"ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்தப்போ அதை நினைச்சு விலகியிருந்தால்..." - தேசிய விருது ப...
Doctor Vikatan: 79 வயதில் ஸ்டென்ட்... படி ஏறினால் மூச்சு வாங்குதல்... என்னதான்தீர்வு?
Doctor Vikatan: எனக்கு வயது 79. ஸ்டெனட் வைத்துள்ளேன். வயிறு நிரம்பி இருக்கும்போது நடந்தாலோ, ஒரே ஒரு படிக்கட்டு ஏறினாலோகூட மூச்சு வாங்குகிறது. மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். இந்தப் பிரச்னை எதனால் ஏற்படுகிறது... என்ன செய்யலாம்?
-pradeap, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர் ரெஃபாய் ஷௌகத் அலி.

நீங்கள் முதல்கட்டமாக, அடிப்படை இசிஜி (ECG) மற்றும் எக்கோ கார்டியோகிராம் (Echocardiogram) பரிசோதனைகளைச் செய்துபார்க்க வேண்டும். எக்கோ கார்டியோகிராம் பரிசோதனையானது, உங்களுடைய இதயத்தின் ரத்தத்தை பம்ப் செய்யும் திறன் (Heart pumping capacity), இதயம் செயல்படும் விதம் மற்றும் இதயத்தில் உள்ள வால்வுகள் (valves) ஏதேனும் பாதிப்படைந்துள்ளனவா என்பதைப் பற்றி நமக்குக் காட்டும்.
வயதானவர்களுக்குக் கட்டுப்பாடற்ற ரத்த அழுத்தம் இருக்கும்போது, 'பிரிசர்வ்டு இஜெக்ஷன் ஃபிராக்ஷன் கொண்ட இதயச் செயலிழப்பு' (Heart failure with preserved ejection fraction) ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில், இதயத் தசைகள் சாதாரணமாக ரத்தத்தை பம்ப் செய்யும். ஆனால், இதயத்தின் தளர்வுத்திறன் (relaxation capacity) குறைவாக இருக்கும். இதன் காரணமாக, அவர்கள் உடல் உழைப்பில் ஈடுபடும்போது மூச்சுத்திணறல் ஏற்படலாம். உங்களுக்கு ஏற்கெனவே ஸ்டென்ட் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், இசிஜியிலோ (ECG) அல்லது ட்ரெட்மில் (Treadmill) பரிசோதனையிலோ ஏதேனும் மாற்றங்கள் உள்ளனவா என்பதைப் பார்க்க வேண்டும்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால், இதயத்தில் புதிய அடைப்புகள் ஏற்பட்டுள்ளனவா அல்லது ஏற்கெனவே வைக்கப்பட்ட ஸ்டென்ட்டின் உள்ளேயே ஏதேனும் அடைப்புகள் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க ஆஞ்ஜியோகிராம் (Angiogram) பரிசோதனை செய்வதைப் பரிசீலிக்கலாம். வால்வு சம்பந்தப்பட்ட இதய நோய் (Valvular heart disease) பாதிப்பும் இருக்கலாம். வயதானவர்களுக்கு வால்வுகள் சுருங்குவதற்கும் (narrowing of the valves), வால்வுகளில் கசிவு ஏற்படுவதற்கும் (leakage of the valves) அதிக வாய்ப்புகள் உள்ளன. எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை மூலம் வால்வு தொடர்பான பிரச்னைகளை நாம் கண்டறிய முடியும்.

மேலும், NT-proBNP எனப்படும் ரத்தப் பரிசோதனை, இதயத்தின் ரத்தத்தை பம்ப் செய்யும் திறன் மற்றும் இதயத்தின் தளர்வுத் திறன் தொடர்பான பிரச்னைகளைப் பற்றிய தெளிவை நமக்குக் கொடுக்கும். அடுத்தகட்டத்திற்குச் செல்வதற்கு முன், இந்த அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து பாருங்கள். ரத்த நாளங்களில் புதிய அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டால், உங்களுருக்கு புதிய ஸ்டென்ட் வைக்க வேண்டியிருக்கும். ஒருவேளை 'பிரிசர்வ்டு இஜெக்ஷன் ஃபிராக்ஷன் கொண்ட இதய செயலிழப்பு' இருந்தால், உங்களுடைய அறிகுறிகளை மேம்படுத்தும் வகையில் மருந்துகளின் அளவை முறையாக மாற்றி அமைப்போம்.
வால்வு தொடர்பான பிரச்னைகள் இருந்தால், இந்த வயதினருக்கு அவற்றைச் சரிசெய்ய டிரான்ஸ்கதீட்டர் வால்வு தெரபி (Transcatheter valve therapy) சிகிச்சை முறையைப் பரிசீலிக்க வேண்டும். இந்தச் சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் நன்றாகக் குணமடைவார்கள். எனவே, உணவு சாப்பிட்ட பிறகும், நடக்கும் போதும் மூச்சுத்திணறல் ஏற்படும் உங்களுக்கு, இந்த அனைத்து சாத்தியக்கூறுகளையும் நாம் பரிசீலிக்க வேண்டும். இதயநோய் மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.






















