திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும...
BB Tamil: ஓவியா முதல் கம்ருதீன் வரை - பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தாலே ஈர்ப்பும், மோதலும் வந்துவிடுமா?
இரண்டு பேர் சில நாள்கள் சேர்ந்திருந்தால், அவர்களுக்குள் ஈர்ப்போ அல்லது மோதலோ வந்து விடும் என்பார்கள். இந்த உளவியல் பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்களுக்கும் பொருந்தும். ஆரவ், ஓவியா, கவின், லாஸ்லியா, பாலாஜி, ஷிவானி, விஜே விஷால், அன்ஷிதா, கம்ருதீன், பார்வதி, FJ, வியானா என சிலரை இந்த ஈர்ப்புக்கு உதாரணமாக சொல்லலாம்.
ஆனால், மோதல் போக்கு எல்லோரிடமுமே இருந்தது. இருக்கிறது... இருக்கும்..! அறிமுகமில்லாத அல்லது ஒருவருக்கொருவர் நன்கு பழகாத ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பிக்பாஸ் போல ஒரு கூரையின் கீழ் வாழ வேண்டிய நிலை வரும்போது, ஈர்ப்பும் மோதலும் மனித இயல்பே... இந்த இயல்புக்குப் பின்னால் இருக்கிற உளவியல் காரணங்களை, சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த் அவர்களிடம் கேட்டோம்.

''கல்லூரி, அலுவலகம், பிக்பாஸ் வீடு என ஓர் இடத்தில் பலர் சேர்ந்து இருக்கையில், ஈர்ப்பு, காதல், ஈகோ, சண்டை என எல்லா உணர்வுகளும் எழவே செய்யும். காரணம், 'அருகாமை'தான். ஆங்கிலத்தில் பிராக்ஸிமிட்டி (proximity) என்போம். இந்த உணர்வுகள் எல்லோருக்கும் வருமா என்றால், அப்படி சொல்ல முடியாது.
முதலில் ஈர்ப்பை எடுத்துக்கொள்வோம்.
திருமணம் முடித்த பலரும் தமிழ் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள். நான் அறிந்தவரை அவர்கள் நட்புடன் இருந்திருக்கிறார்கள். யாரிடமும் ஈர்க்கப்பட்ட சம்பவம் நிகழவில்லை என்றே நினைக்கிறேன். அப்படியென்றால், திருமணமாகாதவர்களிடையே ஈர்ப்பு வந்துவிடுமா என்றால், அப்படியும் சொல்ல முடியாது. 'தனக்கான துணையை இங்குகூட சந்திக்க நேரலாம்' என்கிற மனப்பான்மையுடன் இருப்பவர்களுக்கு இது நிகழலாம்.
ஒரே இடத்தில் பல நாட்கள் சேர்ந்து இருக்கையில், நம்பிக்கையின் அடிப்படையில் ஈர்ப்பு வரலாம். சுஜா வருணி போல, தன்னுடைய துணை வெளியே இருக்கிறது என்பதை பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே தெளிவாக சொன்னவர்களும் இருக்கிறார்கள்.

அடுத்தது மோதல்.
இதற்கு பல காரணங்கள் சொல்லலாம். ஒரு வீட்டுக்குள் சேர்ந்து வாழும்போது கருத்து வேறுபாடுகள் வரலாம். ஈகோ கிளறப்படலாம். 'நான் ஜெயிக்கணும்' என்கிற போட்டி மனப்பான்மையால் மோதல் வரலாம். 'இவங்க நமக்கு முன்னாடி ஓடிடுவாங்களோ' என்கிற பாதுகாப்பின்மை உணர்வால் சண்டை வரலாம். 'எனக்கென்ன வேணுமோ அதை நான் எடுத்துப்பேன்; எனக்கென்ன தோணுதோ அதை தான் செய்வேன்; சொல்வேன் ' என்கிற, அடுத்தவர் இடத்தில் இருந்து யோசிக்காத இயல்பு கொண்டவர்களாலும், சில பேர் கூடியிருக்கிற ஓர் இடத்தில் சண்டை வரலாம்.
நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆளுமை இருக்கும். ஒன்றையொன்று உரசும் இடத்தில் சண்டை வெடிக்கலாம். ஒவ்வொருவருடைய வொர்க்கிங் ஸ்டைலும் வேறு வேறுவிதமாக இருக்கும். அவர்கள் சேர்ந்து ஒரு டாஸ்க் செய்யும்போது, ஒருவருடைய வொர்க்கிங் ஸ்டைலில் இன்னொருவரால் மாற்றம் நிகழும். இதன் காரணமாகவும் சண்டை வரலாம்.
ஒரு கூட்டத்தில் ஒருவர் ஆதிக்க மனப்பான்மையுடன் இருந்தாலே, அங்கு அமைதி கெடும். சிலர், வெளியில் அமைதியாகக் காட்டிக் கொள்வார்கள். ஆனால், பின்னால் சென்று புரளிப் பேசுபவர்களாக, அடுத்தவர்களை பின்னால் இருந்து நெகட்டிவாக இயக்குபவர்களாக இருப்பார்கள். இவர்களின் குணம் அறிந்தவர்களுடன் உரசல் வரத்தான் செய்யும். இன்னும் சிலர், உண்மையிலேயே அமைதியான கேரக்டர்களாகவே இருப்பார்கள். ஆனால், தனக்கு எதிராக நிகழ்கிற சம்பவங்களை நினைத்து மனதுக்குள் குமுறுகிறவர்களாக இருப்பார்கள். இந்தக் குமுறல் வெடிக்கையில் மோதல் நிகழத்தான் செய்யும்.
ஒருசிலர், சண்டையோ, சமாதானமோ அதை நேரடியாகச் சொல்லி விடுவார்கள். இந்த இயல்புக்கு எதிர்வரிசையில் இருப்பவர்களுடம் நிச்சயம் முட்டத்தான் செய்யும். இவை அத்தனையும் மனித இயல்புகள்தான்'' என்கிறார், உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்த்.













