ஈரோடு: சிலம்பம் சுற்றி, கயிறு இழுத்த ஆட்சியர்... களைகட்டிய பொங்கல் விழா | Photo...
Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம்
தேர்தல்ல இதெல்லாம் நடந்திச்சா, இப்படிஎல்லாம் நடந்திச்சா என நிறைய சம்பவங்கள் கொட்டி கிடக்கிறது. இன்னைக்கு கட்சி பாட்டுகளையே `வைப்' செய்யும் இளம் வாக்காளர்களுக்கு இதெல்லாம் சொல்ல வேண்டியது அவசியம். அது குறித்து தான் பார்க்க போகிறேம் `Vote Vibes' தொடரில்..!
1996 சட்டப் பேரவைத் தேர்தல்.
திமுகவிலிருந்து பிரிந்து மதிமுக உதயமான பிறகு நடந்த முதல் தேர்தல். எம்.ஜி.ஆர். பிரிந்த போது கூட திமுக சலசலக்கவில்லை. மாறாக வைகோ வெளியேறிய போது பத்துக்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் அவருடன் சென்றனர்.
வைகோவுக்காக அதுவரை திமுகவில் இருந்த நொச்சிப்பட்டி தண்டபாணி, உப்பிலியாபுரம் வீரப்பன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், கோவை பாலன் உள்ளிட்ட தொண்டர்கள் சிலர் தீக்குளித்தனர்.
எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், பொன் முத்து ராமலிங்கம் முதலான திமுகவின் முக்கிய முகங்கள் வைகோவுடன் கரம் கோர்த்தனர்.
இந்தப் பின்னணியில் நடந்தது தான் அன்றைய 1996 தேர்தல். எனினும் 91 முதல் ஆண்ட ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எதிரான அலை தமிழ்நாடு முழுக்க வீசியதால், திமுக தெம்பாகவே இருந்தது.
தவிர நடிகர் ரஜினிகாந்தும் திமுக மற்றும் ஜி.கே மூப்பனார் தோற்றுவித்த தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதெல்லாம் களத்தில் பேசுபொருளாக இருந்தாலும் வைகோ என்ன முடிவு எடுக்கப் போகிறர் என்பதைப் பலரும் உற்று நோக்கினார்கள்.

கூட்டணிகள் இறுதியாகி, வேட்புமனு தாக்கலுக்கான நாள் நெருங்கியது.
திமுக – தமாக அணி, அதிமுக –காங்கிரஸ் கூட்டணி, இரண்டும்தான் பலமான அணிகள். வாழ்ப்பாடி ராமமூர்த்தி, ராமதாஸ் ஆகியோர் அணி சேர்ந்து ஒரு அணியை உருவாக்கி இருந்தனர்.
முதல் தேர்தலை சந்திக்கும் மதிமுக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனதா கட்சி என சில கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு தனி அணியாக களம் இறங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியைத் தேர்வு செய்தார் வைகோ. வைகோவின் அறிவிப்பு வெளியானது முதலே விளாத்திகுளம் விஐபி தொகுதியாகி விட்டது.
பல்வேறு சமூக மக்கள் வசித்து வந்தாலும் ரெட்டியார் மற்றும் நாயக்கர்கள் சமூகமே வெற்றியை தீர்மானிக்கும் இடத்திலிருக்கிற தொகுதி. வைகோ நாயக்கர்கள் ஓட்டை நம்பியே களமிறங்கினார். திமுகவில் ரவிசங்கர் என்ற இளைஞரை நிறுத்தினார்கள். ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த இவரது பூர்வீகம் இந்தப் பகுதிதான் என்றாலும் சென்னையில் வசித்து வந்தார். அதிமுகவும் ரெட்டியார் இனத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்த அவர்களின் ஓட்டுகள் பிரியுமென நம்பினார் வைகோ.

தேர்தல் முடிந்து ரிசல்ட் நாளும் வந்தது. தமிழகம் முழுக்க வீசிய ஜெ., எதிர்ப்பு அலை புதிய கட்சியான மதிமுகவையும் சேர்த்தே சுருட்டியது. வைகோவையும் விட்டு வைக்கவில்லை அந்த அலை. சுமார் 600 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் வைகோ.
ஆனால் விளாத்திகுளம் மக்களை ‘வைகோவை தோற்கடித்து விட்டோமே’ என பிறகு வருந்தும் ஒரு நிலைக்குத் தள்ளி விட்டார் ரவிசங்கர்.
ஜெயித்ததும் கூட்டுறவு சங்கத் தலைவராகவும் தேர்வான ரவிசங்கர் பொதுமக்களின் பணத்தைச் சுருட்டி ஊழல் செய்து கைதானதெல்லாம் நடந்தது.
தொடர்ந்து போதை மருந்து கடத்தல் நெட் ஒர்க்குடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக செய்திகள் வெளியாகின. கைதாகி நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற வழியில் போலீஸ் கண்ணீல் மண்ணைத் தூவி விட்டுத் தப்பி ஓடினார். சென்னையில் பகலில் ஒரு வீட்டில் வருமான வரி அதிகாரியாக நடித்து கொள்ளை அடிக்க முயன்று போலீஸில் மாட்டினார்.

இப்படி நீண்டன அவரது கிரைம் ரெக்கார்டுகள். தற்போது அவர் மீதான வழக்குகள் என்னவானது? ஆள் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை.
இப்போதும், ’வைகோ நின்ன தொகுதில்ல’ என யாரையாவது கேட்டால், ’ஆமாங்க ஒரு பெரிய தலைவரை எப்படிப் பட்ட ஆள்கிட்டத் தோற்க விட்டுட்டோம்’ என ஒரு அங்கலாய்ப்பு இந்தப் பகுதி மக்களிடம்க் கேட்கலாம்.
















