IndiGo: ஒரே நாளில் 200 இண்டிகோ விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவதி; காரணம் என்ன...
IndiGo: ஒரே நாளில் 200 இண்டிகோ விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவதி; காரணம் என்ன?
இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.
நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,232 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இண்டிகோ நிறுவனமானது நாள் ஒன்றுக்கு 2,200-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. இதில் நேற்று முன்தினம் (டிசம்பர் 2) மட்டும் சரியான நேரத்துக்குப் புறப்படும் விமானங்களின் எண்ணிக்கை 35 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. குறிப்பிட்டுச் சொன்னால் 1,400 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன.

இவ்வாறு இண்டிகோ நிறுவனம் நாளுக்கு நாள் சரிவை நோக்கி நகரும் இத்தகைய சூழலில் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களில் நேற்று (டிசம்பர் 3) பிற்பகல் 200-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் கூட்டாக ரத்து செய்யப்பட்ட சம்பவம் பயணிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மும்பை விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில், ``மும்பை விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் சில இண்டிகோ விமானங்கள் அந்நிறுவனத்தின் செயல்பாட்டுச் சிக்கல்கள் காரணமாகத் தாமதங்கள் அல்லது ரத்துகளைச் சந்திக்க நேரிடும்.
இண்டிகோவில் முன்பதிவு செய்த பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் தங்களின் பயண விவரங்களை விமான நிறுவனத்துடன் சரிபார்த்துக்கொள்ளவும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கடந்த மாதம் திருத்தப்பட்ட விமான கடமை நேர வரம்பு (FDTL - Flight Duty Time Limitation) விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.
FDTL புதிய விதிகளானது, விமானிகள் மற்றும் கேபின் குழுவில் உள்ளவர்களின் வேலை நேரத்தை நிர்ணயிக்கின்றன. அதாவது ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம், வாரத்திற்கு 35 மணிநேரம், மாதத்திற்கு 125 மணிநேரம், வருடத்திற்கு 1,000 மணிநேரம் என வேலை நேரத்தைக் கட்டுப்படுத்துகிறது.

கட்டாய ஓய்வு நேரங்களையும் இது குறிப்பிடுகின்றன. விமானிகள் மற்றும் கேபின் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் விமான நேரத்தின் இரு மடங்கு ஓய்வு நேரத்தைப் பெற வேண்டும். எந்தவொரு 24 மணி நேர பயணத்திலும் குறைந்தபட்சம் 10 மணி நேர ஓய்வு இருக்க வேண்டும்.
விமானிகள் மற்றும் கேபின் குழுவினர் போதுமான ஓய்வு பெறுவதை உறுதி செய்வதற்கும், பயணிகளின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது என்பதற்கும் DGCA-ஆல் கொண்டுவரப்பட்ட இந்த விதிகளுக்கு ஏற்றவாறு இண்டிகோ நிறுவனம் தனது நெட்வொர்க்கை மறுசீரமைக்கத் தடுமாறி வருகிறது.
குறிப்பாக புதிய பணி விதிமுறைகளுக்குப் பிறகு பணியாளர்கள், விமானிகள் பற்றாக்குறையை நிறுவனம் எதிர்கொள்கிறது. இதுதான், இண்டிகோ விமான சேவையின் பாதிப்புக்கு முக்கிய காரணம்.
இதுபற்றி இண்டிகோ நிறுவனம் தனது அறிக்கை ஒன்றில், ``கடந்த இரண்டு நாள்களாக இண்டிகோவின் செயல்பாடுகள் மற்றும் நெட்வொர்க் முழுவதும் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு எங்கள் வாடிக்கையாளர்களிடம் நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
சிறிய தொழில்நுட்பக் கோளாறுகள், குளிர்காலத்துடன் தொடர்புடைய அட்டவணை மாற்றங்கள், பாதகமான வானிலை, திருத்தப்பட்ட விமான கடமை நேர வரம்பு விதிமுறைகளைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல எதிர்பாராத செயல்பாட்டுச் சவால்கள், எங்கள் செயல்பாடுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின.

இடையூறுகளைக் கட்டுப்படுத்தவும், நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். இந்த நடவடிக்கைகள் அடுத்த 48 மணிநேரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
அதோடு, எங்கள் செயல்பாடுகளை இயல்பாக்கவும், நெட்வொர்க் முழுவதும் எங்கள் நேரத்தை படிப்படியாக மீட்டெடுக்கவும் இந்த நடவடிக்கை அனுமதிக்கும்.
வாடிக்கையாளர்களின் அசௌகரியத்தைக் குறைக்கவும், செயல்பாடுகள் விரைவாக நிலைபெறுவதை உறுதி செய்யவும் எங்கள் குழுக்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றன.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் இடங்களை அடைய அல்லது பணத்தைத் திரும்பப் பெற மாற்று பயண ஏற்பாடுகள் வழங்கப்படுகின்றன. விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன், வாடிக்கையாளர்கள் https://www.goindigo.in/check-flight-status.html வலைதளப் பக்கத்தில் சமீபத்திய விமான நிலையைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
இண்டிகோ நிறுவனம் இப்படியொரு அறிக்கை வெளியிட்டிருந்தாலும், இதனால் சிரமம் எதிர்கொண்ட விமான பயணிகள் பலரும் சமூக வலைதளங்களில் இண்டிகோ நிறுவனத்தின் சேவை குறித்து கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டு வருகின்றனர்.


















