போட்டி தேர்வுகளுக்கு முழு போர்ஷனையும் படிக்க வேண்டுமா?- விளக்கும் King Makers IA...
Labham - 3: EMI + SIP... வீட்டுக் கடனை எளிதாகக் கட்டி முடிக்கும் சூப்பர் ஃபார்முலா
35 வயதானாலே போதும், 'சொந்தமா இன்னும் வீடு வாங்கலையா...? கடனைக் கிடனை வாங்கி, மொதல்ல, ஒரு வீடு வாங்குப்பா...' என்று நெருக்குதலைத் தர இன்று பல வீடுகளில் 'பெரியவர்கள்' தயாராக இருக்கிறார்கள்.
இன்றுள்ள நிலையில் வீடு வாங்க முடியுமா, வாங்கினால் இ.எம்.ஐ கட்டுகிற அளவுக்கு நிரந்தரமான வருமானம் இருக்கா, வாடகையாக எவ்வளவு பணம் மிச்சமாகும், வீடு வாங்குவதற்கும் வாங்காமல் போவதற்கும் என்ன லாபம் அல்லது நஷ்டம் என்பதை எல்லாம் அவர் யோசித்துப் பார்க்கவே மாட்டார்கள்.
'ஒரு வீடு வாங்கிவிட்டால், வாடகையும் மிச்சம்; வீட்டின் மதிப்பும் அதிகமாகிக்கொண்டே இருக்கும்! இப்போது வாங்கவில்லை என்றால், எப்போதுதான் வாங்குவான்!' என்கிற நல்லெண்ணத்தில்தான் அவர்கள் இந்த நெருக்கதலைத் தருகிறார்கள்.
சமூகத்தின் நெருக்கதலை மறுக்க முடியாமலும், வீடு வாங்குவதினால் பல நன்மைகளை மனதில் கொண்டும் பலரும் வீடு வாங்கத்தான் செய்கிறார்கள். அதையும் 80% பணத்தை ஏதோ ஒரு வங்கியில் வீட்டுக்கடன் வாங்கித்தான் வீட்டை வாங்குகிறார்கள்.

வீட்டுக்கடன் வாங்கியவுடன், எல்லோருக்கும் அந்தக் கடனை சீக்கிரம் கட்டிமுடிக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்துவிடுகிறது. வீட்டுக்கடனை வாங்கும்போது 20 - 25 ஆண்டுகள் வரை கட்டி முடிக்கலாம் என்கிற கணக்கில்தான் வீட்டுக் கடனையே வாங்குகிறோம். ஆனால், 'அவ்வளவு காலம் யார் கடனைக் கட்டுவது, வட்டி நிறைய கட்ட வேண்டி இருக்குமே!' என்று நினைத்து, இ.எம்.ஐ.யாக எவ்வளவு பணத்தைக் கட்ட வேண்டுமோ, அதைவிட ஒன்றரை மடங்கு அல்லது இரண்டு மடங்கு பணம் கட்டி, எவ்வளவு சீக்கிரம் வீட்டுக் கடனை முழுவதுமாக அடைக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கடனை அடைத்துவிட வேண்டும் என்றே நினைக்கிறார்கள்!
இது சமூக நெருக்கலினால் வரும் எண்ணம்தான். கடனை நீண்ட காலம் வைத்திருக்கக்கூடாது என்பதுதான் சமூகம் நமக்கு சொல்லித் தரும் பாடம். வீட்டுக்கடனை நம் தலையில் எப்போதும் தூக்கிச் சுமக்கும் 100 கிலோ பாராங்கல் போல நினைக்கிறோம். எப்போதடா இந்தக் கல்லைக் கீழே இறக்கிவைத்துவிட முடியும் என்று தவியாய்த் தவிக்கிறோம். எனவேதான், இ.எம்.ஐ-ஆகக் கட்டவேண்டிய தொகைவிட அதிகமாகக் கட்டுகிறோம்.

இப்படி அதிகமான பணத்தை இ.எம்.ஐ-ஆகக் கட்டுவதைவிட கொஞ்சம் பணத்தைப் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துவந்தால், மிக அதிகமான லாபம் கிடைக்கும் என்பதை வீட்டுக்கடன் வாங்கிய பலரும் புரிந்துகொள்வதே இல்லை. EMI + மியூச்சுவல் ஃபண்ட் SIP என இரண்டு விஷயங்களையும் செய்தால், எப்படி லாபம் கிடைக்கும் என்று கேட்கிறீர்களா? ஒரு உதாரணத்துடன் இதை சொன்னால், உங்கள் தெள்ளத் தெளிவாகப் புரியும்!
விக்னேஷ் பெங்களூரில் ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறார். ஓசூரில் ஒரு ப்ளாட்டை வாங்க அவர் 50 லட்சம் ரூபாய்க்கு வீட்டுக் கடன் வாங்குகிறார். இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் 8.5%. மாதந்தோறும் இ.எம்.ஐ தொகையாக 40,329 ரூபாயைக் கட்டுகிறார். இப்படி 25 ஆண்டுகள் தொடர்ந்து கட்டியபின் வீட்டுக்கடனை முழுவதுமாகக் கட்டிமுடிக்க அவர் எவ்வளவு பணம் கட்டியிருப்பார் தெரியுமா?
வாங்கிய கடன் ரூ.50 லட்சம்
வட்டியாக (8.5%) மட்டும் கட்டியது ரூ.70.98 லட்சம்
அசலும் வட்டியுமாகக் கட்டிய மொத்த தொகை ரூ.1.21 கோடி.
ஆனால், விக்னேஷ் மாதந்தோறும் ரூ.40,000 இ.எம்.ஐ கட்டுவதற்குப் பதிலாக, ரூ.50,000 கட்டுகிறார். இதனால் 25 ஆண்டுகளுக்கு பதிலாக சில ஆண்டுகள் முன்பே கட்டி முடித்துவிடலாம் என்பதே அவர் எண்ணம்.
ஆனால், அவர் நண்பர் கணேஷ் தந்த ஐடியா விக்னேஷுக்கு புதிய தெளிவைத் தந்தது. ''இ.எம்.ஐ-ஆக ரூ.50,000 மட்டும் கட்டுவதற்கு பதிலாக ரூ.40,000-த்தை மட்டும் கட்டிவிட்டு, 10,000 ரூபாயை பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வந்தால், நிறைய லாபம் கிடைக்கும்'' என்று சொல்ல, அதன்படியே செய்ய ஆரம்பித்தார் விக்னேஷ்.
முதல் இரண்டு வருடங்கள் மட்டும் ரூ.50,000 கட்டியவர்கள், மூன்றாம் ஆண்டு தொடங்கி, வீட்டுக்கடனுக்கு ரூ.40,000, எஸ்.ஐ.பி முதலீடு ரூ.10,000 என்று அடுத்த 13 வருடங்களுக்குக் கட்டினார். அப்படி கட்டியதால், அவரால் எவ்வளவு பணம் சேர்க்க முடிந்தது?

ரூ.10,000 என 13 ஆண்டுகளுக்குக் கட்டிய தொகை ரூ.15,60,000.
12% கூட்டு வட்டி வளர்ச்சியில் கிடைத்த லாபம் - ரூ.20,18,336.
ஆக மொத்தமாகத் திரும்பக் கிடைத்த பணம் - ரூ.35,78,336.
இதில் லாப வரியாக ரூ.4,47,292 போக ரூ.31,31,044 உங்களுக்குக் கிடைக்கும் இந்தப் பணத்தை அப்படியே வீட்டுக்கடனில் கட்டினால் நீங்கள் திரும்பக் கட்ட வேண்டிய வீட்டுக்கடன் பணம் மிகப் பெரிய அளவில் குறைந்துவிடும். அப்படி குறைந்த அளவில் இருக்கும் பணத்தை அடுத்த சில ஆண்டுகளிலேயே நீங்கள் எளிதாகக் கட்டிமுடித்துவிடலாம்!
ஆக, EMI + மியூச்சுவல் ஃபண்ட் SIP என்கிற சூப்பர் ஃபார்முலாவை ஃபாலோ செய்வதால், எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறதில்லையா?
உங்களுக்கு நிதிச் சுதந்திரம் வேண்டுமா?
உங்களுக்கு நிதிச் சுதந்திரம் வேண்டுமா? நிதிச் சுதந்திரம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்லும் வீடியோவை நீங்களும் பார்த்து பயன் பெற வேண்டுமா? இதோ இந்த லிங்க்கை கிளிக் செய்து, உங்கள் பெயரைப் பதிவு செய்து, வீடியோவைப் பாருங்கள்...
லாபம் வாட்ஸ் அப் குரூப்பில் இணைய விருப்பமா? இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்!
Labham Youtube Video: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil















