``கவாஸ்கர் சார் கிட்டாருடன் நான் ரெடியாக இருக்கேன்" - வாக்குறுதியை நினைவூட்டிய ஜ...
TVK : 'அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு எங்களை ஏன் அழைக்கவில்லை?' - தவெக காட்டம்!
அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதுசம்பந்தமாக மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை வருகிற 6 ஆம் தேதி தமிழக அரசு கூட்டவுள்ளது. இந்நிலையில், அந்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததை கண்டித்து தவெகவின் இணை பொதுச்செயலாளரான சி.டி.ஆர். நிர்மல் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, ' மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள், மக்களைச் சந்திப்பதும் பரப்புரை மேற்கொள்வதும் இயல்பான ஒன்று. அது அவர்களின் உரிமையும் கூட. உரிய அனுமதி பெற்று நடைபெறும் அரசியல் கட்சித் தலைவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின் போது, அங்கிருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் போதிய பாதுகாப்பு வழங்குவது அரசாங்கத்தின் தார்மீகக் கடமை. தமிழக வெற்றிக் கழகம், இதைப் பலமுறை தொடர்நது வலியுறுத்தி வந்திருக்கிறது.

தமிழக மக்களின் உரிமைக் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் நம் வெற்றித் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் யாருக்கும் விதிக்கப்படாத நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. ஆனாலும், சட்டம் ஒழுங்கை மதிப்பதற்காகவே அவற்றையும் தமிழக வெற்றிக் கழகம் ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்களின் பரப்புரை, ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாள்களில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில், பொது வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம், வருகிற 6.11.2025 அன்று மூத்த அமைச்சர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளுக்கு மட்டும் தமிழக அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அப்படி என்றால் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்த நிபந்தனையா? என்ற கேள்வி எழாமல் இல்லை.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியபோது, அந்தக் கூட்டத்திற்கு எந்த அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பதை ஆட்சியாளர்கள் விளக்குவார்களா?

தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தை நோக்கி இருப்பதால், அனைத்துக் கட்சிகளும் பரப்புரை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றன. இந்தச் சூழலில், பொது வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆக்கப்பூர்வமான கருத்துகளைக் கேட்க மறுக்கிறார்கள். இது, த.வெ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பரப்புரை நிகழ்ச்சிகளை முடக்கும் வகையில் நெறிமுறைகளை வகுக்கச் சதித்திட்டம் நடைபெறுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற கட்சிகளும் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசின் நிபந்தனைகள் இருக்க வேண்டும். இல்லையேல், நீதிமன்றம் வழியாக உரிய தீர்வு காண, தமிழக வெற்றிக் கழகம் சட்டப் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதைக் கழகத்தின் வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.' எனக் கூறியிருக்கிறார்.














