Midlife Crisis: நடுத்தர வயதில் வருகின்ற பயம்; கடப்பது எப்படி? - வழிகாட்டும் நிபுணர்!
நம் அனைவருக்குமே, நம் வாழ்வின் ஏதாவதொரு கட்டத்தில், வாழ்தலின் மீதான நம்பிக்கையும் பிடிப்பும் மிக அதிகமாக இருந்திருக்கும். அப்படியான நேரத்தில், `என்ன ஆனாலும் சரிப்பா, வாழ்ந்து பார்த்துடறேன்' என உற்சாகத்துடன் சொல்லி, வழக்கத்தைவிடவும் அதிக புத்துணர்ச்சியோடு செயல்பட்டிருப்போம்.
இதேபோல, காரணமே இல்லாமல், `என்ன வாழ்க்கைடா இது' எனத் துவண்டுபோவது, வாழ்வின் மீதுள்ள பிடிப்பு மொத்தமும் போய், `இனி என்ன செய்யுறது' எனப் புரியாமல் திகைத்து நிற்பது, அடுத்தது என்ன என்ற கேள்வியும், அது தரும் பயங்களும்கூட இயல்பானதுதான்.
இது தற்காலிகமானதும்கூட. குறிப்பாக, நடுத்தர வயதில் இந்த மனநிலை மாற்றங்கள் அதிகம் நிகழும். இதுதான் மிட்லைஃப் க்ரைசிஸ். இது குறித்து, மனநல மருத்துவர் வசந்திடம் பேசினோம்.
காரணம் மற்றும் மிட்லைஃப் க்ரைசிஸ் தடுக்க...

''மிட்லைஃப் க்ரைசிஸ் பிரச்னைக்கான முக்கியக் காரணம், மனநலனில் கவனம் எடுத்துக்கொள்ளாமல் இருத்தல்தான். 30களின் இறுதியிலேயோ 40களின் தொடக்கத்திலேயோகூட ஒருவருக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டுவிடலாம் என்பதால், முப்பதை தாண்டிய உடனே மனநலனில் கவனமாக இருக்கத் தொடங்க வேண்டும்.
இங்கு, 30களைத் தாண்டிய பின்னர் நம் வாழ்க்கை அலுவலகம், வேலை, குடும்பம் என ஏதோவொன்றின் பின்னே பின்னப்பட்டுவிடுகிறது. அதற்கிடையில், நமக்காகவும் நாம் இயங்க வேண்டும் என்பதை மறந்துவிடுகிறோம் என்பதுதான் பிரச்னை.
அனைத்து வயதினருமே, தங்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க, மனநிறைவான வாழ்க்கையை முன்னெடுத்தால் மட்டுமே மிட்லைஃப் க்ரைசிஸை முழுமையாக வரும் முன் தடுக்கமுடியும்.
வந்த பிறகு என்ன செய்வது..?

`என்னால் பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இப்போது மிட்லைஃப் க்ரைசிஸ் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது' என்பவர்கள், தயங்காமல் மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
மனநலப் பிரச்னைகள் அனைத்துமே, முறையான ஆலோசனை மூலம் சரிசெய்ய முடிபவைதான் என்பதால், பிரச்னை குறித்த பயம் அறவே வேண்டாம்.
ஒவ்வொரு விடியலும் உங்களுக்கானதுதான் என்ற உத்வேகத்துடன் இருக்கப் பழகுங்கள். உங்களை மகிழ்ச்சியாக்கும் விஷயங்களைத் தேடிக் கண்டறிந்து, அவற்றைச் செய்து வாருங்கள்.
திட்டமிடுங்கள்!

40 வயதென்பது, ஒருவர் புரொஃபஷனலாகத் தன்னுடைய பெஸ்ட்டைக் கொடுத்துவிட்டு சற்றே பெருமூச்சுவிடத் தொடங்கும் தருணம் என்பதால், வேலையைச் சற்று சோர்வுடனோ அலட்சியத்துடனோ அணுகும் மனநிலை இருக்கும்.
அப்படியான நேரத்தில் மிட்லைஃப் க்ரைசிஸ் பிரச்னையும் ஏற்பட்டால், வருங்காலம் குறித்த பயம் ஏற்படத் தொடங்கும். இப்படியான சிக்கல்களையெல்லாம் தடுக்கச் சிறந்த வழி, திட்டமிடுதல்தான்.
ஒவ்வொரு விடியலும் உங்களுக்கானதுதான்!
வாழ்வில் எதன் மீதெல்லாம் உங்களுக்கு பயம் இருக்கிறதோ, அவற்றில் ஏற்படவிருக்கும் சிக்கல்களை முன்கூட்டியே அனுமானித்து, அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளைச் செய்து வாருங்கள்.
முன்பே சொன்னதுபோல, ஒவ்வொரு விடியலும் உங்களுக்கானதுதான். தினமும் போகின்ற போக்கில் வாழாமல், வாழ்க்கையை நேர்த்தியான திட்டமிடலோடு வாழ்ந்து வாருங்கள்.
முக்கியமாகப் பொருளாதார தேவைகள் குறித்து தகுந்த நபரோடு ஆலோசித்து சரியாகத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்" என்கிறார் மனநல மருத்துவர் வசந்த்.










