"ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள், மார்க்கெட்டிங்" - பாலிவுட் சினிமா குறித்து பி...
”ED, IT, CBI மூலம் மிரட்டல், உருட்டலில் உருவான பிளாக்மெயில் கூட்டணிதான் பாஜக கூட்டணி” - ஸ்டாலின்
தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு' நடைபெற்றது. இதற்காக 15 மாவட்டங்களைச் சேர்ந்த 46 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் மூலம் மகளிர் அழைத்து வரப்பட்டனர்.
இதற்காக அந்தச் சாலையின் போக்குவரத்து மாற்றப்பட்டது. மாநாடு நடைபெற்ற இடத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவு வரை போக்குவரத்து நெரிசலால் பேருந்துகள் அணி வகுத்து நின்றன.

மாநாட்டுத் திடலில் போடப்பட்ட நாற்காலிகளில் இரண்டு பைகள் வைத்திருந்தனர். ஒரு பையில் ஸ்நாக்ஸ் உள்ளிட்டவையும், மற்றொரு பையில் ஹாட்பாக்ஸ் அதில் சிக்கன் பிரியாணியும் இருந்தது. முன்கூட்டியே வந்த பெண்கள் பக்கத்து இருக்கையில் இருந்த ஹாட்பாக்ஸையும் சேர்த்து எடுத்துக் கொண்டனர். இதனால் பின்னால் வந்த பெண்களுக்கு ஹாட்பாக்ஸ் கிடைக்கவில்லை.
பின்பகுதியில் தனியாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. அதை வாங்குவதற்கு பெண்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பல பெண்கள் பிரியாணி கிடைக்காமல் திரும்பினர். மாநாட்டுத் திடலுக்குள் பிரசார வேனில் நின்று கையசைத்தபடி என்ட்ரி கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.
மேடையேறிய ஸ்டாலினுக்கு அமைச்சர் நேரு உள்ளிட்டவர்கள் வீரவாள் பரிசாகக் கொடுத்தனர். உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டவர்கள் பேசிய பிறகு ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ''ராணுவப் படை போல மிடுக்காக திரண்டு இருக்கும் என் அன்பு சகோதரிகளுக்கு என்னுடைய வணக்கம். வீட்டை மட்டுமல்ல கழகத்தை நாங்கள் காப்போம் என்கிற உணர்வோடு கருப்பு சிவப்பு கடல் போல திரண்டு வந்துள்ளீர்கள். நம் தமிழ்நாட்டையும் ஏன் இந்திய நாட்டையும் காக்கவும் நாங்கள் தயார். யாருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்கிற துணிச்சலோடு திரண்டுள்ளீர்கள்.
தஞ்சை மண் கம்பீரமான மண், மன்னர்களுக்கெல்லாம் மன்னரான ராஜராஜ சோழன் ஆட்சி செய்த சோழமண். இந்த மண் கம்பீரமாக நிற்கக்கூடிய பெரியகோயிலும், காலங்கள் கடந்தும் உறுதியாக இருக்கக்கூடிய கல்லணையும் நிலைத்திருக்கக்கூடிய மண்.
கனிமொழியிடம் பொறுப்பு ஒப்படைத்தால் அதை அமைதியாகவும் சிறப்பாகவும் செய்து காட்டுவார் என்பதற்கு இந்த மாநாடு ஒரு எடுத்துக்காட்டு. கழகப் பணியில்தான் இந்த அமைதி. உரிமைக் குரல் எழுப்ப வேண்டிய நேரத்தில் கர்ஜனை மொழியாக மாறிப் போராடுவார். அதுதான் கனிமொழி. திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கம் என்ன? பெண் விடுதலை.
சாதிய ஏற்றத்தாழ்வு இல்லை என்பதையும், ஆண் உயர்ந்தவர் பெண் தாழ்ந்தவர் என்று நடத்துவது தவறானது என்பதை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் நம்முடைய திராவிட இயக்கம். சூத்திரர்களைப் போல பெண்களும் இழிவானவர்கள் என ஒடுக்கப்பட்ட காலத்தில் இந்த இருவருடைய விடுதலைக்காகவும் வாழ்நாளெல்லாம் உழைத்தார் பெரியார்.
திராவிட இயக்கத்துடைய தாய் அமைப்பான நீதிக்கட்சியின் ஆட்சியில்தான் பெண்களுக்கு முதன்முதலாக வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்த வழித்தடத்தில் வந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதை திருமணச் சட்டத்தை நிறைவேற்றினார். பெண்களுக்குச் சமபங்கு உண்டு என அறிவித்தார் கலைஞர்.
இந்திய மாநிலங்களிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் எங்கள் தமிழ்நாடுதான். இதை அடித்துச் சொல்கிறேன். இங்குதான் அதிகமான பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். அண்மையில், இந்தியாவிலேயே பெண்களுக்கான பாதுகாப்பு, ஆரோக்கியம், கல்வி, முதலான சமூகக் காரணிகளில் சிறந்து விளங்குகிற நகரங்களைப் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளனர். 125 நகரங்கள் கொண்ட அந்தப் பட்டியலில் முதல் 25 நகரங்களில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர், ஈரோடு என ஏழு நகரங்கள் இருந்தன பிரதமருக்குத் தெரியுமா?

பிரதமர் அவர்களே மணிப்பூரை மறந்து விட்டீர்களா? 2023ம் ஆண்டு மே மாதம் எரியத் தொடங்கிய மணிப்பூரில் இதுவரை அரசுக் கணக்குப்படி பார்த்தால் 260 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் உண்மையான எண்ணிக்கை இன்னும் ஒரு மடங்கு அதிகமாக இருக்கும் 3 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். ஒரு லட்சம் பேருக்கும் மேல் மாநிலத்தை விட்டு இடம்பெயர்ந்து விட்டார்கள்.
மூன்று ஆண்டுகளாக இயல்பு வாழ்க்கை மணிப்பூரில் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் ஒன்றியத்தை ஆள்வது, மணிப்பூரை ஆண்டது பாஜகதான். ஆனால் உங்கள் டபுள் இன்ஜின் ஏன் மணிப்பூர் மக்களைக் காப்பாற்றவில்லை? மணிப்பூர் முதலமைச்சர், அமைச்சர், எம்.எல்.ஏக்கள் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கியிருக்கிறார்கள். மணிப்பூரை ஆண்ட பா.ஜ.க-வால் ஏன் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை? இதுதான் பாஜகவின் லட்சணமா?
மாண்புமிகு பிரதமரே, மணிப்பூரையும் உத்தரப்பிரதேசத்தையும் பாருங்கள், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பாஜக ஆளுகிற 2 மாநிலங்கள் மூலமாகத்தான் போதைப்பொருள் பரவுகிறது என்று ஆதாரங்களுடன் செய்தி வருகிறதே பத்திரிகையை நீங்கள் படிக்கவில்லையா? இதை அனைத்தையும் மறைத்துவிட்டு அமைதியான தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்பாதீர்கள்.
ஏதோ புதிதாக கூட்டணியை உருவாக்கியது போல அவரும் தோள் உயர்த்தி இருக்கிறார். தோற்ற கூட்டணியைப் புதுப்பித்து பில்டப் கொடுத்திருக்கிறார்கள். அந்தக் கூட்டணியில் இருக்கிற அனைவரும் ஈடி, ஐடி, சிபிஐ என ஏதோ ஒரு வகையில் பாஜகவிடம் சிக்கி, அந்த வாஷிங் மெஷின் தங்களை வெளுக்காதா என்கிற நப்பாசையில் கைகட்டி உட்கார்ந்து இருக்கிறார்கள்.
ஏற்கனவே இதே பாஜக - அதிமுக கூட்டணி, 2019 தேர்தலிலும், 2021 தேர்தலிலும் ஒன்றாக நின்று தோற்றுப் போனார்கள். 2024 தேர்தலில் அதிமுக, பாஜக என்கிற வேஸ்ட் லக்கேஜைக் கழற்றிவிட்டு, 'அப்புறமா சேர்த்துக்கலாம்' என்று மறைமுகக் கூட்டணியா வந்தார்கள். ஆனால் எந்தக் கெட்டப்பில் வந்தாலும் உங்களுக்கு கெட் அவுட்தான் என்று தமிழக மக்கள் திரும்பத் திரும்பச் சொல்லிட்டாங்க.
இப்போ திரும்பவும் பழையபடியே உடைந்து போனதை எல்லாம் ஒட்டி எடுத்துக்கொண்டு, புதுசா என்டிஏ கூட்டணி என்று வந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் தெரியும் பாஜக, அதிமுக கூட்டணி கட்டாயத்தால் உருவாகி இருக்கிற கூட்டணி என்று.
மிரட்டலால், உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி. உண்மையான அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கு எதிராக அமித்ஷாவால் திணிக்கப்பட்ட கூட்டணி. முழுக்க முழுக்க தனது சுயலாபத்திற்காக வழக்கில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள பழனிசாமி உருவாக்கிய சுயநல கூட்டணி.
டெல்லிக்கு ரகசியமாக பல கார்களில் மாறி மாறி சென்று, அங்கே வழக்குகளைக் காட்டி மிரட்டியதும், ஏசி காரில் இருந்தும் ஒருவருக்கு முகம் எல்லாம் வியர்த்து விறுவிறுக்க, எப்படி கர்சிஃப் வைத்து துடைத்துக்கொண்டு வந்தார் என்பதை நாடே பார்த்தது.

பாஜக என்ன நினைக்கிறது, திரும்பவும் தனது கண்ணசைவில் தலையாட்டுகிற எடுபிடிகளை வைத்துக்கொண்டு டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆளலாம் என நினைக்கிறது. உங்களுக்குத் தக்க பதிலடியை தமிழ்நாடு தரும். இப்போது வெளிப்படையாக பாஜக அரசு என்றே சொல்லிக் கொண்டு வந்தால் உங்களை எங்களுடைய எல்லைக்குள்ளேயே அனுமதிக்க மாட்டோம்.
நடக்க இருக்கும் தேர்தலில் என்டிஏ வெர்சஸ் மதச்சார்பற்ற கூட்டணி கிடையாது. என்டிஏ வெர்சஸ் தமிழ்நாடு என்பதை மறந்து விடாதீர்கள். தமிழ்நாடு மக்களுக்காக உண்மையாக உழைக்கின்ற, நாடே திரும்பிப் பார்க்கக் கூடிய செயல் திட்டங்களைச் செயல்படுத்துகிற, தலை நிமிர்ந்து, தன்மானத்தோடு போராடுவது திமுகதான்.
எனவே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வெற்றியை வழங்க மக்கள் தயாராகி விட்டார்கள். நான் என்னை விட அதிகமாக நம்புவது தமிழ்நாடு மக்களைத்தான். எனவே என் மீது நம்பிக்கை வைத்திருக்கிற மக்களை, நாம் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
என்றைக்கும் எப்போதும் மக்களுடனேயே இருக்க வேண்டும். இதுதான் உங்களுடைய சகோதரராக இருக்கக்கூடிய என்னுடைய வேண்டுகோள். எனவே அதற்கான பரப்புரையில் ஈடுபட வெல்லும் தமிழ்ப் பெண்களே புறப்படுங்கள். மீண்டும் இந்த ஸ்டாலின் ஆட்சி, கழக ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி அமைய ஓய்வை மறந்து உழையுங்கள் உழையுங்கள்" என்றார்.














