சென்னை: `தனிமையில் இருக்கலாம்' - ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆசை காட்டி பணம் பறித்...
Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள், பருமனானவர்கள் மாம்பழம் சாப்பிடவே கூடாதா?
Doctor Vikatan: என் வயது 65. சர்க்கரை நோய் இருக்கிறது. உடல் பருமனும் உள்ளது. இந்நிலையில் மாம்பழ சீசனில் மாம்பழம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டால் என் குடும்பத்தார் மறுக்கிறார்கள். எடை கூடும், சர்க்கரை நோய் தீவிரமாகும் என்று தடுக்கிறார்கள். சர்க்கரை நோயாளிகளும், உடல் எடை அதிகமுள்ளோரும் மாம்பழம் சாப்பிடவே கூடாதா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன்.

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடுமோ, ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்துவிடுமோ என்ற கவலை உங்களைப் போல பலருக்கும் இருக்கும் இயல்பான சந்தேகம்தான். மாம்பழத்தைச் சரியான முறையில் சாப்பிட்டால், ரத்தச் சர்க்கரை அளவை (blood sugar) கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம், எடையும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
அளவைக் கட்டுப்படுத்துவதுதான் இதில் முக்கியம். அதாவது மாம்பழத்தின் அளவு 150 கிராமைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நறுக்கிய மாம்பழமாக இருந்தால் ஒரு கப் அளவைத் தாண்ட வேண்டாம். குளுக்கோஸ் உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்க, மாம்பழத்துடன் ஒரு டீஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் (virgin coconut oil) அல்லது நெய் சேர்த்துச் சாப்பிடலாம்.
மாம்பழத்தை ஜூஸாகக் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். எந்தப் பழத்தையும் ஜூஸாகக் குடிப்பதைவிட, முழுப் பழமாகச் சாப்பிடுவதே சிறந்தது. பழத்தில்தான் நார்ச்சத்து (fiber) நிறைந்துள்ளது. மாம்பழம் சாப்பிட்ட பிறகு, உங்களுக்கு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரைக் கலந்து குடிக்கலாம். உங்களுக்கு அசிடிட்டி, வயிற்றுப் புண் (ulcers) இருந்தாலோ அல்லது மருத்துவர் வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தாலோ இதைத் தவிர்க்கவும்.

சாப்பிட்ட பிறகு 5 முதல் 10 நிமிடங்கள் நடப்பது, உங்கள் உடல், குளுக்கோஸைத் திறம்பட பயன்படுத்த உதவும். மாம்பழத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் நட்ஸ் அல்லது 2 முதல் 3 சிறிய துண்டுகள் தேங்காயைப் பச்சையாகச் சேர்த்துச் சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு நல்ல கொழுப்புகள் கிடைப்பதுடன் வயிறும் நிறைந்திருக்கும்.
மாம்பழம் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், சில பிரச்னைகள் இருப்பவர்கள் அதை எடுத்துக்கொள்வதில் கூடுதல் கவனம் தேவை.
சரியாகக் கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் (Diabetes) அல்லது தொடர்ந்து ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் மாம்பழத்தைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பகால நீரிழிவு நோய் (Gestational diabetes) உள்ளவர்கள் மருத்துவரின் அனுமதிபெற்றே அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொட்டாசியம் அளவைக் குறைக்க அறிவுறுத்தப்பட்டவர்கள், நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic kidney disease) உள்ளவர்கள், மாம்பழம், அதன் தோல் அல்லது அதன் பால் ஆகியவற்றால் ஒவ்வாமை (Allergy) ஏற்பட வாய்ப்புள்ளவர்கள், கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் ஆகியோரும் கவனமாக இருக்க வேண்டும்.

மாம்பழம் மட்டுமே உடல் எடை அதிகரிப்பதற்குக் காரணம் அல்ல. எடை அதிகரிக்கவும் ரத்தச் சர்க்கரை அதிகரிக்கவும் உங்களது ஒட்டுமொத்த உணவுமுறை, சாப்பிடும் அளவு, உடற்பயிற்சி மற்றும் உங்களது வாழ்க்கைமுறை ஆகியவையே மிக முக்கியக் காரணங்கள் என்பதை உணர்ந்து அதற்கேற்ப வாழ்வியலை, உணவியலை முறைப்படுத்திக் கொள்ளவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



















