ஏன் ஜனவரி 1? `டு' புத்தாண்டை முதலில் வரவேற்கும் நாடு எது? - இது New Year சுவாரஸ்...
Epstein files: அமெரிக்காவையும் மேற்குலகையும் உலுக்கிய எப்ஸ்டீன் விவகாரம் இதுவரை! - முழு விவரம்!
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)
ஜேஃப்ரி எப்ஸ்டின்
அமெரிக்க நிதித்துறை கோடீஸ்வரர், ஜேஃப்ரி எப்ஸ்டின் விவகாரம் குறித்த பல ஆயிரக்கணக்கான ஆவணங்கள் அமெரிக்க அரசின் நீதி அமைச்சகத்தால் கடந்த வாரம் வெளியிடப்பட்டிருப்பது, அமெரிக்காவின் உள் நாட்டு அரசியலில் மட்டுமல்லாமல், பிரிட்டன் உள்பட பல மேலை ஐரோப்பிய நாடுகளிலும் பரபரப்பாகப் பேசப்படும் விஷயமானது.
சட்டப்படி வயதுக்கு வராத, பதின்பருவ சிறுமிகளை, பெரிய மனிதர்களின் பாலியல் விளையாட்டுகளுக்காகப் பயன்படுத்திய விவகாரத்தில் முதலில் 2006லும், பின்னர் 2019ல் கைது செய்யப்பட்டவர் எப்ஸ்டீன் .
2006 முதலில் ஃப்ளோரிடா மாநில போலிஸ் விசாரணை ஆரம்பித்திருந்தாலும், இவரால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான வர்ஜீனியா ஜூஃப்ரே, எப்ஸ்டீன் மீது அமெரிக்க மத்திய புலன் விசாரணை அமைப்பான FBI தொடங்கிய விசாரணைகளில் ஒத்துழைக்கத் தொடங்கியபோதுதான் இந்த விவகாரம் பெரிதாக அமெரிக்க ஊடகங்களில் பரவியது.

காரணம், எப்ஸ்டீன் ஒரு மிகப் பிரபலமான, மேல் மட்டத் தொடர்புகளுடைய புள்ளியாக இருந்தவர். ஒரு கணித ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய எப்ஸ்டீன், பின்னர் நிதி ஆலோசகராகி, பெரிய வட்டங்களில் பழகத் தொடங்கினார். அமெரிக்க அதிபராக இருக்கும் டிரம்ப் உட்பட பலர் அவரது நட்பு வட்டத்தில் ஒரு காலத்தில் இருந்தவர்கள்.
பட்டம் பறிபோன இளவரசர்
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ , இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எஹுத் பராக் , அமெரிக்காவுக்கான முன்னாள் பிரிட்டிஷ் தூதர் பீட்டர் மேண்டல்சன், ஹார்வார்ட் பல்கலைக் கழகப் பேராசியர்கள் சிலர், வழக்கறிஞர்கள் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.

நட்பு வட்டத்தில் இருந்தோமே தவிர , நாங்கள் பாலியல் விவகாரங்களில் ஈடுபடவில்லை என்பது பொதுவாக இந்த நண்பர்கள் வட்டத்தில் இருந்தவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் பெரிய அளவில் சிக்கி, தனது ராஜகுடும்ப பட்டத்தைப் பறிகொடுத்தவர் பிரிட்டிஷ் மன்னர் சார்லஸின் தம்பி ஆன்ட்ரூ மட்டும்தான் — இதுவரை !
14 வயது பெண்ணின் புகார்
அமெரிக்காவை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த விஷயம், 2005ல் ஒரு 14 வயது பெண்ணின் பெற்றோர் இந்த எப்ஸ்டீன் மீது கொடுத்த புகாரை அடுத்துத்தான் வெளிவந்தது. இந்த புகாரின் அடிப்படையில் நடந்த வழக்கில் முதலில் எப்ஸ்டீன் கைதாகி, விசாரணைக்குப் பிறகு 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட பின்னர்தான், மற்ற பாதிக்கப்பட்ட பெண்களும் வெளியே வந்து பேசத்தொடங்கினர்.
அமெரிக்காவின் மத்திய் புலனாய்வுத்துறை ( FBI), முதலில் இந்த வழக்கை ஃப்ளோரிடா மாநில போலிசாரிடமிருந்து மாற்றி விசாரணைக்கு எடுத்தது. அதன் கணக்குப்படி, சுமார் 34 சிறுமிகள் எப்ஸ்டீனால் பாலியல் ரீதியாக, உறுதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. கணக்கில் வராதவர்கள் எத்தனைபேர் என்பது நிச்சயமாக உறுதியாகவில்லை.

எப்ஸ்டீனால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்களில் வர்ஜீனியா ஜூஃப்ரே என்ற பெண்தான் இவர்களில் வெளிப்படையாக தனது அடையாளத்துடன் பேசத்துவங்கியவர். 2011ல் முதலில் அவர் அமெரிக்க ஊடகங்களுக்கு முதலில் இந்த விஷயம் குறித்து பேட்டியளித்தார்.
எப்ஸ்டீனிடம் சிக்கிய வர்ஜீனியா...
ஆசைகாட்டி ஆளெடுத்த பிரிட்டிஷ் மேல்தட்டு பெண்மணி மேக்ஸ்வெல்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிறந்த வர்ஜினியா, பின்னர் சிறுவயதிலேயே குடும்ப நண்பர் ஒருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட துயரத்தை அனுபவித்திருக்கிறார். பின்னர் இவர் குடும்பம் புளொரிடா மாகாணத்துக்கு இடம் பெயர்ந்து, அங்கு பாம் கடற்கரைப் பகுதியில் இருக்கும் ( தற்போதைய அமெரிக்க அதிபர்) டொனால்ட் டிரம்பின் மார்-அ-லாகோ வாசஸ்தலத்தில் லாக்கர் ரூம் உதவியாளராக வேலைக்கமர்ந்தார்.
அந்த காலகட்டத்தில் ( இது நடந்தது 2000ம் ஆண்டில்) 16 வயதான அவர் , அங்குவந்த பிரிட்டிஷ் மேல்தட்டு பெண்மணி , கிலென் மேக்ஸ்வெல்லை சந்திக்க நேர்ந்திருக்கிறது. கிலென் , எப்ஸ்டீனின் நெருங்கிய தோழி.
எப்ஸ்டீனிடம் அவருக்கு மசாஜ் தெரப்பி செய்யும் வேலை வாய்ப்புக்காக அவரை சந்திக்க ஆசை காட்டி வர்ஜினியாவை எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
அந்த அறிமுகம் வர்ஜீனியாவுக்கு பெரும் கேடாக அமைந்தது. அடுத்த சில ஆண்டுகள் எப்ஸ்டீன் வீட்டில் அவருக்கு மசாஜ் செய்யும் வேலைக்கு பணியமர்த்தப்பட்ட இவர், எப்படி எப்ஸ்டினால் பாலியல் ரீதியில் பயன்படுத்தப்பட்டு, அவரது மேல் மட்ட நண்பர்களுக்கும் “ பழத்துண்டுகள் அடங்கிய தட்டு” போல பரிமாறப்பட்டார் என்பதை பிபிசிக்கு பின்னர் 2019ல் தந்த ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் அவர்.
எப்ஸ்டீன் இந்த வர்ஜீனியாவை 2001ம் ஆண்டு பிரிட்டனின் ( தற்போது அரச பட்டங்கள் பறிக்கப்பட்ட முன்னாள் இளவரசர்) ஆண்ட்ரூவிடம் லண்டனில் நடந்த ஒரு விருந்தில் அறிமுகப்படுத்தியதாக வர்ஜீனியா கூறியிருந்தார்.
ஆண்ட்ரூ இந்த நிகழ்ச்சியில் வர்ஜினியாவுடன் சற்று அணைத்தவாறு நிற்கும் ஒரு புகைப்படமும் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த சந்திப்புக்குப் பின்னர் தான் மூன்று முறை ஆண்ட்ரூவால் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டதாக வர்ஜீனியா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த சர்ச்சை பெரிதாகும் நிலையில், தான் வர்ஜீனியாவை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டை ஆண்ட்ரூ மறுத்தாலும், இந்த சம்பவம் பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கு ஏற்படுத்தக்கூடிய அவப்பெயரை உணர்ந்து, அப்போதைய அரசகுடும்பத்தின் பொதுக் கடமைகளில் இருந்து அவர் ஒதுக்கிவைக்கப்பட்டார்.
வர்ஜீனியா தற்கொலை
வர்ஜீனியா ஜூஃப்ரே ஏப்ரலில் மேற்கு ஆஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்ட சில மாதங்களுக்குப் பின் வெளிவந்த அவரது “Nobody’s Girl” ( அனாதைப் பெண்) என்ற புத்தகம் மீண்டும் ஆண்ட்ரு பற்றிய சர்ச்சையைத் தூண்டிய நிலையில், பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் , தனது சகோதரர் ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டத்தையே ரத்து செய்து, அவரை விண்ட்சர் கோட்டை வளாகத்திலிருந்து வெளியேற்றி தன்னுடைய சொந்த அரண்மனையான சேன்ட்ரிங்காம் மாளிகை வளாகத்தில் ஒரு வீட்டை ஒதுக்கி அவரை அதில் குடியேறச் செய்திருக்கிறார்.
கீலென் மேக்ஸ்வெல் கைது
இதனிடையே, வர்ஜீனியாவை எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்துடன் , மேலும் அவரைப் போலவே பல வயது குறைந்த சிறுமிகளை எப்ஸ்டீனின் விளையாட்டுகளுக்கு பயன்படுத்திய பிரிட்டிஷ் மேல்தட்டுப் பெண்மணி கீலென் மேக்ஸ்வெல்லை 2021ல் அமெரிக்க புலனாய்வுத்துறை (FBI) கைது செய்தது.

நீதி மன்ற விசாரணைக்குப் பின் சிறுமிகளை எப்ஸ்டீனுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்ய அனுப்பியது, மற்றும் சில பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களில் அவரும் கலந்து கொண்டது ஆகிய குற்றச்சாட்டுகளில் மேக்ஸ்வெல் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்.
எப்ஸ்டீன் தற்கொலை...
இந்தக் குற்றச்சாட்டுகளின் பிரதான மையப்புள்ளியாக இருந்த எப்ஸ்டீன், 2019ல் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டாலும், இந்த சர்ச்சை முடிவுக்கு வருவதாக இல்லை. இந்த மரணமே தற்கொலையா, கொலையா என்ற வாதப் பிரதிவாதங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. சதிக் கதைகளுக்கும் பஞ்சமில்லை.
பிரபல அரசியல் புள்ளிகள் மற்றும் அமெரிக்காவின் பெருந்தலைகளின் பெயர்கள் இந்த விவகாரத்தில் அடிபட்டுக்கொண்டிருக்கும் நிலையில், எப்ஸ்டீன் விசாரணை குறித்த ஆவணங்களை முழுதுமாக வெளியிடவேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்பட தொடங்கின.
இதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்திலும் கிடைத்த இரு தரப்பு ஆதரவை அடுத்து, முதலில் ஆவணங்களை வெளியிடத்தயங்கிய அமெரிக்க நீதித்துறையும், டிரம்ப் நிர்வாகமும் , இப்போது தவணை முறையில் ஆவணங்களை வெளியிடத் தொடங்கியிருக்கின்றன.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஆவணத் தொகுப்பில் சுமார் 30,000 கோப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த ஆவணங்களில் பொதுவாக வெளிவந்திருப்பவை எப்ஸ்டீனின் நடவடிக்கை பற்றிய புலனாய்வு விவரங்கள், பல புகைப்படங்கள், மின்னஞ்சல் பிரதிகள் மற்றும் நீதிமன்ற தஸ்தாவேஜுகள் போன்றவைதாம்.
எப்ஸ்டீனின் இந்தக் குற்றச் செயல்கள் எப்படி ஏதோ ஒரு தனிப்பட்ட ஆங்கொன்றும் இங்கொன்றுமான செயல்களாக இல்லாமல், திட்டமிடப்பட்ட செயல்களாக இருந்திருக்கின்றன என்பதைக் காட்டுவதாக செய்திகள் கூறுகின்றன.
அது மட்டுமல்லாமல், வெளியாகியிருக்கும் புகைப்படங்களும், இதுவரை பாதிக்கப்பட்ட பெண்கள் தொடுத்த குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் விதமாகவே இருக்கின்றன.

விமான டிக்கெட்டுகள், தங்கியிருந்த ஹோட்டல்கள் பற்றிய விவரங்கள், அலைபேசி அழைப்பு விவரங்கள் போன்ற விஷயங்களும் இந்த ஆவணங்களில் வெளிவந்திருக்கின்றன.
இதில் பல விவரங்கள் தனி நபர் அந்தரங்க உரிமை போன்ற காரணங்களால் சில பகுதிகள் கறுப்பு மையிடப்பட்டு வெளியாகியிருப்பது மேலும் சர்ச்சையைத் தூண்டியிருக்கிறது.
தனி நபர்களின் அந்தரங்கத்தைப் பாதுகாப்பதைவிட , நீதித்துறை மற்றும் சில பிரபலங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் பெயர் கெடாதவகையில் பாதுகாக்கவே இந்த சென்சார் நடவடிக்கையா என்ற சர்ச்சையும் நிலவுகிறது.
டிரம்ப் 1990களில் எப்ஸ்டீனுடன் நட்பாக இருந்தது அவருக்கும் ஒரு அரசியல் ரீதியான சிக்கலை தொடர்ந்து ஏற்படுத்தி வந்திருக்கிறது. மேலும், மேக்ஸ்வெல் கைதானபோது, டிரம்ப் அவருக்கு வாழ்த்து சொல்வது போல “ I wish her well” என்று சொன்னது பல புருவங்களை உயர்த்தியது.
எப்ஸ்டீன் ஆவணங்களை வெளியிடுவது குறித்தும் டிரம்ப் தன் நிலைப்பாட்டில் ஒரே மாதிரியாக இல்லை. முதலில் 2024 தேர்தல் பிரச்சாரத்தின்போது , எப்ஸ்டீன் ஆவணங்களை வெளியிடுவேன் என்று உறுதியளித்த டிரம்ப், பின்னர் வெற்றி பெற்று பதவிக்கு வந்தபின் , இது ஜனநாயகக் கட்சியினரின் ஏமாற்று வேலை என்று சொல்லி, ஆவணங்களை வெளியிடாமல் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருந்தார்.

பின்னர் நாடாளுமன்றத்தின் இரு கட்சி உறுப்பினர்களின் அழுத்தத்தை அடுத்தே டிரம்ப் இறங்கி வந்து , ஆவணங்களை வெளியிட சம்மதித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.
எப்ஸ்டீன் விவகாரம் இதுவரை
எப்ஸ்டீன் விவகாரம் இதுவரை எப்ஸ்டீன் மற்றும் வர்ஜீனியா ஜுப்ரே ஆகிய இரு உயிர்களை பலிவாங்கியிருக்கிறது. ஒருவர் - மேக்ஸ்வெல் – சிறையிலிருக்கிறார். ஒரு இளவரசரின் பட்டம் பறிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கான பிரிட்டிஷ் தூதராக இருந்த பீட்டர் மேண்டல்சனின் பதவியும் இதனால் பறிபோனது நினைவிருக்கலாம்.
சில இந்தியப் பெயர்களும் இருக்கக்கூடும் என்பதான யூகங்கள் வெளியாகின . ஆனால் இதுவரை வெளிவந்த ஆவணங்களில் அதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு தடயமும் சிக்கவில்லை.
புதிய திருப்பங்கள் , தகவல்கள் ஏதும் தெரியவந்தால் எப்ஸ்டீன் விவகாரம் இன்னும் பல மாதங்கள் உலக அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கும்.!









.jpeg)






