அஜித் பவார்: இளம் பெண் பைலட் சாம்பவி பதக் டு கேப்டன் சுமித் கபூர்! - விமானிகளின்...
FTA: இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்: எப்படி முக்கியம்? தமிழ்நாட்டிற்கு என்ன பயன்?|Explained
ஒப்பந்தப் பேச்சுவார்த்தை... வர்த்தகப் பிரச்னை... வரி விதிப்பு... என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒருபக்கம் முறுக்கிக் கொண்டு இருக்க... இன்னொரு பக்கம், இந்தியா வெற்றிகரமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை 'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்' என்று இந்திய பிரதமர் மோடி கூறியுள்ளார்.

என்ன நடந்தது?
எத்தனையோ நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது. 'பின், இந்த ஒப்பந்தத்திற்கு மட்டும் என்ன இவ்வளவு சிறப்பு?' என்று இந்த இடத்தில் கேள்வி தோன்றுவது நியாயமானது தான்.
அதற்கு பதில்... இந்த ஒப்பந்தம் ஓராண்டு, ஈராண்டு ஆக இல்லை. இது கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது.
ஆம்... 2007-ம் ஆண்டு முதன்முறையாக இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கியது. அதன் பின், பல்வேறு தடைகள், பிரச்னைகளால் நின்ற இந்தப் பேச்சுவார்த்தை, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இந்த மாதம் இறுதியாகி உள்ளது.
குடியரசு தினத்திற்காக இந்தியா வந்தனர் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா. அதையொட்டி நேற்று இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையில்லா வர்த்தகத்தை அறிவித்தார் மோடி.
ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் - ஏன் முக்கியமானது?
ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் என 27 ஐரோப்ப நாடுகளைக் கொண்டது ஐரோப்பிய ஒன்றியம்.
இதில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு துறையில் சிறந்தது... ஒவ்வொரு விதத்தில் சிறந்தது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியா பலதரப்பட்ட நாடுகளுடன் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும். அந்தந்த நாடுகளின் சிறந்தவைகளையும் இந்தியாவால் பெற முடியும்.

என்ன அறிவிப்பு?
இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தத்தின் படி...
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதியாகும் கிட்டத்தட்ட 70 சதவிகித பொருள்களுக்கு வரிகளே இல்லை.
இதனால், கிட்டத்தட்ட 75 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியாவின் ஏற்றுமதிகள் பலனடையும்.
இந்த ஏற்றுமதிகளில் ஜவுளி, தோல் பொருள்கள், காலணிகள், தங்கம் மற்றும் நவரத்தினங்கள், கடல்சார் பொருள்கள் போன்ற துறைகள் இடம்பிடித்துள்ளன.
ஸ்டீல் மற்றும் அலுமினியம், ஆட்டோமொபைல்ஸ், இயந்திரம் மற்றும் இன்ஜீனியரிங் பொருள்கள், மதுபானங்கள் ஆகிய துறைகளுக்கு பெரியளவில் வரிச்சலுகைகள் கிடைத்துள்ளன.
முன்பு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்திய சேவைத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டு வந்தது. அந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் இப்போது ஒப்பந்தத்திற்குப் பிறகு நீக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்திய பொருள்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 2 -150 சதவிகிதம் வரை வரி விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என்ன லாபம்?
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் கிட்டத்தட்ட அனைத்து இயந்திரங்கள், விமானங்கள் அல்லது விண்வெளி விமானங்கள், 90 சதவிகித மருத்துவம் சார்ந்த பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கு ஜீரோ வரி.
வாகனங்கள் மற்றும் மதுபானங்களுக்கும் அதிக வரி குறைப்பு நடந்துள்ளது.
இதுவரை இந்தியா ஐரோப்பிய ஒன்றியப் பொருள்களுக்கு 11 சதவிகிதத்தில் இருந்து 150 சதவிகிதம் வரை வரி விதித்து வருகிறது.

இவைகளுக்கு வரி விலக்கு இல்லை!
இந்தியாவும் சரி... ஐரோப்பிய ஒன்றியமும் சரி... சில பொருள்களின் ஏற்றுமதிகளுக்கு எந்த வரி விலக்கும் செய்யவில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் பால் பொருள்கள், தானியங்கள், மாமிசம், சில வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு இந்தியா எந்த வரி விலக்கும் தரவில்லை.
இந்தியாவில் இருந்து அங்கே செல்லும் பீஃப், சர்க்கரை, அரிசி, மாமிசம், பால் பவுடர், தேன், வாழைப்பழம் போன்றவைகளுக்கு அவர்கள் வரி விலக்கு தரவில்லை.
இதற்கு காரணம் ஒன்று தான் - இரு தரப்புமே அவர்களின் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனைக் காக்க விரும்புகின்றனர். அவ்வளவு தான்.
தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்கள் பலனடையும்?
ஜவுளித்துறை - திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர்.
தோல் மற்றும் காலணித் துறை - ஆம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை.
கடற்சார் பொருள்கள் - தூத்துக்குடி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி.
ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகத் துறை - ஒரகடம், ஓசூர், சென்னை.
தொழில்நுட்பம் - சென்னை, கோவை.

ஒப்பந்தம் எப்படி முக்கியத்துவம் பெறுகிறது?
ட்ரம்ப் இந்தியா மீது விதித்துள்ள 50 சதவிகித வரியால் ஜவுளித்துறை, காலணித் துறை உள்ளிட்டவைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பலத்த அடியைச் சந்தித்துள்ளன.
அமெரிக்காவிற்கு மாற்றாக இந்தத் துறையினர் ஏற்கெனவே வேறு சந்தைகளைத் தேடி வந்தனர்.
இந்த நேரத்தில், தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தினால் கிடைக்கும் வரி விலக்கு இந்தத் துறைகளுக்கு மிகப்பெரிய ப்ளஸ்.
அனைத்து நாடுகளுமே, ட்ரம்பின் மிரட்டல்கள், மனமாற்றங்களால் வேறு சந்தைகளைத் தேடி வருகிறது. அப்படியான நேரத்தில் இந்தியாவின் இந்த மூவ் மிக முக்கியமானது.
இந்த இடத்தில் ட்ரம்ப் இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று மிரட்டி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இனி இந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி செல்வார்கள். இது வர்த்தகத்தை விரிவாக்கும்.
சீனாவின் பொருள்களுக்கு ஐரோப்ப நாடுகளில் பெரிய சந்தை இருந்து வருகிறது... இந்த இடத்தை இந்தியா பிடிப்பதற்கான வாய்ப்பை இந்த ஒப்பந்தம் உண்டாக்கி தருகிறது.
இந்த ஒப்பந்தத்தினால் 75 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதிகளுக்கு லாபம். இன்னமும் இந்த ஒப்பந்தத்தினால் லாபம் அதிகரிக்கும். இதனால், இங்கே வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சென்று வந்த பில்லியன் கணக்கான டாலர் வரி மிச்சமாகும். இது ஏற்றுமதியாளர்களுக்கு மிக முக்கியப் பாசிட்டிவான விஷயம்.

அடுத்ததாக, இந்த ஒப்பந்தத்தினால், இந்தியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இந்தியாவிற்கும் திறன் வாய்ந்த நபர்களும், திறன்களும் வந்து செல்வார்கள்... வந்து செல்லும்.
ஏ.ஐ, தொழில்நுட்பங்களில் இந்தியாவை விட, பல அடிகள் முன்னேறி உள்ளது ஐரோப்பிய ஒன்றியம். இந்த ஒப்பந்தத்தினால், அவைகள் இங்கேயும் வளரும்... அப்டேட் ஆகும்.
இதே மாதிரி இந்தியாவின் பாதுகாப்புத் துறையும் வலுவடையும்.
இப்படி அனைத்து துறைகள் முதல் அனைத்து தரப்பினர் அதாவது மக்கள், ஏற்றுமதியாளர்கள், அரசாங்கத்தினருக்கு என அனைவருக்கும் பெரும் லாபத்தை அள்ளித் தர உள்ளது, 'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்!'













