WhatsApp: புதிய கெடுபிடி; 'இதை' செஞ்சுடுங்க மக்களே! - மத்திய அரசின் அதிரடி
Doctor Vikatan: ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், வாக்கிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகளைச் செய்யலாமா?
Doctor Vikatan: ஆஸ்துமா, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு சற்று கடினமான வேலைகளைச் செய்தாலும் பிரச்னை தீவிரமாகும். இந்நிலையில், ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் வாக்கிங் உள்ளிட்ட மற்ற உடற்பயிற்சிகளைச் செய்வது சரியா, ஜிம் செல்லலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ்.
நீங்கள் உடற்பயிற்சி செய்வதென முடிவெடுத்தால், அதற்கு முன் ஒரு மருத்துவரின் அனுமதியைப் பெறுவது அவசியம். அவர் உங்களின் ஆஸ்துமாவின் தீவிரத்தன்மை எப்படி என்று பார்த்து, அதற்குப் பிறகு அதற்கேற்ப எந்த அளவு தீவிரத்தில் நீங்கள் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானது என்று சொல்வார்.
உண்மையில், உடற்பயிற்சி செய்வது, அதாவது நீங்கள் நடைப்பயிற்சிஅல்லது பிரிஸ்க் வாக்கிங் (Brisk Walking) செய்வது (சாதாரண நடையை விட சற்று வேகமாக நடப்பது) உங்கள் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த நுரையீரல் திறனுக்கும் (Lung Capacity) மிகவும் நல்லது.

ஆனால், அதை ஒரு மருத்துவரிடம் அனுமதி வாங்கிவிட்டுச் செய்வது நல்லது. எனது அனுபவத்தில், இப்படி ஒரு பெண்ணைப் பார்த்திருக்கிறேன். ஆஸ்துமா பாதிப்புள்ள அவர் உடற்பயிற்சி செய்வதற்கு முன், தனது இன்ஹேலரை வைத்து ஒரு பஃப் (Puff) எடுத்துக்கொள்வார். அதை உபயோகித்த பிறகுதான் அவர் உடற்பயிற்சியைத் தொடங்குவார். அவர் உடற்பயிற்சி செய்து முடிக்கும் வரையிலும் நலமாகவே இருப்பார்.
அந்தப் பெண்ணுக்கு இது உதவியது என்பதற்காக எல்லோரும் அப்படியே செய்வது சரியல்ல. மருத்துவரின் வழிகாட்டுதலைப் பெற்ற பிறகுதான் நீங்கள் தொடங்க வேண்டும்.
எப்படி இருந்தாலும், உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், நீங்கள் கடுமையான பயிற்சிகளைச் செய்யத் தேவையில்லை. கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் நுரையீரல் திறனை மேம்படுத்தினால், அது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். உண்மையில், உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லதுதான். ஆனால், எதையும் அவரவர் உடல்நலத்தின் அடிப்படையில் மருத்துவர் பரிந்துரையின் பேரில்தான் செய்ய வேண்டும்.
உங்களுக்கு உடற்பயிற்சி செய்யும்போது அசௌகர்யம் ஏற்பட்டது என்றால், நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு எது வேலை செய்கிறது, எது வேலை செய்யவில்லை, எது ஆஸ்துமாவைத் தூண்டுகிறது (Trigger) என்பதை நீங்கள் கண்டறிந்து, அதற்கேற்ப செய்ய வேண்டும்.

ஜிம் சென்று உடற்பயிற்சி செய்ய உங்கள் மருத்துவர் அனுமதிக்கும் பட்சத்தில் நீங்கள் முக்கியமான சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.
அதாவது, அந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும். காற்றோட்டமாக இருக்க வேண்டும். தூசு போன்ற ஒவ்வாமையை ஏற்படுத்தும் இடமாக இருக்கக்கூடாது.
மிக மெதுவாகவே உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும். மருத்துவர் அனுமதித்தால், உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு இன்ஹேலர் பயன்படுத்திவிட்டும் தொடங்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


















