Brazil: கவனக்குறைவால் Bungee Jumping விபத்தில் சிக்கிய மாணவி; காப்பாற்ற செவிலியர...
FIFA: 'காவல்காரன் Vozinhaவும்; சம்பவக்கார டிஃபெண்டர்களும்'- ஸ்பெயினுக்கு எதிராக நிரூபித்த Cabo Verde
கால்பந்து உலகின் அசுர பலம் கொண்ட ஸ்பெயினுக்கு எதிராக, முதல் முறையாக உலகக்கோப்பை மேடையில் களம் கண்ட காபோ வெர்டே அணி, 0-0 என்று போட்டியை டிரா செய்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
சில போட்டிகள் நடக்கும் முன்பே முடிவுகள் தீர்மானிக்கப்பட்டுவிட்டதாகவே பலரும் நினைப்பார்கள். உலக சாம்பியன் ஸ்பெயின் எங்கே? உலகக் கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெற்ற குட்டித் தீவு நாடான காபோ வெர்டே எங்கே?
ஆனால், கால்பந்து மைதானம் எப்போதும் கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது. 90 நிமிட ஆட்ட முடிவில் ஸ்பெயினின் ஆட்டத்தைத் தவிடுபொடியாக்கி, பிரமாண்ட சாதனை படைத்துள்ளது காபோ வெர்டே!

ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலிருந்தே ஸ்பெயின் வீரர்கள் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து படையெடுத்தனர். ஸ்பெயின் கொடுத்த அத்தனை சவால்களையும் காபோ வெர்டே டிஃபெண்டர்கள் அரணாக நின்று தடுத்தனர். அந்த அரணையும் உடைத்து அடித்த அசாத்திய ஷாட்டுகளை கோல் லைனுக்குள் செல்லவிடாமல் தடுத்து, ஒற்றை மனிதனாக நின்றார் கோல்கீப்பர் வோசின்ஹா!
"மைதானத்தின் காவல்காரன்"
ஸ்பெயின் வீரர்கள் பாக்ஸிற்குள் புகுந்து அடித்த புல்லட் வேக ஷாட்டுகள், கார்னர் கிக் மூலம் வந்த ஹெட்டர்கள் என அத்தனையையும் மின்னல் போன்ற வேகத்துடன் பாய்ந்துப் பாய்ந்து தடுத்தார் வோசின்ஹா. மொத்தம் 8 கோல்களைத் தடுத்து ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார் இவர்.
ஒரு உலகக்கோப்பை போட்டியில், அதுவும் ஸ்பெயினுக்கு எதிராக ஒரு கோல் கூட விடாமல் தடுப்பது என்பது எந்த ஒரு கீப்பருக்கும் வாழ்நாள் கனவு.









போட்டி முடிந்ததும் ஸ்பெயின் வீரர்களே வியந்து போய் இவருக்குக் கைகுலுக்கியதுதான் இந்த ஆட்டத்தின் ஆகச்சிறந்த தருணம். காபோ வெர்டே நாட்டின் போராட்டக் குணத்திற்கும், அந்தக் கீப்பரின் அசாத்திய திறமைக்கும் இந்த உலகக்கோப்பை எப்போதும் மறக்காத ஒரு பரிசைத் தந்திருக்கிறது!
போட்டிக்குப் பின்னர் பேசிய கோல் கீப்பர் வோசின்ஹா
"இந்த ஒரு தருணத்தை என் வாழ்க்கையில் வாழத்தான் நான் என் வாழ்நாள் முழுவதும் உழைத்தேன். எத்தனையோ தலைமுறையினர் இது போன்ற ஒரு தருணத்திற்காகக் கனவு கண்டு, அதை அடைய முடியாமல் போயிருக்கிறார்கள். இது சாத்தியமாக வேண்டும் என்பதற்காக நாங்கள் கடுமையாகப் போராடினோம், அதனால்தான் இன்று இங்கே இருக்கிறோம்.

இந்த உலகக்கோப்பையில் விளையாட எங்களுக்கு எல்லா தகுதிகளும் இருக்கின்றன. போட்டி முடிந்ததும் நான் அழுதுவிட்டேன். என் தாத்தா, பாட்டியுடன்தான் நான் வளர்ந்தேன். ஆனால் இதைப் பார்க்க இன்று அவர்கள் உயிரோடு இல்லை. எனக்காக அவர்கள் தங்களின் எல்லாவற்றையும் கொடுத்தார்கள்.
விசா பிரச்னை காரணமாக என் அம்மாவாலும் இங்கு வர முடியவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்குள் விசா நடைமுறைகளை முடிப்பதற்கான பணத்தை எங்களால் திரட்ட முடியாமல் போய்விட்டது. அம்மா என்னுடன் இங்கு இருந்திருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பேன். என் நாட்டு மக்களுக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று மிகவும் உறுக்கமாகப் பேசியிருந்தார்.




















