`சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்' - செல்வப்பெருந்தகை...
`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்' - ட்ரம்ப்-ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த சர்ச்சை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை "வெனிசுலாவின் தற்காலிக அதிபர்" எனப் பதிவிட்டிருக்கும் செய்தி, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த மாத தொடக்கத்தில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம்சாட்டிய அதிபர் ட்ரம்ப் நிர்வாகம், வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. நிக்கோலஸ் மதுரோவையும், அவரின் மனைவி சிலியா ஃபுளோரஸையும் ஜனவரி 3-ம் தேதி கைதுசெய்து, அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது. அதிபர் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் சர்ச்சையானது.

இதற்கிடையில், கைதுசெய்யப்பட்ட நிக்கோலஸ் மதுரோவும், அவரின் மனைவியும் அமெரிக்காவின் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா உட்பட பல நாடுகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றன.
இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ``சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்" எனக் குறிப்பிட்டு கவலை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நேற்று ட்ரூத் சோஷியலில் ட்ரம்ப், ``கியூபா வெனிசுலாவிலிருந்து கிடைத்த பெரும் அளவிலான எண்ணெய் மற்றும் பணத்தைக் கொண்டு வாழ்ந்து வந்தது. அதற்குப் பதிலாக, கியூபா இரண்டு வெனிசுலா சர்வாதிகாரிகளுக்கும் பாதுகாப்பு சேவைகளை வழங்கியது. ஆனால் இனிமேல் அது நடக்காது.

கியூபாவிற்கு இனி எண்ணெய், பொருளாதாரம் என எதுவும் செல்லாது. காலம் கடந்துபோவதற்குள், கியூபா ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்" என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, அவரின் பதிவில் விக்கிப்பீடியா சுயவிவரப் பக்கத்தின் எடிட் செய்யப்பட்டப் படத்தைப் பகிர்ந்திருந்தார். அதில், `` 'வெனிசுலா நாட்டின் தற்காலிக அதிபர்' - பதவிக்காலம் ஜனவரி 2026" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வெனிசுலாவின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அதிகாரபூர்வமாக தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












