"ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்தப்போ அதை நினைச்சு விலகியிருந்தால்..." - தேசிய விருது ப...
72nd National Awards: 'பாஜக பிரசார படமாக இருந்தால் தேசிய விருது வழங்கப்படுமா?' - வலுக்கும் கண்டனம்!
72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வருடமும் பாஜகவுக்கு ஆதரவான அரசியல் பேசும் படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு இயக்குநர் ஆதித்யா சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கௌதம், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்த 'ஆர்டிக்கிள் 370' படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
இப்படம் வெளியான சமயத்தில் பாஜகவின் அரசியலுக்கு ஆதரவளிக்கும் படம் என விமர்சிக்கப்பட்டிருந்தது.

மேலும், ''பாஜக அரசின் கொள்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் படங்களுக்குத்தான் தேசிய விருதுகள் கொடுக்கப்படுமா?'' என்கிற கேள்விதான் இப்போது சமூக வலைதளப் பக்கங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
கடந்த சில வருடங்களாகவே பாஜக பிரசார படங்கள் என விமர்சிக்கப்பட்ட பாலிவுட் படங்களுக்குத் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தப் பட்டியலைப் பார்ப்போம்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் (The Kashmir Files - 69ஆவது தேசியத் திரைப்பட விருதுகள்)
இந்தப் படம் தேசிய ஒருமைப்பாட்டைப் பேசும் சிறந்த திரைப்படம் - நர்கிஸ் தத் விருதைப் பெற்றது. அத்தோடு இப்படத்தில் நடித்திருந்த நடிகை பல்லவி ஜோஷிக்குச் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.
1990களில் காஷ்மீரில் வாழ்ந்த பண்டிட்டுகள் துயரத்தை எதிர்கொண்டதாக இப்படத்தின் கதையை இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி அமைத்திருந்தார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகவும் கடுமையான விமர்சனங்களையும் இத்திரைப்படம் எதிர்கொண்டது.

தி கேரளா ஸ்டோரி (The Kerala Story - 71ஆவது தேசியத் திரைப்பட விருதுகள்)
இந்தப் படத்திற்குச் சிறந்த இயக்குநருக்கான விருது மற்றும் சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.
கேரளாவைச் சேர்ந்த இந்துப் பெண்களை இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்து, அவர்களை நாடுகடத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதுபோல இப்படத்தில் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
"உண்மைச் சம்பவம் என்கிற பதாகையைப் படத்தில் போட்டுக்கொண்டு, எவ்வித ஆதாரமும் இல்லாமல் இப்படத்தில் இப்படியாகக் கதாபாத்திரங்களைப் படக்குழு சித்தரித்திருக்கிறது" எனவும் இப்படம் விமர்சிக்கப்பட்டது.
ஆர்டிக்கிள் 370 (Article 370 - 72ஆவது தேசியத் திரைப்பட விருதுகள்)
இந்தப் படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இப்படத்திற்குச் சிறந்த நடிகை (யாமி கௌதம்), சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த பாடல்களுக்கான இசையமைப்பு என மூன்று பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை (Article 370) மத்திய அரசு ரத்து செய்ததைப் பற்றி இப்படத்தின் கதையை அமைத்திருந்தார்கள். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மோடி அரசின் மிகவும் புத்திசாலித்தனமான, வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்ற ஒற்றைப் பார்வையில் மட்டுமே படம் நகர்கிறது என இப்படம் விமர்சிக்கப்பட்டது. இப்படியான ஒரு திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த மூன்று திரைப்படங்களுமே வெளியான காலகட்டத்தில் பாஜகவிற்கான ஆதரவான அரசியலை முன்னிறுத்தும் படம் என்ற விமர்சனங்களைப் பெற்றன. குறிப்பாக, 'ஆர்டிக்கிள் 370' திரைப்படம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே திட்டமிட்டு வெளியிடப்பட்டது என்றும், அது தேர்தலுக்கான அரசியல் மைலேஜைப் பெறவே பயன்படுத்தப்பட்டது என்றும் நெட்டிசன்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் 'ஆர்டிக்கிள் 370' படத்திற்கான டிக்கெட் விலையும் குறைப்பட்டது. அந்த மாநிலங்களில், மாநிலப் பொழுதுபோக்கு வரி (State Entertainment Tax) விலக்கு போன்ற சலுகைகளும் அளிக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கதாபாத்திரங்களும் இப்படத்தில் வரும். 'இப்படம் பாஜக அரசின் மாபெரும் வரலாற்றுச் சாதனை' என மோடி தொடங்கி அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரும் பாராட்டியிருந்தனர்.
இந்தச் சூழலில், இந்த ஆண்டும் அது போன்ற பிரசார படங்களுக்குத் தேசிய விருதுகள் வழங்கப்பட்டிருப்பதற்குச் சமூக வலைதளங்களில் பலரும் கண்டனத்தையும் விமர்சனத்தையும் பதிவு செய்து வருகிறார்கள்.



















