செய்திகள் :

Exclusive: "மீண்டும் ஆம்னி பஸ்கள் வசூல் வேட்டையா?" - பயணிகளின் புகாரும் அமைச்சரின் விளக்கமும்!

post image

பகல் கொள்ளை..

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், "தீபாவளி பண்டிகையின் போது ஆம்னி பேருந்துகளைக் கட்டண உயர்வின்றி இயக்குவதாக உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளனர்" எனத் தெரிவித்திருந்தார். ஆனால் வழக்கம் போலவே ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. சில வழித்தடங்களில் விமான கட்டணம் அளவுக்கு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்ந்திருப்பது பயணிகளை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

`தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகைக்குச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் ரயில், அரசுப் பேருந்து பயணத்தைத்தான் விரும்புவார்கள். இதில், ரயில்களுக்கான முன்பதிவு பல மாதங்களுக்கு முன்பே முடித்து விடுகின்றன. இதனால் அடுத்த இடத்திலிருக்கும் அரசுப் பேருந்துகளைத்தான் அதிகப்படியான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அரசுப் பேருந்துகளில் சென்னையிலிருந்து மட்டும் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது 5,66,212 பயணிகள் சொந்த ஊர்களுக்குப் பயணித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, 'வரும் 28.10.2024 முதல் 30.10.2024 வரை சென்னையிலிருந்து 14,086 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி முடிந்த பிறகு சென்னை திரும்புவதற்கு 2.11.2024 முதல் 4.11.2024 வரை 12,606 பேருந்துகளை இயக்கப்படும்' என, போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. ஆனால் வழக்கம் போலப் பேருந்துகள் பற்றாக்குறை, மெதுவான இயக்கம், குறைவான வசதிகள், மோசமான நேர மேலாண்மை, தரமற்ற உணவு போன்ற பல பிரச்னைகள் தலைவிரித்தாடுகின்றன. இதனால் மக்கள் பலரும் ஆம்னி பேருந்துகளை நோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. இதை சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். வழக்கத்தை விடப் பல மடக்கு கட்டணத்தை உயர்த்தி பகல் கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆம்னி பஸ்

விமான கட்டணம் அளவுக்கு..

இதுகுறித்து நம்மிடம் பேசிய பயணிகள் சிலர், "தீபாவளிக்குச் சொந்த ஊர்களுக்குச் செல்வோரின் வசதிக்காக நடப்பு ஆண்டு 14,086 பேருந்துகளை இயக்குவதாகப் போக்குவரத்துத் துறை சொல்கிறது. இதில் எஸ்.இ.டி.சி எனப்படும் விரைவுப் பேருந்துகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2,200 மட்டுமே. இந்த பேருந்துகளில்தான் ஓரளவுக்கு இருக்கைகள் வசதியாக இருக்கும். பெரும்பாலான வழித்தடங்களில் இந்த பேருந்துகளுக்கான இருக்கைகள் ஒரு வாரத்துக்கு முன்பே முடிந்துவிட்டது. மற்ற பேருந்துகளில் சொகுசான இருக்கைகள், குளிர்சாதன வசதி என எதுவும் இருக்காது. இப்படிப்பட்ட பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிக்க முடியாது. எனவேதான் ஆம்னி பேருந்துகளை நோக்கிச் செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால் அவர்கள் விமான கட்டணம் அளவுக்குக் கட்டணத்தை உயர்த்தி வைத்திருக்கிறார்கள்.

அதாவது சென்னையிலிருந்து மதுரைக்கு அரசின் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் ரூ.480, குளிர்சாதன பேருந்தாக இருந்தால் ரூ.970 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. திருச்சிக்கு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் ரூ.350, குளிர்சாதன பேருந்தில் ரூ.695 வசூல் செய்யப்படுகிறது. கோவைக்கு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் ரூ.535, குளிர்சாதன பேருந்தில் ரூ.1080 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில ஆம்னி பேருந்துகளில் சென்னையிலிருந்து மதுரைக்கு ரூ.4,000, திருச்சிக்கு ரூ.3,300, கோவைக்கு ரூ.3,800 வரை கட்டணமாக நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு ஊருக்கும் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தீபாவளி

இந்த கட்டணத்தில் தனியாகச் செல்வதே சிரமம். குடும்பத்துடன் செல்வதாக இருந்தால் நிலைமை மிகவும் மோசமாக. மூன்று பேர் ஆம்னி பேருந்தில் சொந்த ஊர் சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்ப ரூ.24,000 செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இது எப்படி மாதம் ரூ.30,000 சம்பாதிக்கும் குடும்பத்தில் சாத்தியமாகும். அப்போது கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க அரசு கூடுதலாகச் சொகுசு பேருந்துகளை இயக்க வேண்டும். அதேநேரத்தில் கட்டண கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இதே பிரச்னைதான்..

தொடர்ந்து பேசிய அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், "போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், 'சொகுசாகப் பயணிக்க வேண்டும் எனச் சிலர் கூடுதல் கட்டணத்தில் ஆம்னி பேருந்துகளில் பயணிக்கிறார்கள். எனவே அனைத்து முன்பதிவு செயலிகளையும் அரசு உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது' எனப் பேட்டி கொடுத்திருக்கிறார். ஆம்னி பேருந்துகளுக்கு வழித்தடம் ஒதுக்குவது, இயக்க அனுமதி கொடுப்பதெல்லாம் அரசுதான். பயணிகளும் அரசை நம்பிதான் பயணிக்கிறார்கள். எனவே ஆம்னி பேருந்துகளில் குறைகள் இருக்கும் பட்சத்தில் சரி செய்ய வேண்டியதும் அரசுதான். அப்படிப்பட்ட இடத்திலிருந்து கொண்டு கண்காணிக்க முடியுமா? எனப் பேசுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல், தீபாவளிக்கு இதே பிரச்னைதான் ஏற்படுகிறது.

ராதாகிருஷ்ணன், அன்பழகன்

எனவே நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். அதாவது விதிமுறைகளின்படி தனியார் பேருந்துகளுக்குக் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ய முடியாது. அதேநேரத்தில் நெறிமுறை படுத்தலாம். அதாவது சம்பந்தப்பட்ட பேருந்தில் எவ்வளவு சொகுசு வசதிகள் இருக்கின்றன என்பதைப் பொருத்து அதிகபட்ச கட்டணத்தை நிர்ணயம் செய்யலாம். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 எண்ணுக்குப் புகார் அளிக்கலாம் எனச் சொல்லியிருக்கிறார்கள். அந்த எண்ணுக்கு இரண்டுமுறை முயற்சி செய்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதேநேரத்தில் நடு ரோட்டில் ஏற்படும் பழுது, பொருட்கள் திருட்டு, பாதுகாப்பற்ற உணவகங்கள், அதிவேக இயக்கம், சத்தமான ஒலிபெருக்கி போன்ற பிரச்னைகள் குறித்து புகார் அளிப்பதற்கு எந்த வசதியும் இல்லை. இவற்றையெல்லாம் சரி செய்ய அரசு முன்வர வேண்டும்" என்றார்.

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகனிடம் விளக்கம் கேட்டோம், "ஆம்னி பேருந்துகளுக்கு எனக் கட்டணம் இல்லை. இருந்தபோதும் சங்கத்தின் சார்பில் 2022-ம் ஆண்டு கட்டணத்தை நிர்ணயம் செய்து போக்குவரத்துத் துறைக்குக் கொடுத்தோம். அதிலிருந்து 10% கட்டணத்தைக் குறைத்துக் கொடுத்தார்கள். அதன்படிதான் பேருந்துகளை இயக்கி வருகிறோம். ஆண்டில் 10 முதல் 15 நாள்களுக்குத்தான் இந்த கட்டணத்தை வசூல் செய்கிறோம். இந்த ஆண்டு தீபாவளிக்குப் பெரிதாக முன்பதிவு ஆகவில்லை. தமிழகம் முழுவதும் 3,000 ஆம்னி பேருந்துகள் இருக்கின்றன.

I அன்பழகன்

இதில் சென்னையிலிருந்து 1,000 பேருந்துகள் இயங்குகிறது. தீபாவளி நேரத்தில் 2,000 பேருந்துகளை இயக்குவோம். இதில் 1,000 பேருந்துகளில் 80% அளவுக்கும் 400 பேருந்துகளில் 40% அளவுக்கும்தான் முன்பதிவு நடந்துள்ளது. அதாவது சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் பேருந்துக்கு ரூ.3,500 கட்டணம் நிர்ணயம் செய்து வைத்திருக்கிறோம். அந்த பேருந்தில் சென்னையிலிருந்து திருச்சிக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ரூ.3,500 எனக் காட்டுகிறது. அந்த பிரச்னையை சரி செய்து வருகிறோம். சங்கத்தின் சார்பில் தனிக் குழு அமைத்துக் கண்காணித்து வருகிறோம். எந்த பிரச்சினையும் இல்லை" என்றார்.

கண்டுபிடிப்பது சிரமம்!

இறுதியாகத் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடமே விளக்கம் கேட்டோம், "ரெட்பஸ் முன்பதிவு செயலியில் கட்டணம் அதிகமாக இருப்பதாகப் புகார் வந்திருக்கிறது. அவர்களுக்கு நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திடீரென ஒரு இணையத்தளம் ஆரம்பித்துக் கூடுதல் கட்டணம் வசூலித்தார்கள் என்றால் கண்டுபிடிப்பது சிரமம். அதேநேரத்தில் அனைத்து பேருந்துகளிலும் சோதனை செய்ய முடிவு செய்திருக்கிறோம். அப்போது கூடுதல் கட்டணம் வசூல் செய்திருப்பது, வேகமாக இயக்குவது போன்ற பிரச்னைகள் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசால் ஆம்னி பேருந்துகளுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்ய முடியாது. கிராமங்களில் அரசு பேருந்துகள் போலத் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அமைச்சர் சிவசங்கர்

அவை ஸ்டேஜ் கேரியர் என அழைக்கப்படும். அதற்குத்தான் நாம் கட்டணம் நிர்ணயம் செய்து கொடுத்திருக்கிறோம். ஆம்னி பேருந்துகள் என்பது காண்ட்ராக்ட் கேரியர். இவர்களுக்கும் நாம் டிக்கெட் நிர்ணயம் செய்து கொடுக்கும் பட்சத்தில் ஸ்டேஜ் கேரியர் ஆகிவிடுவார்கள். அது நாம் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது போல் ஆகிவிடும். நாளைக்கு இந்த ரூட்டில் பேருந்துகளை இயக்கி தான் ஆவோம் என்பார்கள். கூடுதல் கட்டணம் தொடர்பாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த புகாரும் இல்லை. தற்போது வந்திருக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போதுமான அளவுக்கு அரசு பேருந்துகளை இயக்கி வருகிறோம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. மக்கள் சிரமம் இல்லாமல் தீபாவளி பண்டிகைக்குச் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறோம்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் தவிர்த்தாரா மு.க.ஸ்டாலின்? | The Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோவில்,* `முதல்வர் அரசு விழாவில் ஒலிக்காத தமிழ்த்தாய் வாழ்த்து; ஆளுநருக்கொன்று உங்களுக்கொன்றா?' - அன்புமணி கேள்வி. * தமிழ்த்தாய் வாழ்த்து: ஆளுநரைக் குறை சொன்ன நீங்கள் பாடாமல் விட்... மேலும் பார்க்க

கொடநாடு: இபிஎஸ்-ஸைத் தொடர்படுத்தி பேசத் தடை; ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, 2017-ல் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவமும், அப்போது பணியிலிருந்த காவலாளி, ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், பங்களா சிசிடிவி ஆபரேட்ட... மேலும் பார்க்க

கைம்பெண் சான்று பெறுவதில் சிக்கல்; கோரிக்கை வைத்த சு.வெங்கடேசன்; தீர்த்து வைத்த தமிழக அரசு

ஆதரவற்ற கைம்பெண் சான்றிதழ் பெறுவதில் பொருத்தமற்ற நிபந்தனைகளை மாற்றம் செய்ய வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியதை ஏற்று புதிய சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட நிர்வாகத்து... மேலும் பார்க்க

Kazhugar: `சட்டமன்றத்தில் சீமான்; நாதக வியூகம்’ முதல் `குமுறும் அண்ணாமலை ஆதரவாளர்கள்’ வரை

தேர்தலுக்குத் தயாராகும் தி.மு.க தலைமை!சுற்றுப்பயணத்தில் முதல்வர், துணை முதல்வர்...‘தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுவரும் மக்கள் நலத் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைகின்றனவா?’ என மாவட்டவாரியா... மேலும் பார்க்க

US Elections 2024: அமெரிக்க நாடாளுமன்றத்தில் முதல் திருநங்கை - வரலாறு படைத்த சாரா மெக்பிரைட்!

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபத் தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் அதிபரும் தொழிலதிபருமான டொனால்ட் ட்ரம்ப் வெற்றி வாகை சூடி இருக்கிறார்அதேபோல இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று, டெலாவேர் மாகாண செனட்டரான 3... மேலும் பார்க்க