செய்திகள் :

Sarvam AI: சாட் ஜிபிடி, கூகுள் ஜெமினிக்கு போட்டியாக இந்தியாவின் சர்வம் ஏ.ஐ - சிறப்பம்சம் ஓர் அலசல்!

post image

உலகமே செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பப் புரட்சியில் வேகமாகப் பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவும் இந்தப் போட்டியில் தனித்துவமான அடையாளத்துடன் களமிறங்கியுள்ளது. அதாவது `மொழிகள் பல; ஆனால் உணர்வு ஒன்று' என்ற இந்தியாவின் பன்முகத்தன்மையை, தொழில்நுட்ப உலகிலும் பிரதிபலிக்கும் ஒரு மகத்தான முயற்சிதான் `சர்வம் ஏ.ஐ' (Sarvam AI).

இதுவரை கணினித் திரைகள் பெரும்பாலும் ஆங்கிலத்தையே பேசிக்கொண்டிருந்தன. ஆனால், இந்தியாவின் கடைசி கிராமத்தில் இருக்கும் ஒரு விவசாயிக்கும், ஆங்கிலம் அறியாத ஒரு பாமரருக்கும், அதிநவீன தொழில்நுட்பத்தை அவர்களின் தாய்மொழியிலேயே கொண்டு சேர்க்கும் உயரிய நோக்கத்தில் உருவானதே இந்த சர்வம் ஏ.ஐ.

sarvam
sarvam

கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்காமல், 'நமக்கான தொழில்நுட்பம், நம் கட்டுப்பாட்டில், நம் மொழியில் இருக்க வேண்டும்' என்ற டிஜிட்டல் கனவை நனவாக்க வந்த சர்வம் ஏ.ஐ, இந்தியாவின் தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது.

சமீபத்தில் இந்த சர்வம் ஏ.ஐ நிறுவனம், ஒடிசா மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுவதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இது இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

ஒடிசாவில் 50 மெகாவாட் (50MW) திறன் கொண்ட மாபெரும் ஏ.ஐ கணினி மையத்தை அமைக்கவுள்ளனர். இது சுரங்கத் தொழில், கனரகத் தொழிற்சாலைகள் மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்குத் தேவையான பயிற்சிகளை அளிக்கவும் பயன்படுத்தப்படும். அதுபோல் சென்னையில் ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து டிஜிட்டல் சங்கமம் என்ற பெயரில் ஆராய்ச்சிப் பூங்காவை அமைக்கவுள்ளனர்.

தமிழ்நாடு அரசுடன்
தமிழ்நாடு அரசுடன்

சர்வம் ஏ.ஐ பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனம். நிறுவனர்கள் விவேக் ராகவன் மற்றும் பிரத்யூஷ் குமார் ஐஐடி மெட்ராஸின் 'AI4Bharat' ஆய்வகத்துடன் தொடர்புடையவர்கள். கூகுள், ஓபன் ஏ.ஐ போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்காமல், இந்திய மொழிகளுக்கேற்ற, இந்திய கலாசாரத்தைப் புரிந்துகொள்ளும், இந்தியாவிலேயே இயங்கும் முழுமையான ஏ.ஐ தொழில்நுட்பத்தை (Full-stack Sovereign AI) உருவாக்குவதே இவர்களின் லட்சியம்.

இவர்களின் முக்கிய தயாரிப்புகள்

* சர்வம்-1 (Sarvam-1 Model)

இது 2 பில்லியன் அளவுருக்கள் (2B parameters) கொண்ட ஒரு மொழி மாதிரி. இது 10 இந்திய மொழிகளில் (தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, ஒடியா) மிகச் சிறப்பாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த செலவில், சாதாரண கணினிகளிலும் இயங்கக்கூடியது.

* சர்வம் விஷன் (Sarvam Vision)

இது ஆவணங்களைப் படித்துப் புரிந்துகொள்ளும் ஒரு தொழில்நுட்பம் (OCR - Optical Character Recognition). கையெழுத்துப் பிரதிகள், சிக்கலான அட்டவணைகள் மற்றும் இந்திய மொழிகளில் உள்ள ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை இது மிகத் துல்லியமாகப் படித்து டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றும்.

* புல்புல் வி3 (Bulbul V3)

இது ஒரு 'Text-to-Speech' மாடல். அதாவது எழுத்துக்களைப் பேச்சாக மாற்றும் தொழில்நுட்பம்.சுமார் 22 இந்திய மொழிகளில், 35 விதமான குரல்களில் இது பேசக்கூடியது. இது மிகவும் இயற்கையாக, ரோபோ போல இல்லாமல் மனிதர்கள் பேசுவது போலவே இருக்கும்.

translate
translate

ஆவணங்களைப் படிக்கும் சோதனையில் சர்வம் விஷன் மாடல் 84.3% துல்லியத்தைப் பெற்றது. இதே சோதனையில் கூகுளின் Gemini 3 Pro (80.2%) மற்றும் ஓபன் ஏ.ஐ-யின் GPT-4o (69.8%) ஆகியவற்றை விட சர்வம் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது. இது இந்தியச் சூழலுக்கு எவ்வளவு பொருத்தமானது என்பதற்கு இதுவே சான்று.

இது எந்த வகையில் மக்களுக்கு உதவியாக இருக்கும்?

* ஆங்கிலம் தெரியாத விவசாயியும் குரல் மூலமாகவே பயிர் நோய்கள், சந்தை நிலவரம் போன்றவற்றைத் தங்கள் தாய்மொழியிலேயே கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும்.

* நீதிமன்றத் தீர்ப்புகள், நிலப் பத்திரங்கள் போன்றவற்றை ஆங்கிலத்தில் இருந்து உள்ளூர் மொழிக்குத் துல்லியமாக மொழிபெயர்க்க உதவும்.

* கிராமப்புற மாணவர்களுக்குத் தடையற்ற கல்வி வளங்களை அவர்களின் தாய்மொழியிலேயே கொண்டு சேர்க்கும்.

team
team

உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவான்களுடன் போட்டி போடுவதைத் தாண்டி, நமது மண் சார்ந்த, மொழி சார்ந்த பிரச்னைகளுக்கு நம்மால் மட்டுமே சிறந்த தீர்வை உருவாக்க முடியும் என்பதைச் சர்வம் ஏ.ஐ நிரூபித்துள்ளது. வருங்காலத்தில், அந்நியத் தொழில்நுட்பங்களை நுகர்வோராக மட்டும் இல்லாமல், உலகிற்கே முன்னுதாரணமாகத் திகழும் உற்பத்தியாளர்களாக இந்தியா மாறும் என்பதற்குச் சர்வம் ஏ.ஐ ஒரு சிறந்த தொடக்கம்.

விண்வெளிப் போரில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளும் சீனா; அசரவைக்கும் புதிய மைக்ரோவேவ் தொழில்நுட்பம்!

விண்வெளிப் பாதுகாப்புத் துறையில் சீனா ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' போன்ற செயற்கைக்கோள் கூட்டமைப்புகளை செயலிழக்கச் செய்யும் வகையில், ஒரு சக்திவாய்ந்த 'மைக்ரோவேவ... மேலும் பார்க்க

Moltbook: AI-க்கும், AI-க்கும் 'சாட்டிங்'; அதை மனிதர்கள் வேடிக்கை பார்க்கலாம்; புது ஆப்!

இந்த ஜனவரி மாதத்தின் இறுதியில், Moltbook என்கிற சமூக வலைதளப் பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இது வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாக்கிராம் போன்ற வழக்கமான சமூக வலைதளப் பக்கம் அல்ல. இது கொஞ்சம... மேலும் பார்க்க

Zozo: `இந்தியாவில் பிறந்து, உலக மேடையை நோக்கி' - 11 வயதேயான இளம் ஸ்டார்ட்அப் நிறுவனர்!

ஆத்விக் அமித் குமார் - தனக்கென இந்த உலகில் 11 வயதிலேயே முத்திரை பதித்திருக்கும் மாணவன்.ZOZO Connect என்ற ஸ்டார்ட் அப்பின் நிறுவனர் இவர். கோவையில் இருந்து சென்னை வந்த ஆத்விக், நந்தினி தம்பதியின் மகன், ... மேலும் பார்க்க

'நீங்கள் இறந்துவிட்டீர்களா?' - சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலி!

தனித்து வாழ்பவர்கள் நலமாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘Are you dead?’ என்ற செயலி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீனாவில் தனிநபர் குடும்பங்களின் எண்ணிக்கை 203... மேலும் பார்க்க