செய்திகள் :

Nepal: "என் குடும்பமே கண்முன்னே காணாம போயிருச்சு..." - இடுப்பளவு சேற்றில் உடல்களைத் தேடும் உறவுகள்!

post image

"என் கணவர், தாய், தந்தை, சகோதரி என என் ஒட்டுமொத்த குடும்பமும் என் கண்முன்னேயே அந்தச் சகதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள். எதுவும் மிஞ்சவில்லை..." கண்ணீரும் செம்மண்ணும் கலந்து வழியும் முகத்தோடு, நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தைச் சேர்ந்த கல்பனா மல்லா கதறும் இந்தக் குரல் அங்கு நிகழ்ந்த பேரழிவின் இரக்கமற்ற சாட்சி. நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயின.

நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில் சிக்கி, இதுவரை 320-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 1500-க்கும் மேற்பட்டோர் நிலவரம் என்னவென்று தெரியாமல் காணாமல் போயுள்ளனர்.

நேபாள் வெள்ளம்
நேபாள் வெள்ளம்

இந்த வெள்ளப் பேரழிவு குறித்து மிரட்சியுடன் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கல்பனா மல்லா, ``மாடி வீட்டின் கூரை மீது ஏறி நின்றதால் நானும் என் மகனும் மட்டும் நூலிழையில் உயிர் பிழைத்தோம். என் தங்கைக்கு எனது போனைக் கொடுத்திருந்தேன்... இப்போது தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பாளோ என்று பதறுகிறது. இப்போது என் மகனுக்கும் உடல் நலமில்லை" எனக் கண்ணீர் மல்கக் கூறுகிறார்.

மறுபுறம் கோமா பண்டிட் என்ற பெண்மணி, "வீடு வாசலைத் தவிர்த்து, என் உழைப்பில் கிடைத்த 10 மூட்டை கடுகு, டன்கள் கணக்கிலான சோளம், நெல் என அனைத்தும் வெள்ளத்தோடு போயின. என்னிடம் இப்போது மிச்சமிருப்பது இந்த வெறுமை மட்டும்தான்" என நிலைகுலைந்து நிற்கிறார்.

காத்மாண்டுவில் உள்ள டி.யு மருத்துவமனை வாசலில், காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களின் படங்களைக் கையில் ஏந்தியபடி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தவித்துக்கொண்டிருக்கின்றன. ``வாகனம் ஓட்டும் பணிக்காக ரசுவா பகுதிக்குச் சென்ற என் கணவர் நேற்றிரவு 8 மணி வரை பேசினார். காலை முதல் தொலைபேசி அணைக்கப்பட்டு வருகிறது," எனத் தன் கைபேசியில் உள்ள புகைப்படத்தைக் காட்டி ராம குமாரி ஸ்ரேஸ்தா அழுவது காண்போரின் நெஞ்சைப் பிழிகிறது.

நேபாள் வெள்ளம்
நேபாள் வெள்ளம்

மணி ஸ்ரேஸ்தா பிஷ்வா என்பவரோ, தன் தம்பி, மைத்துனன், மாமா என நான்கு உறவுகளை ஒரே நாளில் இழந்துவிடுவோமோ என்ற அச்சத்துடனும், அவர்களை மீண்டும் காண்போம் என்ற நம்பிக்கையுடனும் காத்திருக்கிறார்.

"நான் வீட்டிலிருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்தில் நிலநடுக்கம் போன்ற ஒரு பெருஞ்சத்தம் கேட்டது. என் இல்லம் தரைமட்டமாகிவிட்டதை புகைப்படத்தில் பார்த்து அதிர்ந்துபோனேன். என் சகோதரி தேச்சன் தமாங் உயிருடன் மீட்கப்பட 10 சதவீத வாய்ப்பாவது கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்," என்கிறார் பயண வழிகாட்டியான சோனம் தோர்ஜி.

வியாழக்கிழமை அதிகாலை முதல் மீட்புக்குழுவினர் இடுப்பளவு சேற்றில் நடந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு, தற்காலிக இருப்பிடம் மற்றும் அவசர மருத்துவ உதவிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன.
இயற்கையின் இந்த திடீர் சீற்றத்தால் நேபாளத்தின் எல்லைக் கிராமங்கள் முழுதும் இப்போது மரண அமைதியும், உறவுகளை இழந்த மனிதர்களின் ஓலமும் மட்டுமே எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

நேபாளம்: பாலம் இல்லை… பாதையும் இல்லை… ஆபத்தான பயணம் ஜிப்லைனே ஒரே நம்பிக்கை!

பாலங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 250 மீட்டர் நீளமுள்ள ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து உணவு, உடைமைகளை எடுத்துச் செல்லும் நேபாள மக்களின் போராட்டம், பாலம் போன இடத்தில் உயிர்நாடியான ஜிப்லைன்!நேபாளத்... மேலும் பார்க்க

Nepal: ”இதுவரை பஸ் கிடைக்காததே நல்ல விஷயம்தான்” - டி.என்.ஏ சோதனைக்கு வந்த மகன் நம்பிக்கை

நேபாளத்தில், கடந்த 26ம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில், ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 305 பேரில், சுமார் 220 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 85 பேர் மயாமான நிலையில், அவர்களை மீட்க மத்திய... மேலும் பார்க்க

நேபாள வெள்ளம்: நீர்மின் சுரங்கத்துக்குள் 9 நாட்கள்... உயிருடன் மீட்கப்பட்ட 2 தொழிலாளர்கள்!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்துக்குப் பிறகு, மண்ணாலும் குப்பைகளாலும் மூடப்பட்ட நீர்மின் திட்ட சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.... மேலும் பார்க்க

பனிமலையின் பகுதி உடைந்து விழுந்த நொடிகள்... நேபாளப் பேரழிவின் தொடக்கத்தை பதிவு செய்த ட்ரோன் வீடியோ!

நேபாளத்தின் லாங்டாங் லிருங் (Langtang Lirung) மலையில் அண்மையில் நிகழ்ந்த பாறை மற்றும் பனிச்சரிவு, சில நிமிடங்களில் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கிய பெருவெள்ளமாக மாறியது. 900-க்கும் மேற்பட்டோரின் உயிர... மேலும் பார்க்க

"உங்களுடைய அக்கறைக்கும், தாராளமான உதவிக்கும் நன்றி"- இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த நேபாளம் அதிபர்

நேபாள நாட்டின் போடேகோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரை 650-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பேரிடர் மேலாண... மேலும் பார்க்க