Iran: "அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தை நடக்காது" - ஈரான் என்ன சொல்கிறது...
GT vs MI: 'OG is Back டி' - கம்பேக் கொடுத்த மும்பை இந்தியன்ஸ்; வீழ்ந்த குஜராத் டைட்டன்ஸ்!
"மூழ்காத ஷிப்பே மும்பை ஷிப்பா" எனப் பாட வைக்குமளவு தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது மும்பை அணி.
ரபடாவின் பீரங்கித் தாக்குதலில் தொடங்கி, திலக் வர்மாவினை கதாநாயகனாக்கிய குஜராத்தின் திக்திக் நிமிடங்களில் தொடர்ந்து, மும்பை பௌலர்களின் விஸ்வரூபக் காட்சியோடு முடிவுக்கு வந்தது மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இடையிலான போட்டி.

ரோஹித்துக்குக் காயம், சூர்யா ஃபார்ம்ல இல்ல, பும்ரா அவராவே இல்ல, பாண்டியா கேப்டனானே தெரியல ஆகமொத்தம் இது டீமே இல்லன்னு அங்(கலாய்ச்சுட்டு) வேதனையோட உச்சியிலே இருந்த மும்பை ரசிகர்கள பவர்பிளேவே அதளபாதாளத்துக்குள்ள தள்ளிவிட்ருச்சு.
`எதிரி எங்கே தயாரா இல்லையோ அங்கே தாக்குறதுதான் சாமர்த்தியம்'னு போர்தந்திரம் சொல்லுது. மும்பை பவர்பிளே மொத்தத்திலேயும் தயாரா இல்லை, அதனாலதான் செமர்த்தியா குஜராத் அங்கே தாக்குச்சு. 'முற்றுகை இயந்திரம்' பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? எதிரியோட கோட்டைய தாக்கி இருந்த அடையாளமே தெரியாம மொத்தமா அதை தகர்த்து எறிஞ்சிடும்.
பவர்ப்ளேல ரபடாவோட பந்துவீச்சுகூட அப்படித்தான் இருந்துச்சு. யாராலயும் தாக்குப்பிடிக்கவும் முடியல, தப்பிப் பிழைக்கவும் முடியல.
வீசுன பந்து ஒன்னொன்னும் அப்படியே நெருப்பு குழம்பு மாதிரி வந்துகிட்டு இருந்துச்சு. தொடர்ச்சியா 150+ கிமீ/மணி வேகத்தை எட்ட முடியுமானா "அதுலாம் எனக்கு சின்ன விஷயம்"னு எட்டி காட்டினாரு. கூடவே எக்ஸ்ட்ரா பவுன்ஸ் வேற.
விளைவு, பவர்ப்ளே முடியறதுக்குள்ளேயே மும்பை பக்கத்துல மூணு மூக்கிய விக்கெட்டுகள் போயிடுச்சு. அதற்கான மூன்று பந்துகள 147.6, 149.7, 152.1-ன்ற வேகத்துல வீசி மரண அடியை அங்கேயே ரபடா அடிச்சிட்டாரு.
சரி அதிவேகமா பரவுற நெருப்புதான் இப்படி இருக்குன்னு பார்த்தா சிராஜ் சுழன்று அடிக்குற காத்தா மாறி மூச்சவிட முடியாம எதிரணியைப் பாடாபடுத்துனார். ரபடா மாதிரி எதிரியை தாக்கி அழிக்கிறது ஒரு வகை ஆனா அவங்கள பட்டினி போட்டே சாவடிச்சா எப்படி இருக்கும்?
Blackhole சம்பவத்துல நடந்த அதேமாதிரிதான் இருந்துச்சு சிராஜின் பந்துவீச்சு. ரன்னே கொடுக்காம, கஞ்சத்தனமா வீசியே எதிரிய பலவீனமாக்குனாரு.

பவர்பிளேல மூணு ஓவர் வீசி வெறும் பதினைந்து ரன்கள் கொடுத்திருந்தா அப்ப எவ்வளவு துல்லியமா வீசி இருப்பாருன்னு பார்த்துக்கோங்க.
பவர் பிளேக்குள்ளேயே மூணு முக்கிய விக்கெட்டும் போயிருச்சு. அவ்வளவுதான் போல மும்பை இந்தியன்ஸ்னு நினைச்சுக்கிட்டு இருக்கப்போதான் திலக் வர்மா வந்து சேர்ந்தாரு. முதல்ல 20 பந்துல ஒரு சிரத்தையே இல்லாம ஆங்கரிங் இன்னிங்க்ஸ்தான் ஆடுனாரு, ஒரு பவுண்டரிகூட வரல. ஆனா அதுக்கப்புறம் பூகம்பத்த குஜராத் தரப்புக்கு திலக் திருப்பிவிட்டாரு.
முதல் 22 பந்துகள்ல வெறும் 19 ரன்கள், ஆனா அதுக்கடுத்து வீசப்பட்ட 23 பந்துகள்ல திலக் 82 ரன்கள எடுத்துருக்காரு, நினைச்சே பார்க்காத வகையில சதத்தையும் அடிச்சுட்டாரு.
ஸ்ட்ரைக்ரேட் மீட்டரே நாக்அவுட் ஆகுறது மாதிரியான ஆட்டமது. ஆப்போசிட் எண்டுல இருந்து அம்பயர் மற்றும் கோ பைலட் ஹர்திக் பாண்டியா அவங்க ரெண்டு பேர் மட்டும்தான் அவர்கிட்ட அடி வாங்கல.
ஆப்போசிட்ல இருந்து யார் வந்தாலும் அடிப்பேன்டான்ற மாதிரி அடிச்சுக்கிட்டு இருந்தாரு.
புயல் மையம் கொள்றதுக்கு எடுத்துக்குற அவகாசம் மாதிரிதான் ஆரம்பத்துல அந்த 20 பந்தை எடுத்துக்கிட்டாரு. ஆனா அதுக்கப்புறம் எல்லா பக்கமும் சுத்தி சுத்தி அடிச்சாரு பாருங்க, மரண பீதிய குஜராத்துக்கு பார்சல் பண்ணாரு.
அந்தச் சதத்த அவர் அடிச்சப்ப மும்பை இந்தியன்ஸ் மட்டும் இல்ல ஒட்டுமொத்தமா மேட்ச பார்த்த எல்லாருமே சந்தோஷப்பட்டுருப்பாங்க. ஏன்னா மூழ்குற நிலைமையில இருந்த ஒரு அணியை அப்படியே மீட்டுக் கொண்டு வந்து 200 டார்கெட் வைக்கிற அளவுக்கு எடுத்துட்டுப் போகணும்னா அப்ப அந்த மனுஷன் என்ன ஆட்டம் ஆடி இருப்பாருன்னு பார்த்துக்கோங்க.

திலக் வர்மா அடிச்ச சதம், மும்பை இந்தியன்ஸ் வச்ச 200 டார்கெட் இதெல்லாம்கூட கொடுக்காத ஒரு சந்தோஷம் அந்த முதல் பந்துல பும்ரா விக்கெட் எடுத்தாரு பாருங்க அப்ப வந்து சேர்ந்துச்சு. நீங்கள் எந்த அணியோட ரசிகரா இருந்தாலும் பும்ராவ மட்டும் வெறுக்க முடியாதுன்றது தான் உண்மை.
மும்பை இந்தியன்ஸுக்காக கடைசியா அவர் வீசுன 153 பந்துகள்ல பும்ரா ஒரு விக்கெட்கூட எடுக்கல. அதனால்தான் இந்த விக்கெட்டை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மட்டுமில்ல எல்லா இந்திய ரசிகர்களும் கொண்டாடினாங்க. வறண்ட வானிலையும் அடிச்சு சுருட்டுற வெயிலும் மாறி குளிர் மழை பெஞ்சா எப்படி இருக்கும்? அப்படி இருந்துச்சு பும்ரா விக்கெட் எடுத்த உடனே ரசிகர்களுக்கு.
பும்ரா ஆரம்பிச்சத பாண்டியா தொடர்ந்து எடுத்துட்டுப் போனாரு பட்லரோட விக்கெட்டோட. இந்தப் போட்டி மொத்தமுமே பாண்டியா ஒரு மாதிரி அனிமேட்டடாதான் இருந்தாரு. துடிப்போட "இன்னைக்கு ஜெயிச்சிரணும்டா பாண்டியா!", அப்படின்ற மாதிரி ஆடிட்டு இருந்தாரு. டாப் 3ல மிச்சம் இருக்கிறவங்க வேற யாரு அப்படின்னு பார்த்தா நம்ம கில்தான். கில் மூன்று பவுண்டரிகள்லாம் அடிச்சு அமர்க்களமா தொடங்கினாரு. ஆனாலும் அவரையும் விடல.
கில்லையும் பவர்பிளேய தாண்டறதுக்கு முன்னாடியே அஸ்வானி குமார் முடிச்சு விட்டாரு. பவர்பிளேல வெறும் 45க்கு மூணு அப்படின்ற நிலைமையில தான் குஜராத் இருந்துச்சு. இது பழிக்குபழி(லி) வாங்குற நடவடிக்கை மாதிரி பண்ணிக் காட்டிட்டாங்க மும்பை இந்தியன்ஸ்.
ஏன்னா மும்பை இந்தியன்ஸ் பவர் பிளேயோட முடிவுல 46/3னு இருந்தாங்க. அதுக்குப் பழி தீர்த்துக்குற மாதிரி 45க்கு மூணு அப்படின்ற கட்டத்துக்குள்ள குஜராத்த கொண்டு வந்து நிறுத்திட்டாங்க. கணக்கு நேராகிடுச்சு!

சாண்ட்னரோட ஒரே ஓவர்ல விழுந்த இரட்டை விக்கெட்டுகள் கில் கூட்டணிய பலவீனமாக்க, அதுக்கப்புறம் ஒவ்வொரு செங்கலா மிச்சமுள்ளத உடைச்சு எடுத்துட்டாங்க மும்பை. அஸ்வானி குமார் இறுதிக் கடமைகளைச் சரியா முடிச்சாரு. தாக்கூர், சஹார் ஆகியோரை வெளியே உட்கார வச்சு இவரை பிளேயிங் லெவன்ல கொண்டு வந்தது சரியான முடிவுன்றத அவர் வீசுன ஒவ்வொரு பந்தும் சொல்லுச்சு.
கஜன்ஃபார் தன் பங்குக்கு கடைசி ரெண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்த ஆல்அவுட் ஆக்கி 100 ரன்களுக்கே குஜராத்தைச் சுருட்டிட்டாங்க. பாண்டியா தவிர பந்துவீசின யாரோட எக்கானமியும் 6-க்கு மேல போகல. ஆக ஒட்டுமொத்த பௌலிங் யூனிட்டோட கூட்டு முயற்சிதான் இந்த 99 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றி. அதற்கான தளத்த உருவாக்கித் தந்த திலக் வர்மாவை எவ்வளவு பாராட்டுனாலும் தகும்.

மண்ணுக்குள்ள புதைச்ச ஒருத்தன் தலையை மட்டும் வெளியே நீட்டி `மீண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கு'ன்றத உறுதியாகச் சொல்வது போன்றதுதான் மும்பையின் இந்த வெற்றி. வருங்காலத்தில் மகுடம் வருமோ இல்லையோ தலை தப்பிக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றனர்.
இந்த ஒரே ஒரு வெற்றி 10-வது இடத்துல இருந்த மும்பை இந்தியன்ஸ 7-வது இடத்துக்கு தூக்கிட்டு வந்து வச்சிருச்சு! இது தற்செயலா அல்லது மும்பையோட இன்னொரு கம்பேக் ஸ்டோரியோட முதல் அத்தியாயமான்றது அடுத்தடுத்த போட்டிகள்ல தெரிய வரும்.




















