Jana Nayagan release ஆவதில் சிக்கல், நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன? | PMK | ...
திருப்பரங்குன்றம் விவகாரம்: `திமுக மற்றும் இந்தியா கூட்டணி இந்துக்களுக்கு எதிரானவை' - பியூஷ் கோயல்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் பேட்டி அளித்திருக்கிறார்.
திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.
அரசின் மேல் முறையீடு
இந்த உத்தரவு பெரும் விவாதங்களை ஏற்படுத்தி இருந்தது. நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில் இன்று ( ஜன.6) திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு தீர்ப்பு வழங்கியது.
தீபம் ஏற்றலாம்! - நீதிமன்றம் உத்தரவு
அதாவது, திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

பியூஷ் கோயல்
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் பேட்டி அளித்திருக்கிறார். "தமிழக முதல்வர் ஸ்டாலின், அவர் மகன் உதயநிதி மற்றும் திமுக அமைச்சர்கள் சனாதன தர்மத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சிப்பதும், கேலி செய்வதும், தாக்குவதும் ஒரு சாதாரண தற்செயல் நிகழ்வு அல்ல.
திருப்தி அளிக்கிறது
சனாதன தர்மத்தையே ஒழிக்க வேண்டும் என உதயநிதி கண்டிக்கத்தக்க கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு சில மாதங்களுக்கு பிறகு, முதன்முறையாக திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தடுக்கப்பட்டது.
முருகன் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பழைமையான கோயிலின் பக்தர்களுக்கு இன்று தமிழக உயர் நீதிமன்றம் நீதி வழங்கி உள்ளது. இது திருப்தியை அளிக்கிறது. பல நூற்றாண்டுகளாக முருகனை வணங்கி விளக்குகள் ஏற்றப்பட்டு வருகின்றன.

திமுக (ம) இண்டி கூட்டணி இந்துக்களுக்கு எதிரானவை
இன்று வெளியாகியிருக்கும் தீர்ப்பில் திமுக மற்றும் இண்டி கூட்டணி இந்துக்களுக்கு எதிரானவை என்பது அம்பலமாகி உள்ளது. இது பழங்கால வழக்கம் என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. மாநில அரசின் சட்டம் ஒழுங்கு குறித்த வாதம் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
அது அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனையான பிரச்னை. கடந்த காலத்தில் எந்த பிரச்னையும் இருந்தது இல்லை. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை திருப்திப்படுத்தும் நோக்கம் கொண்ட ஓட்டு வங்கி அரசியலைத் தவிர வேறு ஒன்றுமில்லை" என்று பியூஸ் கோயல் பேசியிருக்கிறார்.


















