’சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேனா?’ - எஸ்.பி.வேலுமணி சொல்வது என்ன?
Reels மோகம்: சினிமா பாடலுக்கு இயேசு சொரூபத்தைக் கொஞ்சிய பெண்; வைரல் வீடியோவுக்கு பக்தர்கள் எதிர்ப்பு
நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே இருக்கிறது, புண்ணியவாளன்புரம் கிராமம். அங்கு பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தில், ஒரு பெஞ்சில் சாய்ந்தவாறு இயேசு உட்கார்ந்திருப்பது போன்ற சொரூபம் எனப்படும் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த ஆலயத்துக்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுவார்கள். ஆலயத்துக்கு வருபவர்கள், பெஞ்சில் அமர்ந்த நிலையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட சிலையின் முன்பாக முழங்காலிட்டு அல்லது நின்றபடி பிரார்த்தனை செய்வார்கள்.
இந்நிலையில், இளம்பெண் ஒருவர், ஆலயத்தில் உள்ள இயேசு சிலை அருகில் அமர்ந்து சினிமா பாடலுக்கு ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளார்.
சினிமா பாடலுக்கு வாயசைக்கும் அந்தப் பெண், இயேசு சிலையைக் கொஞ்சுவது போல ரீல்ஸ் எடுத்து தனது இன்ஸ்டா வக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதைப் பார்த்த பலரும் அந்தப் பெண்ணுக்கு தங்கள் கண்டனங்களைப் பதிவிட்டுள்ளனர்.
இதனிடையே ரீல்ஸ் மோகத்தில் அப்பெண்ணின் செயல் தங்களது மத நம்பிக்கையை அவமதிப்பதாக இருப்பதாக உள்ளூர் மக்கள் கொந்தளிப்புடன் தெரிவித்தனர்.

இயேசு சிலையை அவமதித்து ரீல்ஸ் வெளியிடப்பட்ட சம்பவம் குறித்து பேசிய அலங்கார மாதா அன்பியத்தைச் சேர்ந்த் அருள்ஜெக ரூபர்ட், "காவல்கிணறு பங்கு, புண்ணியவாளன்புரம், வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் உட்கார்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ள இயேசு சொரூபத்தின் அருகில் அமர்ந்து பக்தர்கள் பலரும் தங்கள் கஷ்டங்களையும், துயரங்களையும் சொல்லி ஜெபம் செய்வார்கள். பக்தர்களின் அருகிலேயே இயேசு அமர்ந்திருக்கும் உணர்வை ஏற்படுத்தவே அப்படியொரு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், கிறிஸ்துவ மதத்தவரின் மனதைப் புண்படுத்தும் வகையில், இயேசு அருகில் அமர்ந்து சினிமா பாடலுக்கு டூயட் பாடுவது போல ரீல்ஸ் எடுத்து வெளியொட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
ரீல்ஸ் மோகத்தில் அந்தப் பெண் செய்த மோசமான செயலைக் கண்டித்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் கிறிஸ்துவ மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு சமயங்களைப் பின்பற்றுபவர்களும் தங்களுடைய கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
ரீல்ஸ் மோகத்தில் நடக்கும் இத்தகைய சம்பவங்களால் மத மோதல்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதால், இத்தகைய நபர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள், பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், ஆறு, கடற்கரை எனப் பல்வேறு இடங்களில் ரீல்ஸ் எடுப்பவர்கள் தற்போது கடவுள்களையும் விட்டு வைக்கவில்லை என்பது வருத்தத்துக்குரியது" என்றார்.
இதுகுறித்து தேவாலயம் தரப்பினரிடம் பேசிய போது, "ரீல்ஸ் வெளியாகி வைரலானதால் இந்த விவகாரம் பெரிதாகி விட்டது. இதனால் பொதுமக்களுக்குள் மதமாச்சர்யங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் நாங்கள் கவனமாக இந்தப் பிரச்னையைச் சுமூகமாகத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்கள்.
காவல்துறையினரிடம் இது குறித்து கேட்டதற்கு, "இந்தச் பிரச்னை தொடர்பாக தேவாலயம் தரப்பினரிடம் இருந்து எங்களுக்கு இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. ஆலயத்தில் வாட்ச் மேன் இருக்கிறார். எப்போதும் பக்தர்கள் வருவார்கள். அப்படி இருந்தும் ரீல்ஸ் எடுத்தது எப்படி என்பது புரியவில்லை. ரீல்ஸ் வைரலானதால் நாங்கள் விசாரணை நடத்தி, ரீல்ஸ் எடுத்தவர் குமரி மாவட்டம் அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடித்துள்ளோம்" என்றார்கள்.




















