உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரம...
Visualisation: உங்கள் கனவுகளை நிஜமாக்கும் ஒரு டெக்னிக் இது!
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்றதுக்கு இதுவும் ஒரு காரணம் என, கிரிக்கெட் வீராங்கனைகளே குறிப்பிட்ட அந்த விஷூவலைசேஷன் (Visualisation) பற்றி உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் ஒரு விஷயத்தை சாதிக்க ஆசைப்பட்டிருப்பீர்கள். உதாரணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட கம்பெனியில் வேலைபார்க்க ஆசைப்பட்டிருப்பீர்கள். எத்தனையோ நாள்கள் அந்த ஆசையை மனதுக்குள் ஓட்டியபடி இருந்திருப்பீர்கள். 'அந்த கம்பெனியில மட்டும் எனக்கு வேலை கிடைச்சிட்டா எப்படியெல்லாம் வேலைபார்ப்பேன் தெரியுமா' என்கிற கற்பனையை எத்தனையோ தூக்கம் வராத இரவுகளில் மனதுக்குள் ரீவைண்ட் செய்து செய்து பார்த்திருப்பீர்கள். ஒருநாள் நீங்கள் ஆசைப்பட்ட அந்த கம்பெனியிலேயே வேலை கிடைக்கிறது. வேலைபார்க்க ஆரம்பிக்கிறீர்கள்.
அப்போது, சில வேலைகளை செய்யும்போது, 'இதை ஏற்கெனவே இங்கே செய்ததுபோலவே இருக்கிறதே' என்று சில நேரங்களில் தோன்றும். ஆனால், அது என்னவென்று புரியாமல் அதை அப்படியே கடந்துசென்றிருப்பீர்கள். அதற்கு காரணம், அந்த கம்பெனியில் நீங்கள் ஏற்கெனவே வேலைபார்ப்பதுபோல மனதுக்குள் கற்பனை செய்து பார்த்ததுதான். அப்படி கற்பனை செய்துபார்ப்பதன் பெயர்தான் விஷூவலைசேஷன் (Visualisation).
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வென்றதில் இருந்து இந்த விஷூவலைசேஷன் என்கிற வார்த்தை பலராலும் உச்சரிக்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா பேசுகையில், 'போட்டிக்கு முந்தைய நாளில் மைதானத்தில் 45 நிமிடங்கள் அமர்ந்து நாங்கள் உலகக்கோப்பையை வென்றதைப்போல மனதுக்குள் சித்திரமாக ஓட்டி பார்த்துக்கொண்டோம். அந்த 'Visualisation' பயிற்சி எங்களின் வெற்றிக்கு பெரியளவில் உதவியது' என்றார்.

இன்னொரு வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவும், 'நேற்று ஒரு 'Visualisation' செஷனில் கலந்துகொண்டோம். நாங்கள் உலகக்கோப்பையை வென்றதைப்போல மனதுக்குள் சித்திரத்தை ஓடவிட்டுக் கொண்டோம். அது எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்தது' என்றார். நாம் சாதிக்க ஆசைப்படுகிற ஒரு விஷயத்தை மனதுக்குள்ளே ஒரு படம்போல அசைபோட்டுக்கொண்டே இருந்தால், அதில் வெற்றிபெறுவதற்கான உத்வேகத்தை 'Visualisation' நமக்கு தரும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். இதுபற்றி தெளிவாக தெரிந்துகொள்ள மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம் அவர்களிடம் பேசினோம்.
''பொதுவாகவே, மனித மூளையானது 'பரீட்சையில் தோற்றுவிட்டால் என்ன செய்வது; இன்டர்வியூவில் தோற்றுவிட்டால் என்ன செய்வது; கூட்டத்தில் பேசும்போது எல்லோர் முன்னாலும் திக்கிவிட்டால் என்ன செய்வது' என நெகட்டிவாக அதிகம் யோசிக்கும். இதனால், 'தோத்துப்போயிடுவோமோ... தோத்துப்போயிடுவோமோ...' என நினைத்து நினைத்தே, அது அப்படியே நிகழ்ந்துவிடவும் வாய்ப்பிருக்கிறது.
மனதுக்குள் கற்பனை செய்துபார்த்தல் அல்லது மனதுக்குள் காட்சிப்படுத்தல் என்கிற (Visualisation) டெக்னிக்கின் அடிப்படை என்னவென்றால், நீங்கள் எதை சாதிக்க விரும்புகிறீர்களோ, அதை தத்ரூபமாக மனதுக்குள் கற்பனை செய்துபார்ப்பதோடு, அதை ஏற்கெனவே சாதித்துவிட்டதைப் போலவும் நினைத்துப்பார்க்க வேண்டும். எப்படியென்றால், இன்டர்வியூவுக்கு செல்கையில் பதற்றத்தில் உங்கள் உடல் இறுக்கமாக இருக்கும். ஆனால், இப்படி மனதுக்குள் விஷூவலைசேஷன் (Visualisation) செய்துபார்க்கையில், கண்களை மூடி, ஆழமாக சுவாசித்து, உடல் இறுக்கமில்லாமல் இருப்பதுபோல கற்பனை செய்ய வேண்டும். இப்படியே செய்துகொண்டிருக்கும் ஒரு நபர், நிஜத்தில் இன்டர்வியூவுக்கு செல்கையில் பதற்றமில்லாமல் இருப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.
உலகக்கோப்பை வென்ற விஷயத்தில் இந்த விஷூவலைசேஷன் (Visualisation) எப்படி நடந்திருக்கும் என்றால், 'சூப்பராக விளையாடுகிறோம்', 'நிறைய ரன் எடுக்கிறோம்', 'கடைசி நேரத்தில் ஒரு விக்கெட்டை எடுக்கிறோம்', 'உலகக்கோப்பையை வென்று அதை கைகளில் ஏந்துகிறோம்', 'அதை புகைப்படம் எடுக்கிறார்கள்', 'அந்த நேரத்தில் எங்களுடைய உடம்பு புல்லரிக்கிறது', 'எங்கள் வெற்றியைக் கொண்டாட வெடிக்கிற பட்டாசுகளின் ஒலி கேட்கிறது', 'ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்', 'நாங்கள் வெற்றிபெற்றதற்கான இசை ஒலிக்கிறது', 'பட்டாசு வாசனை எங்கள் நாசியில் நுழைகிறது' என, உலகக்கோப்பை தொடர்பான பல பாசிட்டிவான விஷயங்களை கண்களை மூடி கற்பனை செய்ய சொல்லியிருப்பார்கள். இதனால், அந்த வீராங்கனைகளில் உடலில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியை உணர வைத்திருக்கும் இந்த விஷூவலைசேஷன் டெக்னிக்.
இந்தப் பயிற்சியை அடிக்கடி செய்கையில், 'நம்மால் முடியும்; நம்மால் இந்தப் போட்டியில் ஜெயிக்க முடியும்' என்கிற நம்பிக்கை வந்துவிடும். நான் மட்டும் கடினமாக உழைத்தால், இந்தக் கனவை என்னால் நிஜமாக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையும் வரும். பயிற்சியின் முடிவில் அவர்களை மெள்ள மெள்ள நிஜ உலகுக்கு வரவழைத்து, இதே உணர்வுடன் போட்டியில் விளையாடுங்கள் என்று அறிவுறுத்தியிருப்பார்கள். இதன் விளைவாக, வீராங்கனைகள் பயமும் பதற்றமுமில்லாமல் தன்னம்பிக்கையுடன் எதிரணியை எதிர்கொண்டிருப்பார்கள். பயிற்சியின்போது கற்பனையில் கண்ட வெற்றியை நிஜத்திலும் பெற்றுவிட்டார்கள்.
இந்த டெக்னிக்கை, வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் அப்ளை செய்யலாம். ஓர் உளவியல் ஆலோசகர் அல்லது மருத்துவரிடம் முறைப்படி இந்த டெக்னிக்கை எப்படி செய்வது, பயிற்சி முடிந்ததும் படிப்படியாக எப்படி நிஜ உலகத்துக்கு வருவது என கற்றுக்கொண்டு, செய்ய ஆரம்பியுங்கள். உங்கள் கனவுகளும் நனவாகும்'' என்கிறார் டாக்டர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.











