கரூர்: `நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்காலிக அரசு பணி வழங்கலாம்' - ...
Gatta Kusthi 2: ``மக்கள் நம்மை மறந்துவிட்டார்களோ என்ற பயம்" - நடிகர் விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் திரைப்படம் ஜூலை 3 அன்று வெளியானது.
2022, டிசம்பர் 2 அன்று வெளியான 'கட்டா குஸ்தி' முதல் பாகம் ரசிகர்களிடம் பெற்ற பெரும் வரவேற்பைத் தொடர்ந்தே இதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்தார்.
அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், ``படத்தின் தயாரிப்பாளர் என்னை முழுமையாக நம்பி, எந்தக் கேள்வியும் கேட்காமல் 'ஃப்ரீ ஹேண்ட்' கொடுத்ததே இந்த வெற்றிக்குக் காரணம். அந்த நம்பிக்கையே அன்பின் ஆகச்சிறந்த வடிவம். இயக்குநர் செல்லாவோடு 11 ஆண்டு காலப் பழக்கம் உள்ளது. அவர் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. பிற்காலத்தில் அவர் மிகப்பெரிய கமர்சியல் இயக்குநராக வருவார்.
பாக்ஸ் ஆபீஸில் இப்படம் குறைந்தபட்சம் ரூ.50 கோடி வசூல் செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, நடிகர் கருணாஸ் இப்படத்தின் உண்மையான முதுகெலும்பு. 'பார்ட் 1' மற்றும் 'பார்ட் 2' ஆகிய இரண்டிலும் தூணாக நின்றுள்ளனர். தியேட்டரில் இவர்களின் கேரக்டருக்குக் கிடைத்த விசில் சத்தமும் கைதட்டலும், அவர்களுக்கு நான் கொடுத்த வாக்கை நான் காப்பாற்றியதைக் காட்டுகிறது.
மீனு மிஸ் கேரக்டரில் நடித்த நடிகை மோக்ஷாவுக்கு திரையரங்குகளில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. குழந்தை நட்சத்திரம் சாராதான் இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ. அவருடன் நடித்தது ஒரு நல்ல அனுபவம்.

முதல் நாளின் மாலைக் காட்சியிலிருந்தே திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, B & C சென்டர்களில் குடும்பங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் கொண்டாடும் ஒரு நல்ல 'ஃபேமிலி ஃபிலிமாக' இந்தத் திரைப்படம் உருவெடுத்துள்ளது.
சினிமா உலகில் எனது 18 ஆண்டு காலப் பயணத்தில் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்தும் நான் ஜெயித்ததற்கு ரசிகர்களே காரணம். கடந்த 2-3 ஆண்டுகளாக 'கட்டா குஸ்தி' படத்திற்குப் பிறகு எனக்குச் சரியான படங்கள் அமையாததால், "மக்கள் நம்மை மறந்துவிட்டார்களோ?" என்ற பயம் இருந்தது. ஆனால், இந்த பிரம்மாண்ட வெற்றியின் மூலம் ரசிகர்கள் என் மீது வைத்துள்ள மாறாத அன்பை மீண்டும் நிரூபித்துள்ளனர். அந்த அன்புக்கு நன்றி." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.














