செய்திகள் :

NRI Corner 2: Real Estate, Gold, Mutual Fund - NRI தமிழர்கள் எதில் முதலீடு செய்தால் அதிக லாபம்?

post image

இன்றைய தேதியில் தமிழகத்தில் பிறந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று வேலை செய்து வருமானம் சம்பாதிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை பல லட்சம் பேர். பல்வேறு நாடுகளில் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை அந்தந்த நாடுகளில் அவர்கள் முதலீடு செய்துவந்தாலும், எங்கே முதலீடு செய்வது, எப்படி முதலீடு செய்வது, எந்த முதலீடுகளில் பணத்தைப் போடுவது என்கிற கேள்விக்கான பதிலை அவர்கள் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒருவேளை, அவர்கள் சம்பாதித்த பணத்தை இந்தியாவில் முதலீடு செய்வதாக இருந்தால், எதில் முதலீடு செய்யலாம்? ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் - இவற்றில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்கிற கேள்வி அவர்களின் மனதில் திரும்ப திரும்ப எழுகிறது. இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச் சந்தை அல்லது மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய மூன்று முதலீடுகளுமே நம்பகமானவைதான். ஆனால் இவற்றின் மூலம் கிடைக்கும் பலன்கள் வேறுவேறு விதமானவை. இவற்றில் இருக்கும் ரிஸ்க்கும், கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ள லாபமும் வேறுவேறு விதமானவை என்பதால், ஒவ்வொன்றைப் பற்றியும் சுருக்கமாகவாவது தெரிந்துகொண்டால்தான் தெளிவான முதலீட்டு முடிவை எடுப்பதற்கு உதவியாக இருக்கும்!

ரியல் எஸ்டேட் முதலீடு எப்படி?

முதலில் ரியல் எஸ்டேட்டை எடுத்துக்கொள்வோம். “நிலத்தில் போடும் பணம் வீண் போகாது'' என்பது பெரியவர்கள் அனுபவம். அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த காலத்தில் ரியல் எஸ்டேட் முதலீடு நல்ல லாபத்தைத் தரவே செய்திருக்கிறது. சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை போன்ற நகரங்களில் கடந்த காலத்தில் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்தது உண்மை.

ரியல் எஸ்டேட் மூலம் கடந்த 30 ஆண்டு காலத்தில் கிடைத்த லாபமானது சராசரியாக ஆண்டுதோறும் 6% முதல் 10% வரை ஆண்டு வருமானம் கிடைத்திருக்கலாம். இது பணவீக்கத்தைவிட கொஞ்சம் அதிகமான வருமானம்தான். மேலும், வீடு வாங்கி இருக்கும்பட்சத்தில் வாடகை வருமானமும் கிடைக்கும். எனவே, இந்தியாவில் நமக்கென்று ஒரு வீடு வேண்டும்; அல்லது, ரிலாக்ஸ்ட்-ஆக வசிக்க தோட்டத்துடன் கூடிய ஒரு வீடு வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்களுக்குப் பிடித்த நகரத்தில் ஒரு வீட்டையோ அல்லது நகர்ப்புறத்துக்கு சற்று வெளியே தோட்டத்துடன் அமைந்த ஒரு வீட்டையோ வாங்கலாம்.

இதெல்லாம் ரியல் எஸ்டேட் முதலீட்டில் இருக்கும் பாசிட்டிவான விஷயங்கள். என்றாலும், இதில் இருக்கும் நெகட்டிவான சில விஷயங்களை வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பார்க்கத் தவறக்கூடாது. ரியல் எஸ்டேட் முதலீடு என்பது 10, 20 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருக்க வேண்டிய நீண்ட கால முதலீடு ஆகும். குறுகிய காலத்தில் அதில் பெரும் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டால், ஏமாற்றமே கிடைக்கும்.

‘ரியல்’ எஸ்டேட் - மாதிரி படம்

இதில் இருக்கும் முக்கியமான பிரச்னையே, வில்லங்கம் இல்லாத ஒரு சொத்தினை வாங்குவதுதான். அப்படிப்பட்ட ஒரு சொத்தினைக் கண்டுபிடிக்கவே நாம் நிறைய நேரத்தை செலவு செய்யவேண்டி இருக்கும்! தவிர, ஒரு சொத்தினை வாங்கியபிறகு அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாதபடிக்குப் பத்திரமாக வைத்துக்கொள்ள நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். பராமரிப்பு சுமை என்பது சில சமயங்களில் நிம்மதியைக் கெடுக்கக்கூடிய வகையில்கூட இருக்கும். நம்பகமான நபர்கள் இருந்தால் மட்டுமே ரியல் எஸ்டேட் சொத்துகளைப் பராமரிக்க முடியும்.

ஆக, சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில், ரியல் எஸ்டேட் முதலீடு பாதுகாப்பானதாக முதலீடாக இருந்தாலும், ஆண்டுதோறும் 10% அளவுக்குக் கூட்டு வட்டி அடிப்படையில் லாபம் தரும் என்று சொல்வதற்கு எந்த நிச்சயமும் இல்லை!

தங்கத்தில் முதலீடு பெஸ்ட்-ஆ?

அடுத்து தங்கத்தில் முதலீடு செய்வதைப் பற்றி பார்ப்போம்.

இந்தியர்களுக்கு அதிலும் குறிப்பாக தமிழர்களுக்குத் தங்கத்தில் முதலீடு செய்வது பற்றி சொல்லத் தரவேண்டிய அவசியமே இல்லை. காரணம், தமிழர்களுக்கும் தங்கத்துக்கும் உள்ள உறவு தனித்துவமானது. தங்கத்தில் இருக்கும் மிக முக்கியமான விஷயமே, பொருளாதாரம் நெருக்கடியாக இருக்கும் சமயங்களில் எல்லாம் தங்கம் என்பது மிகவும் பாதுகாப்பான முதலீடாக இருக்கும். கடந்த 20 ஆண்டுகளில் தங்கமானது சுமார் 8% முதல் 10% வரை வருமானம் அளித்துள்ளது. இந்த வருமானம் பணவீக்கமான 7% என்பதைவிட அதிகமானது. எனவே, பணவீக்கத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு கருவியாக நாம் தங்கத்தைப் பார்க்கலாம்.

தங்கமானது கடந்த ஆண்டில் 75 சதவிகிதத்துக்கும் அதிகமான வருமானத்தைத் தந்தது. இந்த அபரிமிதமான வருமானத்தைப் பார்த்து, பலரும் எக்கச்சக்கமான பணத்தைத் தங்கத்தில் போட்டார்கள். ஆனால், 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஒரே ஆண்டில் இவ்வளவு லாபத்தைத் தந்திருக்கிறது என்பதை தங்கம் வாங்க நினைப்பவர்கள் தவறாமல் கவனிக்க வேண்டும்.

GOLD
தங்கம்

கடந்த 40 ஆண்டுகளில் சில ஆண்டுகள் தங்கமானது எந்த வருமானத்தையும் தரமாலே இருந்திருக்கிறது. எந்தெந்த ஆண்டுகளில் தங்கம் பெரிய அளவில் வருமானம் தரவில்லை என்பதை தங்கத்தின் விலை ஆண்டுதோறும் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை வைத்துத் தெரிந்துகொள்ளலாம்.

தங்கம் வாங்குவதில் இருக்கும் இன்னொரு முக்கியமான குறைபாடு என்னவெனில், தங்கம் மூலம் மாதந்தோறும் எந்த வருமானத்தையும் பெற முடியாது. தங்கத்தின் விலை உயர்ந்தால் மட்டுமே அதன் மதிப்பு உயருமே தவிர, நம்மிடம் இருக்கும் சொத்தினைப் பெருக்க தங்க முதலீடு உதவாது. தவிர, தற்போது தங்கம் விலை எக்கச்சக்கமாக உயர்ந்தால் மட்டுமே நம் செல்வம் பெருகும். எனவே, அணிந்து அழகு பார்ப்பதற்கு நாம் கொஞ்சம் தங்கம் வைத்திருக்கலாமே தவிர, நம்மிடம் இருக்கும் பணத்தை எல்லாம் தங்கத்தில் முதலீடு செய்வது சரியான அணுகுமுறை அல்ல.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எப்படி?

அடுத்து, பங்குச் சந்தை அல்லது பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எப்படி முதலீடு செய்வது என்று பார்ப்போம்.

பங்குச் சந்தை முதலீடு என்பது இந்தியப் பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் பல ஆயிரம் பங்குகளை வாங்கி முதலீடு செய்வதாகும். இன்ஃபோசிஸ், எச்.டி.எஃப்.சி பேங்க். டி.சி.எஸ், அசோக் லேலண்ட் என எந்தப் பங்கை வேண்டுமானாலும் வாங்கலாம். இதில் முதலீடு செய்வதும் எளிது, பணத்தைத் திரும்ப எடுப்பதும் எளிது. ஆனால், ஒரு நிறுவனப் பங்கு எத்தகையது, நிறுவனத்தில் தொழில் எப்படிப் போகிறது, நிறுவனம் சந்திக்கும் சவால் என்ன என்பதைப் பற்றியெல்லாம் பார்க்காமல் முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் பெரிய அளவில் நஷ்டம் வருவதற்கு வாய்ப்பிருப்பதால், பங்குச் சந்தை முதலீடு பலருக்கும் பொருத்தமான முதலீடு என்று சொல்ல முடியாது. இன்றைக்குப் பலரும் டீமேட் கணக்கு தொடங்கி, அவர்களே பங்கு வாங்கி வந்தாலும், மிக மிகக் குறைவானவர்களே 10% அளவுக்கு கூட்டு வட்டி வளர்ச்சியைக் கண்டுவருகிறார்கள்.

`பங்குச் சந்தை முதலீடு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்றாலும் அது தரும் பலனை அடைய விரும்புகிறேன்' என்கிறவர்கள் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையின் மூலம் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யலாம். இதன் மூலம் ஆண்டுதோறும் 12% வரை கூட்டு வட்டி லாபத்தைப் பெற வாய்ப்பு உண்டு. பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் தவிர, முதலீட்டுக்குப் பாதுகாப்பு தரும் கடன் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்கள், கடன் சந்தை + பங்குச் சந்தை என இரு வகையிலும் முதலீடு செய்யும் ஹைபிரீட் ஃபண்டுகளிலும் முதலீடு செய்து நல்ல லாபம் பார்க்கலாம்.

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நீண்ட காலத்துக்கானவை என்றாலும், எப்போது வேண்டுமானாலும் உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். அல்லது, திரும்ப எடுக்கவும் செய்யலாம்.

Labham

அசெட் அலோகேஷன் செய்யுங்க பாஸ்...

இந்த மூன்று முதலீடுகளில் உள்ள பாசிட்டிவான, நெகட்டிவான விஷயங்களைப் பார்த்துவிட்டோம். அப்படியானால், இவற்றில் எது பெஸ்ட் என்று கேட்டால், ஏதோ ஒன்றை மட்டும் தேர்வு செய்வது சரியான விஷயமாக இருக்காது. ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டாளர், தன்னிடம் இருக்கும் பணத்தைத் தான் எடுக்க நினைக்கும் ரிஸ்க்கிற்கேற்ப இந்த மூன்றிலும் பிரித்துப்போடுவாரே தவிர, எல்லாப் பணத்தையும் ஒரே முதலீட்டில் போட மாட்டார். உதாரணமாக, உங்களிடம் ஒரு வீடு கூட இல்லையா? நீங்கள் குடியிருக்கப் போகிறீர்கள் எனில், உங்கள் சொந்தத் தேவைக்கு ஒரு வீட்டையாவது வாங்குவது அவசியம். ஆனால், ஒரு வீட்டை வாங்கியபின் அடுத்தடுத்து வீடுகளை மட்டுமே வாங்கி முதலீடு செய்வது கூடாது. இது தவறான முதலீட்டு முறை ஆகும்.

அதே போல, தினப்பயன்பாட்டுக்குப் பயன்படுகிற மாதிரி ஒருவர் 10 முதல் 20 சவரன் அளவுக்கு மட்டுமே தங்கம் வாங்கி வைத்துக்கொள்ளலாமே தவிர, 100 பவுன், 150 பவுன் என்று சேர்த்துவிட்டு, அதைப் பாதுகாக்க முடியாமல் தவிக்கக்கூடாது. அதே போலத்தான், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடும். எல்லாப் பணத்தையும் அதில் மட்டுமே வைத்திருக்கக்கூடாது.

ஒருவருடைய மொத்த போர்ட்ஃபோலியோவில் 60% முதலீடு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலும், 20% தங்கத்திலும், 20% ரியல் எஸ்டேட்டிலும் இருக்கலாம். உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோ எப்படி இருக்கிறது, இனிவரும் காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து பார்த்துவிட்டு, உங்கள் முதலீட்டு முடிவை அமைத்துக்கொண்டால், எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவில் நீங்கள் செல்வம் சேர்க்க முடியும் என்பதை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அனைவரும் கவனிக்கத் தவறக்கூடாது!

இறுதியாக, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஒரு விஷயத்தை மறக்கக்கூடாது — முதலீடு என்பது லாபம் மட்டும் அல்ல, திட்டமிடப்பட்ட நிதி பயணம். சரியாக அசெட் அலோகேஷன் செய்து முதலீடு செய்தால் மட்டுமே வெளிநாட்டு வருமானம் இந்தியாவில் ஒரு வலுவான செல்வமாக மாறும்.

NRI முதலீட்டாளர்களின் கவனத்துக்கு....

NRI முதலீட்டாளர்களே, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய உங்களுக்கு விருப்பமா? இது தொடர்பாக நீங்கள் வீடியோகாலில் நேருக்கு நேர் பேச விரும்புகிறீர்களா?

NRI Calendly - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் திட்ட ஆவணங்களைப் படித்துப் பார்ப்பது அவசியம்.

Nominee 'வாரிசு' அல்ல; வங்கிக் கணக்கு, முதலீடுகளில் நாமினியை கவனமாகத் தேர்வு செய்வது எப்படி?

நாமினி - வங்கிச் சேமிப்புக் கணக்கு முதல் முதலீடுகள் வரை அனைத்திலும் கட்டாயம் கேட்கப்படும் ஒன்று. 'நாமினி' என்ற ஒன்றைப் பார்த்ததும், கண்ணை மூடிக்கொண்டு நாம் நிரப்பும் பெயர்கள் அம்மா, அப்பா, மனைவி, கணவன... மேலும் பார்க்க

'இந்த' கணக்குப் பார்த்து கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்யுங்க #CreditCard A-Z | 5 நாள்கள் 1 கான்செப்ட்

15 வருசமா கூட இருக்கும் நண்பன்; அவனைத் தெரிஞ்சுக்க வேண்டாமா?#CreditCard A-Z | 5 நாள்கள் 1 கான்செப்ட்நாள் 2கிரெடிட் கார்டு குறித்த இன்ட்ரோவை நேற்று பார்த்துவிட்டோம். இன்று கிரெடிட் லிமிட் ப்ளஸ் கிரெடிட... மேலும் பார்க்க

NRI Corner: NRE & NRO கணக்கு - என்ன வித்தியாசம்? எதற்கு எது பெஸ்ட்?

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஒரு விஷயத்தில் குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். NRE, NRO இந்த இரண்டு கணக்குகளுக்கு என்ன வித்தியாசம், எதற்கு எந்தக் கணக்கைப் பயன்படுத்துவது சரியாக இருக்கும் என்க... மேலும் பார்க்க

சந்தை இறக்கம்: மொத்த முதலீட்டை (Lumpsum) புத்திசாலித்தனமாகச் செய்யும் STP பற்றி தெரியுமா?

பங்குச் சந்தை திடீரென இறங்கும் போது, பல முதலீட்டாளர்கள் பயந்துபோய்விடுவார்கள். “இப்போ முதலீடு பண்ணலாமா, வேண்டாமா?'' என்ற குழப்பம் அவர்களுக்கு வருவது மிக மிக இயல்பான விஷயம்.ஆனால், அனுபவம் வாய்ந்தவர்கள்... மேலும் பார்க்க

மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸில் இறங்கும் TVS நிறுவனம்!

தமிழகத்தின் தலைசிறந்த கார்ப்பரேட் நிறுவனமான டி.வி.எஸ், மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸில் இறங்குகிறது. பிஜிம் (PGIM) மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸில் களம் இறங்கத் ... மேலும் பார்க்க

25 வயதில் உங்கள் மகன், மகளுக்கு ரூ.1 கோடியைச் சேர்க்கும் எளிய வழியைத் தெரிந்துகொள்ள வேண்டுமா?

இன்றைக்கு 30, 35 வயதில் இருக்கும் பலரிடம் ரூ.1 கோடி பணம் இருக்குமா என்று கேட்டால், இருக்காது. அவர்களிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள வீடு அல்லது மனை இருக்கலாம். ஆனால், நமக்குத் தேவைப்படும்போது ஏதோ ஒரு முதலீட... மேலும் பார்க்க