - Nicolas Maduro
ட்ரம்ப் - நிக்கோலஸ் மதுரோ
ட்ரம்பின் சமீபத்திய அத்துமீறல் 'நிக்கோலஸ் மதுரோ கைது'.

வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ. அவர் அமெரிக்காவிற்கு போதை மருந்து கடத்தல் செய்கிறார் என்று அவரது இருப்பிடத்திற்கே சென்று, இரவில் அவரது படுக்கையறையிலேயே கைது செய்தது ட்ரம்ப் அரசு.

இப்போது அவர் நியூயார்க் சிறையில் இருக்கிறார்.

ஒரு நாட்டிற்குள் நுழைந்து அந்த நாட்டின் அதிபரைக் கைது செய்துள்ளது பல தரப்பினரிடம் எதிர்ப்புகளைப் பெற்றுள்ளது.

'போதைப்பொருள் கடத்தல்' என்று சொன்னாலும், 'வெனிசுலாவின் எண்ணெய் வளம்' தான் மதுரோவின் கைதிற்கு பின்னணியில் உள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

அதுபோலவே, மதுரோவின் கைதிற்குப் பிறகு, வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை முழுதாக ஃபோக்கஸ் செய்து வருகிறார் ட்ரம்ப்.

ட்ரம்பின் லேட்டஸ்ட் குறி, 'கிரீன்லேண்ட்'.

டென்மார்க்கின் கீழ் உள்ளது கிரீன்லேண்ட். பாதுகாப்புக் காரணங்களுக்காக வேண்டும் என்று, அதை வாங்கவோ, அபகரிக்கவோ திட்டமிடுகிறார் ட்ரம்ப்.

இதை ஒத்துக்கொள்ளாத நேட்டோ, அமெரிக்க நாடுகளுக்கு தற்போது 10 சதவிகித வரியை விதித்துள்ளார் ட்ரம்ப்.

மேலே, கூறியிருப்பவை எல்லாமே, ஒரு சில தான். ட்ரம்ப் செய்த சம்பவங்களோ நிறைய நிறைய. அதில் முக்கியமானவை மட்டும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால், இவை எல்லாமே ஏதோ ஒரு விதத்தில், 'Make America Great Again' என்ற ட்ரம்பின் நோக்கத்துக்காகத்தான்!

ஓராண்டிற்கே இந்த நிலை என்றால், இன்னும் மூன்று ஆண்டுகள் எப்படி இருக்கப் போகிறதோ?

TVK Vijay: ``கிளி ஜோசியம்போல வதந்திகளைப் பரப்புகிறார்கள்" - சி.டி.ஆர்.நிர்மல் குமார்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 போ்பரிதாபமாக பலியானார்கள். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சி.பி.ஐ விசாரித்த... மேலும் பார்க்க

மோடியின் தமிழக வருகை; மேடையேறப் போகும் கட்சிகள் எவை? - என்.டி.ஏ கூட்டணிக்கு அழுத்தமா?

ஜனவரி 23 ஆம் தேதியன்று பிரதமர் மோடி சென்னை வருகிறார். அப்போது நடக்கும் பிரசாரக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அத்தனை பேரையும் மேடை ஏற்ற வேண்டும் என்பது பாஜக-வின் திட்டமாக இருக்கிறது. அதிமுக ... மேலும் பார்க்க

குடிநீர் vs பல்லுயிர்: `மாமல்லன் நீர் தேக்கத்தின் இரு முகங்கள்'- உப்பங்கழியைப் பலி கொடுக்கிறதா அரசு?

செங்கல்பட்டு மாவட்டம், சென்னை அடுத்த நெம்மேலியில் நீர்வளத்துறை சார்பில் 342 கோடி ரூபாய் செலவில் புதிதாக மாமல்லன் நீர்த்தேக்கம் அமைகிறது. 4,375 ஏக்கர் பரப்பளவில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேமிக்கும் வக... மேலும் பார்க்க

திருப்பூர்: கர்நாடகக் கொடியை அகற்றச் சொல்லி வற்புறுத்தல்; கண்டனம் தெரிவித்த சீமான்!

தமிழ்நாட்டில் திருப்பூர் அருகே சென்று கொண்டிருந்த கர்நாடக வாகனத்தை மறித்து, அதில் பொருத்தப்பட்டிருந்த கர்நாடக மாநிலக் கொடியை அகற்றச் சொல்லி, அதில் பயணித்தவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் தாக்கியிருக்கி... மேலும் பார்க்க

கவுன்சிலர்கள் கட்சி தாவும் அபாயம்; ஹோட்டலில் வைத்து பாதுகாக்கும் ஷிண்டே; என்ன நடக்கிறது மும்பையில்?

மும்பை மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க 89 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியைப் பிடிக்க 114 கவுன்சிலர்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது.பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சியா... மேலும் பார்க்க

`குடும்பத்தை நாசமாக்கியவர்' - பா.ஜ.க எம்.எல்.ஏ-வான மனைவியை விவாகரத்து செய்கிறாரா முலாயம் சிங் மகன்?

சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் இப்போது கட்சிக்குத் தலைமை ஏற்றுள்ளார். மற்றொரு மகனான பிரதீக் யாதவ் அரசியலில் ஈடுபடவில்லை. அவர் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். முலாயம் ... மேலும் பார்க்க