கோவை: திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 75 வயது மூதாட்டி உயிரிழப்பு!
OPS : தனிக்கட்சி; விஜய்யுடன் கூட்டணி! - ரூட்டை மாற்றுகிறாரா ஓ.பன்னீர்செல்வம்?
'எடப்பாடி பழனிசாமி என்கிற பெயரை சொல்லவே அவமானமாக இருக்கிறது. பழனிசாமி இருக்கும் வரை அதிமுகவில் இணையப் போவதில்லை' என தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் வெடித்திருக்கிறார் ஓ.பி.எஸ். தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வந்து எடப்பாடியை சந்தித்த அதேநாளில் ஓ.பி.எஸ் பொங்கி தீர்த்திருப்பதுதான் ஹைலைட்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு தொண்டர் உரிமை மீட்புக்குழு என்ற அமைப்பை பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் போன்றோருடன் இணைந்து நடத்தி வருகிறார் ஓ.பி.எஸ். ஒரு கட்டம் வரைக்கும் டெல்லியின் ஆதரவு இருந்ததால் எடப்பாடிக்கு எதிராக முறுக்கிக் கொண்டிருந்தார். ஆனால், பிரதமரை சந்திக்க அப்பாய்ண்ட்மெண்ட் கொடுக்கப்படாமல் அலைக்கழிக்கப்படவே டெல்லி தன்னை கைவிட்டுவிட்டது என்பதை உணர்ந்தார். இந்த சமயத்தில் அதிமுகவில் இணைய எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்து ஆஜரானார்.
எடப்பாடி அதை கண்டுகொள்ளவே இல்லை. தொடர்ந்து விஜய்யை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தவர், திடீரென முதலமைச்சர் ஸ்டாலினை ஒரே நாளில் இரண்டு முறை சந்தித்தார். மதுரையில் மாநாடு போடப் போகிறேன் என அறிவித்தார். தேதி நெருங்க நெருங்க அதை தள்ளிப் போட்டார். தேவர் ஜெயந்தியில் டிடிவி மற்றும் செங்கோட்டையனுடன் கரம் கோர்த்தார்.
மீண்டும் தொண்டர் உரிமை மீட்புக் குழுவோடு ஆலோசனை நடத்தி, கட்சியில் தங்களை இணைத்துக்கொள்ள டிசம்பர் 15 வரை கெடு கொடுத்தார். டிசம்பர் 10 ஆம் தேதி வானகரத்தில் அதிமுக பொதுக்குழுவை நடத்திய எடப்பாடி பழனிசாமி இணைப்பு குறித்து வாய் திறக்கவே இல்லை. டிசம்பர் 15 ஆம் தேதி பாஜக தேசிய தலைமை தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஸ் கோயலை நியமித்தது. சென்னை வந்த அவர் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்திவிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்திருந்தார்.
கொந்தளிப்பு
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக 170, பாஜக 23, பாமக 23, மற்றவை 18 என்கிற உடன்பாடுக்கு வந்ததாகவும் ஓ.பி.எஸ், டிடிவியை கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ள எடப்பாடி ஒத்துக்கொண்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், பாஜக தரப்பில் தமிழிசை சௌந்தராஜன் இதை மறுத்திருக்கிறார். டிடிவியும் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
ஆனால், நேற்றிரவு ஓ.பி.எஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மூன்று சீட்டுக்காக எடப்பாடியின் தலைமையை ஏற்று என்.டி.ஏவுக்குள் செல்ல வேண்டுமா என காட்டமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து ஓ.பி.எஸ் மற்றும் டிடிவியை என்.டி.ஏவுக்குள் கொண்டு வர எதோ ஒருவிதத்தில் பேச்சுவார்த்தை போயிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதன் முடிவில்தான் ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்திருக்கின்றனர்.

`தை பிறந்தால் வழி பிறக்கும்'
'எடப்பாடி தலைமையிலான அதிமுகவோடு இணைய முடியாது. தை பிறந்தால் வழி பிறக்கும்' எனவும் ஓ.பி.எஸ் கூறியிருக்கிறார். ஓ.பி.எஸ்ஸூக்கு முன்னால் இப்போது இருப்பது தனிக்கட்சி தொடங்கும் ஆப்ஷன் மட்டுமே. அப்படி அவர் தனிக்கட்சி தொடங்கி என்.டி.ஏவுக்குள் போகவில்லையெனில் எங்கே செல்வார் என்பதுதான் இப்போதைய கேள்வி. ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டினாலும் திமுகவோடு செல்வது ஓ.பி.எஸ்க்கு பின்னடைவையே கொடுக்கும். அதிமுகக்காரன், அம்மாவின் உண்மைத் தொண்டன் போன்ற விஷயங்களை ஓ.பி.எஸ் இனி பேசவே முடியாமல் போய்விடும். அப்படியிருக்க ஓ.பி.எஸ்க்கு விஜய் ஒரு ஆப்சனாக இருப்பார். 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என ஓ.பி.எஸ் சொல்கிறார். 'ஜனவரி 10 க்கு மேல் பெரிய மாற்றம் வரும்' என தவெகவின் கூட்டங்களில் செங்கோட்டையன் பொடி வைத்து பேசிக்கொண்டிருக்கிறார்.
மேலும், தனிக்கட்சி ஆரம்பித்து விஜய்யுடன் கூட்டணி செல்வதில் ஓ.பி.எஸ்க்கு பெரியளவில் சங்கடம் இருக்காது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை விஜய்யும் ஏற்றுக்கொள்கிறார். ஜெ. பாணியில் திமுகவை தீயசக்தி என கடுமையாக விமர்சிக்கிறார். அதிமுக களத்திலேயே இல்லை என எடப்பாடியையும் சீண்டுகிறார். ஆக, எல்லாவிதத்திலும் ஓ.பி.எஸ் விஜய்யுடன் கூட்டணி செல்வதில் அவருக்கு அரசியல்ரீதியாக எந்த சங்கடமும் இருக்காது. ஜெயலலிதாவை ஏற்றுக்கொள்ளும் விஜய், அவரால் அடையாளம் காணப்பட்ட ஓ.பி.எஸ்யை கூட்டணிக்கு ஏற்றுக்கொள்ள மாட்டாரா என்கின்றனர் விவரமறிந்த புள்ளிகள்.

ஓ.பி.எஸ் மீது இன்னமுமே ஒரு உறுதித்தன்மை இல்லை. மாதத்துக்கு ஒரு முடிவை எடுக்கிறார். ஆக, தை பிறந்தால் வழி பிறக்காமல் அப்படியே யூடர்ன் போட்டு ஜகா வாங்கவும் வாய்ப்பிருக்கிறது.!
















