கோவை: 'ஜி.டி. நாயுடு மேம்பாலம், செம்மொழி பூங்கா, வழிதவறிய யானை' - ஜூலை டூ டிசம்ப...
Rewind 2025: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் டு 40 ஆண்டுக்கால கேமரூன் அதிபர்| உலக நாடுகளில் தேர்தல்கள்
2025-ம் ஆண்டு பல நாடுகளில் தேர்தல்கள் நடந்துள்ளன. சில நாடுகளில் வழக்கமான தேர்தல்களைத் தாண்டி, ராஜினாமா, போராட்டங்களுக்குப் பிறகு தேர்தல்கள் நடந்துள்ளன.
ஜனவரி:
> இந்த ஆண்டின் முதல் மாதம் பெலரஸில் (ஐரோப்ப நாடு) அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் அலெக்சாண்டர் லுகாஷென்கோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒருமுறை... இருமுறை அல்ல... இவர் பெலரிஸின் அதிபராக ஏழாவது முறையாக பதவியேற்றுள்ளார்.
ஆனால், அந்த நாட்டில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டும், நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டும் இருக்கிறார்கள். இந்த நிலையில் தேர்தல் நடைபெற்றதால், அந்தத் தேர்தல் 'நியாயமற்றது' என உலக நாடுகள் விமர்சித்தன.
ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா இந்த தேர்தலை ஏற்க மறுக்கிறன.

பிப்ரவரி:
> ஜெர்மனியில் பிப்ரவரி மாதம் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்தவ சமூக ஒன்றியம் (CDU/CSU) கூட்டணி வெற்றி பெற்றது.
அதன் பின், மே மாதம் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் கட்சியைச் சேர்ந்த ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஜெர்மனியின் சான்சலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல்:
உட்கட்சி பூசல், மக்கள் எதிர்ப்பு போன்ற காரணங்களால், 2024-ம் ஆண்டின் இறுதியில், கனடா நாட்டின் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பின், ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில், அவரது லிபரல் கட்சியே ஆட்சியைப் பிடித்தது. ஆனால், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது மார்க் கார்னி.

மே:
போலந்தில் மே 18-ல் முதல் சுற்றும், ஜூன் 1-ல் இரண்டாவது சுற்றும் நடைபெற்ற அதிபர் தேர்தலில், லா அண்ட் ஜஸ்டிஸ் (PiS) கட்சியின் வேட்பாளர் கரோல் நவ்ரோகி சுமார் 50.9% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர் சிவிக் பிளாட்ஃபார்ம் கட்சியின் ரபேல் ட்ராஸ்கோவ்ஸ்கி.
இந்த வெற்றி, போலந்தின் அரசியல் திசையை மாற்றும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. புதிய அதிபர், ஐரோப்பிய யூனியன் விதிமுறைகளை கடுமையாக எதிர்க்கும் போக்கை கொண்டவர் என்பதால், போலந்து–ஐரோப்பிய யூனியன் உறவுகளில் பதற்றம் அதிகரிக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஜூன்:
> 2024-ம் ஆண்டு இறுதியில், தென் கொரியாவில் முன்னாள் அதிபர் யூன் சுக் யோல் போர்க்கால சட்டத்தை (Martial Law) அமல்படுத்தினார். இது அந்த நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதன் விளைவாக, அவர் ஆட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
பின்னர், ஜூன் மாதம் தென் கொரியாவில் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் ஜனநாயக கட்சியின் லீ ஜே-மியுங் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இந்தத் தேர்தல் அமெரிக்கா–கொரியா உறவுகளில் புதிய நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஜூலை:
> 2025 ஜூலை 20-ல் ஜப்பானில் நடைபெற்ற மேலவைத் தேர்தலில், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் பார்ட்டி (LDP) மற்றும் கோமேய்தோ கூட்டணி பெரும்பான்மையை இழந்தது.
இதனால் முன்பு இருந்த LDP-கோமேய்தோ கூட்டணி அரசு பலவீனமடைந்தது. தற்போது LDP தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே அரசு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய கூட்டணி பொருளாதாரம் மற்றும் பிராந்திய பாதுகாப்புப் பிரச்னைகளில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானின் பிரதமராக தகைச்சி சனே பதவியேற்றுள்ளார். ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

செப்டம்பர்:
> செப்டம்பர் 16, 2025-ல் நடைபெற்ற மலாவி (கிழக்கு ஆப்பிரிக்கா) அதிபர் தேர்தலில், முன்னாள் தலைவர் பீட்டர் முத்தாரிகா 56.8% வாக்குகளுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போதைய அதிபர் லாசரஸ் சக்வேரா தோல்வியடைந்தார். 85 வயதான முத்தாரிகா, ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார்.
> செப்டம்பர் 3, 2025-ல் நடைபெற்ற ஜமைக்கா நாடாளுமன்ற தேர்தலில், ஜமைக்கா லேபர் பார்ட்டி அதிக இடங்களை வென்று மீண்டும் ஆட்சி அமைத்தது. PNP-யை தோற்கடித்த JLP தலைவர் ஆண்ட்ரூ ஹோல்னெஸ், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமரானார். வன்முறை சம்பவங்களுக்கிடையே நடைபெற்ற இந்த தேர்தலில், JLP 34 இடங்களைப் பெற்று பெரும்பான்மை உறுதிப்படுத்தியது.
> 2025 செப்டம்பரில் நேபாளத்தில் இளைஞர்கள் தலைமையிலான பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் விளைவாக முன்னாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி பதவி விலகினார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
தற்போது முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி இடைக்கால பிரதமராக பதவியேற்றுள்ளார். நேபாளத்தில் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி அரசு மாறி வரும் நிலையில், இந்த இடைக்கால அரசும் நீண்ட காலம் நிலைத்திருக்குமா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. அரசியல் நிலைமை நிலைத்திருக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. 2026 மார்ச் 5-ல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர்:
> அக்டோபர் மாதம் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் நாட்டில் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் 92 வயதான பால் பியா வெற்றி பெற்றுள்ளார். 1982-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அந்த நாட்டை ஆண்டு வருகிறார் அவர்.
> அக்டோபர் 29, 2025-ல் தான்சானியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், CCM கட்சியின் வேட்பாளரும் தற்போதைய அதிபரான சமியா சுலுஹு ஹசான் சுமார் 97.66% வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
CHADEMA மற்றும் ACT-Wazalendo போன்ற எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டதால், முக்கிய எதிர்வேட்பாளர்கள் போட்டியிடவில்லை. இதனால் தேர்தல் முடிவுகள் குறித்து பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. சமியா சுலுஹு ஹசான், இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நவம்பர்:
நவம்பர் 16-ல் முதல் சுற்றும், டிசம்பர் 14-ல் இரண்டாவது சுற்றும் நடைபெற்ற சிலி அதிபர் தேர்தலில், ரிபப்ளிகன் பார்ட்டியைச் சேர்ந்த ஜோஸ் ஆண்டோனியோ காஸ்ட் வெற்றி பெற்றார்.
நீண்ட காலத்துக்குப் பின் சிலியில் வலதுசாரி கட்சி ஆட்சி அமைந்துள்ளது. இது லத்தீன் அமெரிக்காவில் வலதுசாரி அரசியல் போக்கின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
ட்ரம்ப்
இந்த ஆண்டின் முதல் மாதத்தில் அதாவது ஜனவரி மாதம் அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பதவியேற்றுள்ளார். 2024-ம் ஆண்டு நவம்பர் மாதமே, அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்திருந்தது... இவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
இந்த ஆண்டு உலக அளவில் நடந்த பல அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களுக்கு இவர் மிக முக்கியக் காரணம்.













.jpeg)



