``ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து அவருக்கு பொருத்தமானதல்ல" - தஸ்லிமா நஸ்ரீன்
தூத்துக்குடி: சொத்தைப் பிரித்து தர மறுத்த தாய்; கொன்று உடலை கிணற்றில் வீசிய மகன் - நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள மிட்டாவடமலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசிங்கம். இவரின் மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிய நிலையில், அதே கிராமத்தில் தனியாக வசித்துக்கொண்டு விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவர், கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மூதாட்டி பேச்சியம்மாளை அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் தேடிவந்தனர்.

இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி அதே கிராமத்தின் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பேச்சியம்மாளின் கை மற்றும் கால்களில் துணிகளால் கட்டப்பட்டும், உடலில் கல் கட்டப்பட்டவாறும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் காடல்குடி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததின்பேரில், விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்களால் பேச்சியம்மாளின் உடல் மீட்கப்பட்டது.
நகைக்காக மூதாட்டி பேச்சியம்மாள் கொலை செய்யப்பட்டரா அல்லது அவரின் கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதே நேரத்தில், இச்சம்பவம் தொடர்பாக, பேச்சியம்மாளின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், மூதாட்டியின் மூத்த மகனான சக்திவேல், முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில், தனது தாயை கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், “ குடும்ப சொத்தை பிரித்து தரும்படி தாய் பேச்சியம்மாளிடம் அடிக்கடி கேட்டு வந்தேன். இப்போது தனியாக பிரித்து கொடுக்க முடியாது. 6 பேரையும் மொத்தமாக வைத்துதான் பிரித்து தருவேன் எனக் கூறினார். எனக்கு கடன் பிரச்னை உள்ளது அதனால் என்னுடைய பங்கினை பிரித்துத் தருமாறு தொடர்ந்து கேட்டு வந்தேன். ஆனால், அவர் சம்மதிக்கவில்லை.
இதனால் ஆத்திரத்தில் ஆடுமேய்க்கும் எனது நண்பரான உச்சிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவருடன் மது அருந்தி விட்டு, கடந்த 3-ம் தேதி தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தாயிடம், மீண்டும் சொத்தில் பங்கினை பிரித்து தரும்படி கேட்டேன். ஆனால், வழக்கம்போல சொத்தை இப்போது தன்னால் பிரித்து கொடுக்க முடியாது என்று கூறினார்.

இதனால், ஆத்திரத்தில் வெயிலுக்காக தலையில் கட்டியிருந்த துண்டை பிடுங்கி கழுத்தில் இறுக்கி கொலை செய்தேன். பின்னர், நண்பர் முருகனின் உதவியுடன் அருகில் உள்ள கிணற்றில் கை மற்றும் கால்களில் துணிகளால் கட்டி , உடலில் கல்லை கட்டி போட்டுவிட்டோம். பின்னர் எனது உறவினர்களுடன் தாயை தேடுவது போல தேடினேன்" எனக் கூறி அதிரவைத்திருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.















