சென்னை: தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையைப் பாராட்டிய சௌபாக்கியா கிச்சன் அப்...
Penguin: 'வாழா என் வாழ்வை வாழவே' - வைரலாகும் ஒற்றை பென்குயின்; பின்னணி என்ன தெரியுமா?
பிரபல இயக்குநர் வெர்னர் ஹெர்சாக் 2007-ஆம் ஆண்டு இயக்கிய 'Encounters at the End of the World' ஆவணப்படத்தின் காட்சிதான் தற்போது இணையத்தில் பயங்கரமாக வைரலாகியிருக்கிறது.
பென்குயின்கள் பற்றிய அந்த ஆவணப்படத்தில், கூட்டமாகச் சேர்ந்து பென்குயின்கள் மற்றொரு இடத்திற்குப் பயணிக்கின்றன.
ஆனால், அந்தக் கூட்டத்திலிருந்து ஒரு பென்குயின் மட்டும் தனியாக விலகி நிற்கிறது. பிறகு, கூட்டமாகச் செல்லும் பென்குயின்களைத் தவிர்த்து மிக நீண்ட தூரத்திலுள்ள ஒரு மலையை நோக்கிச் செல்லத் தொடங்குகிறது.

அந்த மலையிலிருந்து பென்குயினை அழைத்து வந்தாலும், மீண்டும் அந்த மலையை நோக்கியே செல்ல விரும்பும் என அந்த ஆவணப்படத்தில் இயக்குநரும் சொல்லியிருக்கிறார்.
மரணித்துப் போவோமெனத் தெரிந்தும் ஏன் அந்தப் பென்குயின் மலையை நோக்கிச் செல்கிறது என்கிற கேள்விதான் இந்தக் காணொளியை இத்தனை வைரலாகச் செய்திருக்கிறது.
இணையவாசிகள் பலரும் அந்தப் பென்குயின் தனக்குள் இருக்கும் மனிதனைக் கண்டடைந்து சுதந்திரத்தை நோக்கிப் பயணிக்கிறது, அதற்கு என்ன வேண்டும், அது எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்பதைச் சுயமாக அறிந்து தனியாகப் பிரிந்து செல்கிறது என மோட்டிவேஷன் பதிவாகவும் இதனை வைரல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கூட்டத்திலிருந்து பிரிந்து பனி படர்ந்த மலையை நோக்கி அந்தப் பென்குயின் செல்வது குறித்து பென்குயின்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கும் டாக்டர் டேவிட் ஏன்லி, "அது உடல்நலக் கோளாறு, சுற்றுச்சூழல் காரணங்களால் தனித்துச் சென்றிருக்கலாம்" என்கிறார்.
இவரைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் பலரும், "இளம் அல்லது அனுபவமற்ற பறவைகள் பரிச்சயமான பாதையிலிருந்து விலகிச் செல்லும். நோய் அல்லது காயம் அதனைத் திசை மாறச் செய்திருக்கலாம். சில இளம் பறவைகளும் புதிய பாதைகளைச் சோதனை செய்யச் செல்லும்" என விளக்கமளித்திருக்கின்றனர்.














