ஆ.ராசாவைக் கண்டித்து போராட்டம் நடத்திய விசிக; மல்லுக்கட்டிய திமுக! - குன்னத்தில்...
LPG வேண்டாம், தண்ணீரும் எத்தனாலும் போதும்! நிதின் கட்கரி அறிமுகம் செய்த Ethanol Stove புதிய மாற்றா?
வொர்க் அவுட் ஆகுமா?
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏறிக்கொண்டே போகிறதே என்று கவலைப்படும் சாமானிய மக்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, எத்தனால் மற்றும் தண்ணீர்க் கலவையில் இயங்கும் ஒரு புதிய வகை ஸ்டவ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
நாக்பூரில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த புதிய தொழில்நுட்பம் வர்த்தக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களை விட மிக மலிவானது மட்டுமல்லாமல், புகையில்லா சமையலுக்கும் வழிவகுக்கும் என்று அடித்துச் சொல்லியிருக்கிறார்.
சரி, இந்த புதிய கிச்சன் டெக்னாலஜி உண்மையிலேயே வொர்க் அவுட் ஆகுமா? வாங்க பார்க்கலாம்.

இந்த ஸ்டவ் எப்படி வேலை செய்கிறது என்று கேட்கிறீர்களா? இதன் டெக்னாலஜி ரொம்பவே சிம்பிள். எத்தனாலை தண்ணீருடன் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து, அதன் மூலம் சமையலுக்குத் தேவையான நெருப்பை உருவாக்க முடியும் என்கிறார் கட்கரி.
இது முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் என்பதால், எல்பிஜி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பாரம்பரிய எரிபொருட்களுக்கு ஒரு சூப்பரான மாற்றாக இது அமையும் என்பது அவரது நம்பிக்கை. கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க இந்தியா தீவிரமாக முயற்சித்து வரும் இந்த நேரத்தில், கட்கரியின் இந்த அறிவிப்பு ஒரு புதிய தொடக்கமாக பார்க்கப்படுகிறது
எத்தனாலின் புதிய அவதாரம்!
இந்தியாவின் எத்தனால் கதை என்பது புதிதல்ல. கடந்த பத்தாண்டுகளில் பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. 2014-ல் வெறும் 1.5% ஆக இருந்த எத்தனால் கலப்பு, 2025-ல் கிட்டத்தட்ட 20% ஐ தொடும் அளவுக்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரை வாகனங்களுக்கு எரிபொருளாகப் பயன்பட்டு வந்த எத்தனால், இப்போது முதன்முறையாக சமையலறைக்குள் நுழையப் பார்க்கிறது.

இந்த எத்தனால் - தண்ணீர் ஸ்டவ் தொழில்நுட்பம், எல்பிஜி சிலிண்டரை விட மலிவானது மட்டுமல்ல, இது ஒரு முழுமையான 'மேட் இன் இந்தியா' தயாரிப்பு என்பதுதான் இதில் ஹைலைட். இந்தியா தனது எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 87%-ஐ இறக்குமதி செய்வதாகவும், இதற்காக ஆண்டுக்கு பல லட்சம் கோடிகளை செலவிடுவதாகவும் நிதின் கட்கரி பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார். இந்தச் சூழலில், எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பது இறக்குமதி சுமையைக் குறைப்பதோடு, மாசுபாட்டையும் கட்டுப்படுத்த உதவும் என்பது அரசின் கணக்கு.
சரி, எத்தனால் ஏன் ஒரு க்ளீன் எரிபொருள்?
எத்தனால் என்பது கரும்பு, மக்காச்சோளம் மற்றும் விவசாயக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு ஆல்கஹால் அடிப்படையிலான உயிரி எரிபொருள். பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருட்களுடன் ஒப்பிடும்போது, எத்தனால் மிகவும் சுத்தமாக எரியக்கூடியது. கார்பன் மோனாக்சைடு போன்ற தீங்கு விளைவிக்கும் மாசுகளையும் இது மிகக் குறைவாகவே வெளியிடுகிறது.
இதன் காரணமாக, மண்ணெண்ணெய் அல்லது விறகு அடுப்புகளால் ஏற்படும் வீட்டு மாசைக் குறைக்கவும், இறக்குமதி செய்யப்படும் எல்பிஜியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், கரும்பு மற்றும் சோள விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் இந்தத் தொழில்நுட்பம் உதவும் என்கிறார்கள்.
எல்பிஜியை ரீப்ளேஸ் செய்ய முடியுமா?
ஐடியா எல்லாம் சூப்பர்தான், ஆனால் இதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு சுலபமா? என்றால், அதில் சில பெரிய சவால்கள் இருக்கின்றன. இந்தத் தொழில்நுட்பம் நாடு முழுவதும் பரவலாகப் பயன்பாட்டுக்கு வர வேண்டுமென்றால், எரிபொருள் தடையின்றிக் கிடைப்பது, பாதுகாப்புத் தரநிலைகள், அடுப்பின் விலை மற்றும் விநியோகக் கட்டமைப்பு என பல விஷயங்கள் சரியாக அமைய வேண்டும். இந்தியா முழுவதும் ஏற்கனவே மானியங்கள் மற்றும் விரிவான விநியோக நெட்வொர்க்குகளுடன் எல்பிஜி ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு சிஸ்டத்தை மாற்றி, மக்கள் மத்தியில் இந்த புதிய தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கையை உருவாக்குவது ஒரு பெரிய டாஸ்க்.
எத்தனால் மட்டுமல்லாமல், பசுமை ஹைட்ரஜன், எலக்ட்ரிக் வாகனங்கள், அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (Compressed Biogas) மற்றும் ஃப்ளெக்ஸ்-எரிபொருள் வாகனங்கள் எனப் பல மாற்று எரிசக்தித் திட்டங்களை அரசு ஊக்குவித்து வருகிறது. அந்த நீண்ட பட்டியலில், இந்த எத்தனால் ஸ்டவ் ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


















