Rahul Dravid: சாலையில் ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதம் செய்த டிராவிட்; இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இந்திய அணியின் முன்னாள் வீரரும், தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், சாலையில் ஆட்டோ டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டிராவிட் ஆட்டோ டிரைவரிடம் தனது காரின் முன்பக்கத்தைக் காண்பித்து கன்னட மொழியில் வாதிடுகிறார்.
பின்னர், இது குறித்து வெளியான தகவலின்படி, பெங்களூருவில் கன்னிங்ஹாம் சாலையில் நேற்று மாலை 6 மணியளவில், இந்தியன் எக்ஸ்பிரஸ் சந்திப்பிலிருந்து ஹைகிரவுண்ட்ஸ் நோக்கி டிராவிட் காரில் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது.
அப்போது, போக்குவரத்து நெரிசலில் தனது கார் மீது சரக்கு ஆட்டோ மோதியதாக டிராவிட் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். வாக்குவாதத்துக்குப் பின்னர் டிராவிட் அந்த ஆட்டோவின் பதிவு எண்ணைக் குறித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
சர்வதேச போட்டிகளில், 24,000-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாதவராக இருக்கும் டிராவிட்டின் தலைமைப் பயிற்சியின் கீழ், இந்திய அணி 2007-க்குப் பிறகு கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.