சாதாரணமாக தொடங்கிய ஒரு நாள் வேலை… முடிவில் கிடைத்தது ₹98 கோடி புதையல் - நடந்தது ...
Doctor Vikatan: ஒருமணி நேரத்துக்கொருமுறை சிறுநீர்... உடனே வெளியேறாத சிறுநீர், தீர்வென்ன?
Doctor Vikatan: எனக்கு வயது 26. எனக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. குறிப்பாக, பயணம் செய்யும்போது இந்த உணர்வு அதிகமாக இருக்கிறது. ஆனால், தற்போது சில நாள்களாக வீட்டில் இருக்கும்போதும் இதே பிரச்னை இருக்கிறது. சிறுநீர் கழித்த பிறகும் முழுமையாகக் கழிக்கவில்லை போலவும், மீண்டும் சிறுநீர் வருவது போலவும் உணர்கிறேன். பொதுவாக ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல் இல்லை. சிறுநீர் அளவு சாதாரணமாக உள்ளது. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வை என்னால் கட்டுப்படுத்த முடியும், ஆனால், அந்த உணர்வு தொடர்ந்து இருப்பது மிகவும் எரிச்சலாக இருக்கிறது. மேலும், சிறுநீர் கழிக்கச் செல்லும்போது சிறுநீர் உடனடியாக வராமல் சிறிது நேரம் கழித்துதான் ஆரம்பமாகிறது. இது என்ன பிரச்னை, இதற்கான தீர்வு என்ன?
-V SETHURAMAN, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த யூரோகைனகாலஜிஸ்ட் மீரா ராகவன்

அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீர்ப்பை முழுமையாக காலியாகவில்லை என்ற தொடர்ச்சியான உணர்வு பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். சிறுநீர்ப்பை அதிக ஆக்டிவ்வாக (Overactive bladder) இருப்பது இதில் மிக முக்கியமான காரணமாக இருக்கலாம்.
இதில் சிறுநீர்ப்பை முழுமையாக நிரம்பாதபோதும் கூட, சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற வலுவான எண்ணம் ஏற்படும். சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்று (UTI) அல்லது சிறுநீர்ப்பை எரிச்சலும் கூட அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு வழிவகுக்கும். ஆனால், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வலி அல்லது சிறுநீரின் நிறத்தில் மாற்றம் இல்லாதபோது இவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
சிறுநீர் வெளியேறுவதில் தாமதம் மற்றும் சிறுநீர்ப்பை முழுமையாக காலியாகவில்லை என்ற உணர்வு ஆகியவை சிறுநீரை வெளியேற்றுவதில் உள்ள சிரமத்தைக் குறிக்கலாம். இது சில நேரங்களில் இடுப்புப் பகுதி தசைச் செயலிழப்பு (pelvic-floor dysfunction) அல்லது சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் அடைப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம். அதிக அளவில் திரவங்கள் அல்லது கஃபைன் (caffeine) பானங்களை உட்கொள்வது, மலச்சிக்கல், நீரிழிவு நோய் (Diabetes) மற்றும் சில மருந்துகள் போன்ற பிற காரணிகளும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு வழிவகுக்கும்.
இந்த அறிகுறிகள் வீட்டிலும் ஏற்படுவதாகச் சொல்கிறீர்கள். தவிர, அது உங்கள் அன்றாட வேலைகளை பாதிப்பதால், இவற்றை அலட்சியப்படுத்தாமல் இருப்பது நல்லது. இதற்கான மூலகாரணத்தைக் கண்டறிய சிறுநீரக மருத்துவரை (Urologist) அணுகுவது சிறந்தது. பரிசோதனையின் முடிவைப் பொறுத்து, மருத்துவர் சிறுநீர்ப் பரிசோதனை, ரத்தச் சர்க்கரை பரிசோதனை, சிறுநீர் கழித்த பின் எஞ்சியுள்ள சிறுநீரின் அளவைக் கண்டறிய அல்ட்ராசவுண்ட் (Ultrasound) ஸ்கேன் மற்றும் தேவைப்பட்டால் 'யூரோஃப்ளோமெட்ரி' (Uroflowmetry) பரிசோதனைகளையும் பரிந்துரைக்கலாம். அதைப் பொறுத்து உங்களுக்கான சிகிச்சைகளை மருத்துவர் முடிவு செய்வார்.
டாக்டர் மீரா ராகவன்:
சென்னை அப்போலோ மருத்துவமனையில் யூரோகைனகாலஜிஸ்ட்டாகப் பணிபுரிகிறார். இத்துறையில் 19 ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



















