சென்னை வெள்ளம் 2015: `துயரத்தில் பிறந்த மனிதநேயம்' – 10 ஆண்டு நினைவலைகள் சொல்லும...
MS Dhoni: ``அது ஒரு மெக்சிகன் அலை போல் நகர்ந்து வந்தது" - வாழ்வின் நெகிழ்வான தருணம் குறித்து தோனி
கபில்தேவ் தலைமையில் முதல்முறையாக 1983-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, தனது இரண்டாவது உலகக் கோப்பையை வெல்ல சுமார் 3 தசாப்தங்கள் ஆனது.
சரியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையில் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றது.
அதன்பிறகு, 2015, 2019 அடுத்தடுத்த உலகக் கோப்பை தொடர்களில் அரையிறுதியோடு வெளியேறி ஏமாற்றம் தந்த இந்தியா, 2023-ல் சொந்த மண்ணில் இறுதிப்போட்டி வரை முன்னேறி மீண்டும் ஏமாற்றம் தந்தது.

இதற்கு மத்தியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கடந்த மாதம் சொந்த மண்ணில் மகளிர் உலகக் கோப்பையை வென்று அரை நூற்றாண்டு கனவை நிறைவேற்றியது.
இந்த நிலையில், தான் கேப்டனாகப் பதவி வகித்த காலத்தில் இருந்த 3 விதமான ஐ.சி.சி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனான தோனி, இந்திய மகளிர் அணியும் ஆடவர் அணியும் இன்னும் 100 கோப்பைகளை வெல்ல ஆசிர்வதிக்கட்டும் என்று கூறியதோடு, தன் கிரிக்கெட் வாழ்வின் மிக நெகிழ்வான தருணம் குறித்து பேசியுள்ளார்.
குஜராத்தின் பருல் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற மிஷன் பாசிபிள் (Mission Possible) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2011 உலகக் கோப்பையில் இறுதிபோட்டியின் கடைசி நிமிடங்களை நினைவுகூர்ந்த தோனி, ``மும்பை வான்கடே ஸ்டேடியம் அவ்வளவு பெரிய ஸ்டேடியம் இல்லை. எல்லா சத்தமும் உள்ளேயே இருக்கும்.
அன்று இறுதிப் போட்டியில் கடைசி பந்துக்கு 15 - 20 நிமிடங்களுக்கு முன்பு ஸ்டேடியத்தில் இருந்த அனைவரும் `வந்தே மாதரம்' பாடல் பாடத் தொடங்கினர்.

ஸ்டேடியத்தில் ஒரு மூலையில் அந்தப் பாடல் தொடங்கி நிறைய குரல்களுடன் ஒரு மெக்சிகன் அலை போல நகர்ந்து வந்தது.
அந்தச் சத்தத்துக்கு நடுவில் நிற்கும்போது அது நகர்வதை உங்களால் உணர முடியும். என் கிரிக்கெட் வாழ்வில் மிகச் சிறப்பான தருணம் அது.
அந்த சமயத்தில் எனக்கு இருந்த மிகச் சிறந்த நெகிழ்வான உணர்வு என்று அதைக் கூறுவேன்.

எமோஷனலாக மிகவும் நெகிழ்ந்தேன். அந்த மாதிரியான தருணத்தை மீண்டும் உருவாக்குவது மிகவும் கடினம்.
இந்தியா மீண்டும் வெல்லும். மகளிர் அணி மற்றும் ஆடவர் அணி இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியேயும் வெற்றி பெறுவார்கள். கடவுள் அவர்களை 100 முறை வெற்றிபெறச் செய்யட்டும்" என்று கூறினார்.







.jpg)










