'திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்!' - தீர்மானம் நிறைவேற்றிய த...
Karuppu: இறுதியாக திரையை எட்டும் 'கருப்பு' - படம் தாண்டிய தடைகள் என்னென்ன?
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், படத்திற்கு கடைசி நேரத்தில் எழுந்த சிக்கல்களால் நேற்றைய காட்சிகள் அனைத்து ரத்து செய்யப்பட்டன. படத்தைக் கொண்டு வர , கடந்த 13-ம் தேதி இரவு முதல் படக்குழுவினர் பிரச்னைகளை முடிக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வந்தார்கள்.

கடந்த மே 13-ம் தேதி இரவில் , படத்தின் ரிலீஸ் தடைப்படும் என்ற தகவல் இணையத்தில் அதிகமாகப் பேசப்பட்டவுடன், "எனது அன்பிற்குரிய ரசிகர்களே, தற்போதைய சூழல் குறித்து என்னிடம் உறுதியான பதில் ஏதுமில்லை. பிரச்சினைகளைத் தீர்க்கத் தயாரிப்பாளர்கள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்தப் படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பல தடைகள் வந்திருக்கின்றன. ஆனால் ஏதோ ஒரு வகையில் கடவுள் அந்தத் தடைகளைந்து ரசிகர்கள்யெல்லாம் கடக்க வைத்து, 32 மாதங்களுக்குப் பிறகு இன்று நம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்." என இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவில் ஆர்.ஜே. பாலாஜி குறிப்பிட்டது போல, பல தடைகளைத் தாண்டித்தான் 14-ம் தேதி இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் தயார் செய்தது படக்குழு. ஆனால், இறுதி நேரத்தில் எழுந்துள்ள சிக்கல்களால் மீண்டும் படத்தின் ரிலீஸுக்கு இடையூறு ஏற்பட்டது.
கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இத்திரைப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. படத்தின் படப்பிடிப்பு அடுத்தடுத்து நடைபெற்று முடிந்தாலும், டிஜிட்டல் பிசினஸ் தொடர்பான விஷயங்கள் நடப்பதற்குச் சற்று தாமதமானது.
பிறகு, பிசினஸ் தொடர்பான விஷயங்கள் முடிக்கப்பட்டு, பட வெளியீட்டிற்குக் கொண்டு வருவதற்கான முயற்சியைத் தொடங்கியது படக்குழு. ஆனால், அடுத்தடுத்து பல ரிலீஸ் தேதிகள் பேசப்பட்டாலும், தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து படத்தின் ரிலீஸ் பற்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

அதனால், கடந்தாண்டே வெளியாவதாக பேசப்பட்ட இப்படம், இந்தாண்டு வெளியீட்டிற்கு தள்ளி வந்தது.
படத்தின் முதல் சிங்கிள் பாடலுக்குப் பிறகு சில மாதங்களுக்கு படம் பற்றிய எந்தவொரு அப்டேட்டும் படக்குழுவினரிடம் இருந்து வெளியாகாததால், ரசிகர்கள் தொடர்ந்து 'கருப்பு' படத்தின் அப்டேட்களை சமுக வலைதளங்களில் கேட்கத் தொடங்கினர்.
படத்தின் டீசர் கடந்தாண்டு சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டிருந்தது. அதன் பிறகு, முதல் சிங்கிளான 'காட் மோட்' பாடல் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட்டிருந்தார்கள்.
அதன் பிறகு, 'கருப்பு' தொடர்பான எந்தவொரு அப்டேட்டையும் படக்குழுவினர் வெளியிடவில்லை. கடந்த மார்ச் மாதம்தான் படத்தின் இரண்டாவது சிங்கிளை வெளியிட்டு, படத்தின் ரிலீஸ் வேலைகளை மீண்டும் தொடங்கினார்கள்.
பிறகு, 'கருப்பு' திரைப்படம் அதிகாரப்பூர்வமாக மே 14-ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துவிட்டார்கள். ஆனால், அதனைத் தொடர்ந்து சில நாட்களில் படத்தின் போஸ்டரிலிருந்து ரிலீஸ் தேதியை நீக்கியதனால், படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது.
ஆனால், சென்சார் சார்ந்த விஷயங்களுக்காகத்தான் படத்தின் ரிலீஸ் தேதியைக் குறிப்பிடவில்லை என்றும், படம் உறுதியாக மே 14-ஆம் தேதி திரைக்கு வந்துவிடும் என இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி விளக்கமளித்தார்.
அதன் பிறகு படத்திலிருந்து வெளிவந்த அடுத்தடுத்த பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க, மதுரையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவைப் பிரம்மாண்டமாக நடத்தினார்கள்.

அதன் பிறகு தேர்தல் தொடர்பான விஷயங்கள் பரபரப்பாகத் தொடங்கியதால், படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த அரசியல் பரபரப்பு முடிந்தவுடன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வரும் என்பதை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியும் தெரிவித்திருந்தார்.
பரபரப்பான அரசியல் சூழல், முதல்வர் பதவியேற்றபின் சற்றே அமைதியாகத் தொடங்கியது. அன்று மாலையே படத்தின் டிரெய்லரை வெளியிட்டு மீண்டும் ரிலீஸ் பேச்சுகளைத் தொடங்கி வைத்தது படக்குழு.
பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்கள், படத்தின் புக்கிங் தொடங்கியதும் மும்மரமாக முன்பதிவு செய்யத் தொடங்கினார்கள். ஆனால், இப்படியான எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகவிருந்த படத்தின் ரிலீஸ், பல சிக்கல்களால் மீண்டும் தடைப்பட்டது. ஆனால், வடமாநிலங்களில் சில பகுதிகளில் படத்தின் காட்சியை தொடங்கிவிட்டதால் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தன. இது க்யூப்பில் நிகழ்ந்த ஒரு தவறினால் நடந்துவிட்டதாக நேற்றைய தினம் தெரிவித்தனர். இப்படியான சிக்கல்கள் எழுந்ததைத் தொடர்ந்து நேற்று மதியம் கண்கலங்கியவாறு ரசிகர்களிடம் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மன்னிப்பும் கோரியிருந்தார்.
இப்படித் தொடக்கம் முதல் பல்வேறு தடைகளைச் சந்தித்த 'கருப்பு' படம், அதனைத் தகர்த்து இப்போது திரைக்கு வருகிறது.

















