உடல் எடையைக் குறைக்க பரிந்துரையின்றி நாட்டு மருந்து; 'யூடியூப்' வீடியோவால் மாணவி...
ராமநாதபுரம்: காதலனைப் பிரிய முடியாத காதலி தற்கொலை; துக்கம் தாங்காமல் காதலனும் உயிர் துறந்த சோகம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகலா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநரான பாண்டி என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதலை சசிகலாவின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சசிகலாவை அவரது உறவினரான முருகனுக்கு சசிகலாவின் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் பாண்டியுடன் சசிகலா வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார். இது குறித்து சசிகலாவின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதையடுத்து பாண்டியுடன் வசித்து வந்த சசிகலாவை மீட்ட போலீஸார் சசிகலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரது தந்தையுடன் அனுப்பி வைத்தனர்.
இதன் பின்னரும் பாண்டியுடன் சேர்ந்து வாழ முடியாத சோகத்தில் மனமுடைந்து இருந்து வந்துள்ளார் சசிகலா. இதனால் கடந்த சனிக்கிழமை சசிகலா தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உச்சிப்புளி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே கிருஷ்ணகிரிக்கு கார் ஓட்டிச் சென்றிருந்த பாண்டி, சசிகலா தற்கொலை செய்து கொண்ட செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்தச் சோகத்தில் இருந்து மீள முடியாத பாண்டி கிருஷ்ணகிரியிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குடும்பத்தினரின் எதிர்ப்பினால் நிறைவேறாமல் போன காதலால் இரு உயிர்கள் பலியான சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












