செய்திகள் :

தம்பிக்கு 'செக்', அண்ணனுக்கு 'லக்' - ஜெயலலிதா கட்டம் கட்டியவரை அழைத்து வந்த எடப்பாடி! - அதகள அதிமுக!

post image

த.வெ.க-வுக்கு வலிய முட்டுக் கொடுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றதையடுத்து, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதே போல இந்தத் தேர்தலில் 47 இடங்களில் வெற்றிபெற்ற அ.தி.மு.க, எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலும் இரண்டாக உடைந்தது.

13.05.2026 அன்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தபோது, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 எம்.எல்.ஏ-க்கள் எதிர்த்தனர்.

அதேசமயம் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-வுக்கு ஆதரவளித்தனர். அதன் காரணமாக விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி 144 எம்.எல்.ஏ-க்களுடன் மெஜாரிட்டியை நிரூபித்தது.

அதிமுக
அதிமுக

அதையடுத்து த.வெ.க-வுக்கு ஆதரவு கொடுத்த எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், அருண்மொழித்தேவன் உள்ளிட்ட பலரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அதேசமயம் நீக்கப்பட்டிருந்தவர்களால் ஓரம் கட்டப்பட்டிருந்தவர்களுக்கும், கட்சியால் டம்மியாக்கப்பட்டிருந்தவர்களுக்கும் பொறுப்புகளை வழங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில், கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த எம்.சி.சம்பத்தின் பதவி பறிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அதேபோல மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அருண்மொழித்தேவனின் பதவி பறிக்கப்பட்டு, நெய்வேலி தொகுதியில் எம்.எல்.ஏ சொரத்தூர் ராஜேந்திரனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

தமோதரனை ஓரம் கட்டிய ஜெயலலிதா!

தற்போது கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற்றிருக்கும் எம்.சி.தாமோதரன், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உடன் பிறந்த மூத்த சகோதரர் என்பதுதான் ஹைலைட். 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் நெல்லிக்குப்பம் தொகுதியில் போட்டியிட்ட எம்.சி.தாமோதரன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.கோவிந்தராஜனை 35,108 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

அப்போது எம்.சி.தாமோதரன் வாங்கியது 57,373 வாக்குகள். அந்த தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்று முதல்வரானார் ஜெயலலிதா. தொடர்ந்து தன்னுடைய முதல் அமைச்சரவையில் கடலூர் மாவட்டச் செயலாளராக இருந்த எம்.சி.தாமோதரனை, கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சராக அமர வைத்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதா
ஜெயலலிதா

அடுத்து வந்த 1996 தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட எம்.சி.தாமோதரன், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் மணியிடம் 25,383 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். சில நாட்களில் தி.மு.க எம்எல்ஏ மணி உயிரிழந்ததால் 2000-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில், மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவதை அமல்படுத்த நினைத்தார் ஜெயலலிதா.

அதனால் தாமோதரனின் மனைவியை நிறுத்துமாறு கூறினார். ஆனால் எம்.சி.தாமோதரன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 'குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு அரசியல் சரிவராது என்ற ரீதியில் மறுத்துவிட்டார் தாமோதரன்' என்று பழைய சம்பவத்தை நம்மிடம் நினைவு கூர்ந்தார் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர். அதில் உஷ்ணமான ஜெயலலிதா, அந்த இடைத்தேர்தலில் தாமோதரனை ஓரம்கட்டி விட்டு வேலாயுதம் என்பவரை நிறுத்தினார். வேலாயுதம் தி.மு.க வேட்பாளர் வி.சி.சண்முகத்திடம் தோல்வியடைந்தார்.

ஜெயலலிதா போட்ட 'மார்க்'... எடப்பாடி தந்த `ரீ-என்ட்ரி’!

அந்தத் தோல்விக்கு எம்.சி.தாமோதரன் காரணம் என்று மனதில் 'மார்க்' செய்து கொண்டார் ஜெயலலிதா. அதையடுத்து வந்த 2001 தேர்தலில் எம்.சி.தாமோதரனுக்கு பதிலாக, அவரின் சகோதரர் எம்.சி.சம்பத்தை அதே தொகுதியில் நிறுத்தினார்.

அதில் தி.மு.க வேட்பாளர் வி.சி.சண்முகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றார் எம்.சி.சம்பத், ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பெற்றார். அப்போது அமைந்த அமைச்சரவையில் சம்பத்தை அமைச்சராக்கிய ஜெயலலிதா, தாமோதரனிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியையும் பறித்து சம்பத்திடம் கொடுத்தார்.

அதையடுத்து அரசியல் பரமபதத்தில் ஏறுமுகத்தில் சென்றார் சம்பத். அதேசமயம், எங்கு இருக்கிறார் என்றே தெரியாத அளவுக்கு, ஜெயலலிதாவால் கட்டம் கட்டி ஓரம் கட்டப்பட்டார் அவரது அண்ணன் தாமோதரன்.

எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா முடிவை ஜெயலலிதாவைத் தவிர யாரால் மாற்ற முடியும் ? ஆனால் அப்படி ஒரு மாற்றம் நிகழாமல் போனதால், அரசியலில் காணாமல் போனார் தாமோதரன். அதன்பிறகு விஜயகாந்தின் தே.மு.தி.க-வில் இணைந்த தாமோதரன், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார்.

அந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரியும், அ.தி.மு.க சார்பில் தாமோதரனின் தம்பி எம்.சி.சம்பத்தும் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.அழகிரி வெற்றி பெற, அண்ணன், தம்பி இருவரும் தோல்வியடைந்தனர்.

அதன்பிறகு 2011-ல் அ.தி.மு.க-வுடன் தே.மு.தி.க கூட்டணி அமைத்ததால், மீண்டும் தாய்க் கழகம் திரும்பினார் தாமோதரன். ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டிருந்த அவரைத்தான், 26 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் லைம்லைட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.!

புதுக்கோட்டை : 'இந்த டாஸ்மாக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி.!' - மக்கள் நிம்மதிப் பெருமூச்சு!

தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், மி... மேலும் பார்க்க

அதிமுக: `எப்போதும் போல `நான் மட்டுமே எல்லாம்' என்று.!' - எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி பதில்

தேர்தலுக்குப் பிறகு அதிமுக எடப்பாடி அணி - சி.வி.சண்முகம் அணி என இரண்டு குழுவாகப் பிரிந்திருக்கும் நிலையில், இருதரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றனர்.இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்ற... மேலும் பார்க்க

பெட்ரோல் விலை உயர்வு: ``தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்குகிறது ஒன்றிய அரசு" - சு.வெங்கடேசன் கண்டனம்!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடித் தாக்கமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்ற... மேலும் பார்க்க

`மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்' - விஜய்க்கு விசிக எம்.பி கோரிக்கை!

எடப்பாடி தலைமையில் ஒரு அணி, சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையிலான ஒரு அணி என அதிமுக மீண்டும் பிளவுபட்டு இருக்கிறது. இதில் சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையில் உள்ள 25 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வா... மேலும் பார்க்க

தவெக: ``திமுக தோல்விக்கு காரணம் இருவர் மட்டுமே! அதிமுகவின் பதவி வெறி.!" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்திருக்கும் தவெக முதல் சட்டமன்றக் கூட்டத்தை நம்பிக்கை வாக்கெடுப்புக்காக நடத்தியிருக்கிறது. இந்த நிலையில், தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி... மேலும் பார்க்க

'திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்!' - தீர்மானம் நிறைவேற்றிய திருச்சி திமுக

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து, புதிதாக த.வெ.க ஆட்சியமைத்துள்ளது. அந்த கட்சியைச் சேர்ந்த ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், தி.மு.க தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையி... மேலும் பார்க்க