அடுத்தடுத்த சிக்கல்கள்; திமுகவை நெருக்கும் கூட்டணி கணக்குகள்! என்ன முடிவெடுக்கப்...
T20 WC: இந்தியா vs பாக் மோதல் டு கரீபியன் மந்திரம் வரை! - ICC டி20 உலகக்கோப்பை வரலாறு - ஓர் பார்வை
டெஸ்ட் மேட்ச், ஒன்டே, போன்ற வடிவங்களைக் கொண்ட கிரிக்கெட்டை கூடுதல் விறுவிறுப்பாகவும் ரசிகர்களின் ரசனை ஆகவும் மாற்றியதும் தான் டி20 கிரிக்கெட்.
குறைந்த நேரம்… அதிக அதிரடி… ஒவ்வொரு பந்திலும் முடிவு மாறக்கூடிய பரபரப்பு… இதுதான் டி20,
அந்த வடிவத்தின் உச்ச மேடைதான் ஐசிசி டி20 உலகக்கோப்பை. 2007-ல் தொடங்கிய இந்த தொடர் இன்று கிரிக்கெட் உலகின் மிகப் பெரிய திருவிழாக்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.

2007-ல் தொடங்கிய இந்த தொடர், 2026-ல் தனது 10-வது சீசனை எட்டியிருக்கிறது.
பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை, இந்தியா - இலங்கை இணைந்து நடத்தும் இந்த உலகக் கோப்பைக்கு முன், கடந்த 10 ஆண்டுகளின் டி20 உலகக்கோப்பை வரலாற்றை நினைவு கூர்வோம்.
2007 – முதல் உலகக் கோப்பையே இந்தியா – பாகிஸ்தான் மோதல்!
முதல் டி20 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. கிறிஸ் கெயிலின் முதல் டி20 சதம், யுவராஜ் சிங்கின் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள், பௌல்-அவுட் விதி அறிமுகம், இளம் தோனியின் சிறந்த கேப்டன் பொறுப்பு பல விஷயங்கள் பேசப்பட்டன.
இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடந்தது. கடைசி ஓவரில் மிஸ்பா உல் ஹக்கின் ஸ்கூப் ஷாட் ஸ்ரீசாந்தின் கைகளில் சிக்க, இந்தியா முதல் டி20 உலக சாம்பியனாக மகுடம் சூடியது.

2009 – இங்கிலாந்தில் பாகிஸ்தான் வெற்றி
இரண்டாவது டி20 உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்றது. அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி இலங்கை நிர்ணயித்த இலக்கை எளிதாக துரத்தி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.
2010 – இங்கிலாந்தின் முதல் உலக வெற்றி
2010 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றது.
உள்நாட்டில் போர் சூழல் தொடர்ந்தபோதும், ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டி20 உலகக் கோப்பியில் தைரியமான ஆட்டத்தால் உலகக் கவனத்தை ஈர்த்தது.
ஆஸ்திரேலியா வழக்கம்போல் உலகக்கோப்பை அரங்கில் தன் கடுமையான முகத்தைக் காட்டி இறுதிப்போட்டியை எட்டியது.

இறுதிப்போட்டியில், அதிரடி பேட்டிங் கொண்ட இங்கிலாந்து அணி, பால் காலிங்வுட், கெவின் பீட்டர்சன் போன்றோரின் அனுபவத்துடன் ஆஸ்திரேலியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பார்படோஸில், இங்கிலாந்து தனது வரலாற்றிலேயே முதல் உலகக் கோப்பையை கைப்பற்றி, டி20 கிரிக்கெட்டில் புதிய சக்தியாக தன்னை நிலைநிறுத்தியது.
2012 – வெஸ்ட் இண்டீஸ் கொண்டாட்டம்!
2012 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தென்னாசிய மண்ணில் (இலங்கை) நடைபெற்றது.
சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தாலும், நெட் ரன் ரேட் காரணமாக அரைஇறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்.
அரைஇறுதியில், இலங்கை அணி பாகிஸ்தான் பேட்டிங்கை முற்றிலும் சிதைத்து, இலங்கையை தங்கள் சொந்த மண்ணில் நடைபெறும் இறுதிப்போட்டிக்குக் கொண்டு சென்றது.

மறுபுறம் அரைஇறுதியில், கிறிஸ் கெய்லின் 41 பந்துகளில் 75 ரன்களுடன் 205 ரன்கள் குவித்த மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியாவை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது.
இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி ‘கங்கம் ஸ்டைல்’ நடனத்துடன் கொண்டாடிய அந்த தருணம், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் மறுபிறவியாக உலகம் முழுவதும் பேசப்பட்டது.
2014 – கோலியின் சாதனை… ஆனால் கோப்பை இலங்கைக்கு...!
2014 ஆம் ஆண்டு நடத்த டி20 உலகக்கோப்பையில், அணிகள் எண்ணிக்கை 16 ஆக விரிவாக்கப்பட்டது.
இந்தத் தொடரின் அரைஇறுதியில், விராட் கோலி 44 பந்துகளில் 72 ரன்கள் குவித்து, வலுவான தென்னாப்பிரிக்க பந்துவீச்சை அடக்கி, இந்தியாவை இறுதிப்போட்டிக்குக் கொண்டு சென்றார்.
இறுதிப்போட்டியில், கோலியின் அதிரடி காரணமாக இந்தியா 130 ரன்களை இலக்காக வைத்தது.

ஆனால், இலங்கையின் தூண்களான குமார் சங்கக்காரா - மஹேலா ஜெயவர்தனே ஜோடி, 2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதியில் இந்தியாவிடம் சந்தித்த தோல்விக்குப் பழிதீர்த்து, இலங்கைக்கு முதல் டி20 உலகக் கோப்பையை பெற்றுத் தந்தது.
இந்தத் தொடரில் கோலி எடுத்த 319 ரன்கள், இன்றுவரை டி20 உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையாகத் திகழ்கிறது.
2016 – கடைசி ஓவரில் கரீபியன் மந்திரம்!
2016 ஆம் ஆண்டு முதன்முறையாக இந்தியா டி20 உலகக் கோப்பையை நடத்தியது.
இந்தத் தொடரின் அரைஇறுதியில், கோலி தலைமையிலான இந்திய அணி 193 ரன்கள் என்ற வலுவான இலக்கை உருவாக்கின.
ஆனால், லெண்டில் சிம்மன்ஸின் அதிரடி ஆட்டம், கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் கனவுகளை சிதைத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதிப்போட்டிக்குக் கொண்டு சென்றது.
இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் டி20 உலகக் கோப்பையை மீண்டும் கைப்பற்றி, ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்தது.

2021 -ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம்
ஐந்தாண்டு இடைவெளிக்கு பிறகு 2021 ஆம் ஆண்டு ஏழாவது டி20 உலக கோப்பை தொடர் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
இதில் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி முதல் முதலாக கோப்பையை கைப்பற்றியது.
2022 – இரண்டாவது முறை சாம்பியனான இங்கிலாந்து
ஆஸ்திரேலியாவில் 2022 ஆம் ஆண்டிற்கான எட்டாவது உலகக்கோப்பை நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதின. மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் வைத்த நடுத்தர இலக்கை ஹாரிஸ் ரஃப் வேகப்பந்துவீச்சால் காத்தது.
ஆனால், பென் ஸ்டோக்ஸ் களத்தில் நின்று வரலாற்றை மாற்றினார். அழுத்தமான சூழலில் விளையாடிய அவரது பொறுப்பான பேட்டிங், பாகிஸ்தானின் கனவுகளை உடைத்து, இங்கிலாந்துக்கு இரண்டாவது டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்தது.

2024 – இந்தியாவின் மறக்க முடியாத மகுடம்!
17 ஆண்டுகளுக்கும், 9 தொடர்களுக்கும் பிறகு, முதன்முறையாக உலகக்கோப்பைத் தொடர் 20 அணிகளாக விரிவாக்கப்பட்டது.
இந்தியாவின் மூத்த நட்சத்திரங்கள், தோல்வியே அறியாமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில், கடைசி ஓவர் முதல் பந்திலேயே சூர்யா குமார் யாதவ் அசத்தலான கேட்ச் பிடித்ததுடன் உலகக்கோப்பையையும் சேர்த்து பிடித்து இந்தியாவில் உள்ள பல கோடி மக்களின் மனதிலும் இடம்பிடித்தார்.
சாத்தியமற்றது போல தோன்றிய தருணத்தில் அசத்தலான வெற்றியைப் பெற்று, தென் ஆப்பிரிக்காவின் கனவுகளை சிதைத்த இந்தியா இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

அந்த இரவில், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் கோப்பையுடன் சேர்ந்து, தங்கள் டி20 பயணத்தையும் சாம்பியன்களாக முடித்தனர்.
மீண்டும் கோப்பையைக் கைப்பற்றி இந்தியா சாதனைப் படைக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.



















