SIR: கம்பியூட்டரே இல்லா உதவி மையங்கள்; விழிபிதுங்கும் BLOக்கள்; குழம்பி நிற்கும்...
SIR: ”என் முடிவு தீர்வாக இருக்கட்டும்” - அதீத பணி அழுத்தம்; தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொற்கை பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (60). நாச்சியார்கோயில் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு SIR பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் காந்திராஜன், எஸ்.ஐ.ஆர் பணியை விரைந்து முடிக்கும் படி அழுத்தம் கொடுத்து வா, போ என சித்ராவை ஆணையர் ஒருமையில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா தூக்க மாத்திரைகளை முழுங்கி விட்டு பணிக்குச் சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து, சக ஊழியர்களிடம் நான் தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்க மாத்திரைகள் முழுங்கி விட்டேன் எனக் கூறியுள்ளார். அதிச்ச்சியடைந்த ஊழியர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆவேசமடைந்த அங்கன்வாடி மைய ஊழியர்கள் ஆணையரைக் கண்டித்து மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அங்கன்வாடி மைய ஊழியர்கள் சிலர் கூறுகையில், "எஸ்.ஐ.ஆர் சீர்திருத்த பணியில் ஈடுபடுபவர்கள் கடும் அழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே வெளி மாநிலங்களில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இந்தப் பணியை முடிக்க வேண்டும் என அழுத்தக் கொடுத்ததால் சில ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியானது. தற்போது தமிழகத்திலும் இதன் பணிகள் நடந்து வருகின்றன.

வழக்கமாகச் செய்யும் பணிகளுடன் சேர்த்து எஸ்.ஐ.ஆர் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. தவிர குறிப்பிட்ட கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர். பெறப்படும் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டிய பணியில் அங்கன்வாடி மைய ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்ரனர்.
பல காரணங்களால் இது தாமதமாகிறது. இந்தச் சூழலில் நேற்று இரவு சித்ராவிடம் பேசிய ஆணையர் காந்திராஜன் இரவுக்குள் 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் இல்லை என்றால் எனப் பேசியதோடு, வா, போ என ஒருமையில் பேசியுள்ளார்.
இதையடுத்து, 'அன்பு நிறைந்த என் குழந்தைகளுக்கு அம்மாவின் அன்பான வேண்டுகோள் பணி சுமையை என்னால் தாங்க முடியவில்லை. எஸ்.ஐ.ஆர் பணியால் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன். மாநகராட்சி ஆணையர் நேற்று இரவு தொலைபேசி மூலம் (மேற்பார்வையாளர் கார்த்திகேயனுடன்) யாரை வைத்து என்ன செய்வீர்களோ தெரியாது இரவுக்குள் நீங்கள் உங்கள் குடியிருப்புப் பகுதியில் 293 படிவங்கள் பதிவேற்றம் செய்து Nil ஆக இருக்க வேண்டும் என மிரட்டும் தொனியில் மரியாதை குறைச்சலாகப் பேசினார்.
இதை என்னால் தாங்க முடியவில்லை. இதுவரை எத்தனையோ பணிகளைச் செய்துள்ளேன். இப்போது கடினமாக இருக்கிறது. என்னுடைய இந்த முடிவு ஒரு தீர்வாக இருக்கட்டும். என் இந்த முடிவுக்கு இந்த நிர்வாகமே பொறுப்பு' என எழுதி வைத்து விட்டு 84 மாத்திரைகளை முழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இனி வரும் காலங்களில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்ற எந்த ஒரு துறை பணிகளையும் செய்ய இயலாது என்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு புரட்சிகரமான செயல்பாடுகளுடன் செயல்பட வாழ்த்துக்களைத் தெரிவித்து விடைபெறுகிறேன் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல வேளையாக சக ஊழியர்களிடம் தெரிவித்ததால் அவரை மீட்டு சிகிச்சையில் சேர்த்திருக்கிறோம். மருத்துவமனையில் சித்ராவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றனர்.
ஆணையர் காந்திராஜன் தரப்போ, 'சித்ராவை ஒருமையில் பேசவில்லை, விரைந்து பணிகளை முடிக்க வேண்டும்' என்றுதான் சொல்லப்பட்டது என்கிறார்கள்.
















