IND vs ENG: அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்ற இந்...
With Love Review: பள்ளிக் காதலைத் தேடும் கலகல பயணம் - லப் டப்புகிறதா இந்த வித் லவ்?
சென்னையில் டிசைனராக இருக்கும் சத்யாவுக்கு (அபிஷன் ஜீவிந்த்), அவருடைய அக்கா (ஆர்.ஜே. ஆனந்தி) திருமணத்திற்காக பெண் பார்க்கிறார். அவ்வகையில், அவரைச் சந்திக்க வரும் பெண்தான் மோனிஷா (அனஸ்வரா ராஜன்).
முதல் முறையாக இருவரும் பேசும்போதுதான், அவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது தெரிய வருகிறது. பிறகு, இருவரும், அவர்களின் முதல் காதல் கதையைப் பேசத் தொடங்குகிறார்கள்.
இருவரின் முதல் காதலும் வெளிப்படுத்தாமலே முடிவை எட்டியிருக்கிறது என்பதை அறிபவர்கள், தங்களின் முன்னாள் காதலர்களைச் சந்தித்து 'நாம் அவர்களைக் காதலித்தோம்' என்பதை மட்டும் தெரியப்படுத்திவிட்டு வந்துவிடலாம் எனத் திட்டம் போடுகிறார்கள்.

இந்தப் பயணத்தில் இருவரும் உணர்ந்துகொள்ளும் விஷயமென்ன, அவர்களுடைய முன்னாள் காதலர்களைச் சந்தித்துப் பேசினார்களா, சத்யா - மோனிஷாவின் உறவு என்னவானது என்பதை காமெடி, காதல் ததும்பச் சொல்கிறது அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் 'வித் லவ்' திரைப்படம்.
பள்ளி மாணவராகத் துறுதுறு முகம் காட்டும் இடம், இளைஞனான பிறகு ஏகாந்தமாகச் சுற்றித் திரியும் இடம் எனச் சமகால இளைஞராக அறிமுகப் படத்திற்குக் கச்சிதமான பங்கைக் கொடுத்திருக்கிறார் அபிஷன் ஜீவிந்த்.
ஆனால், போதையில் உளறும் காட்சிகளிலும், அதற்குப் பிறகு வரும் காட்சிகளிலும் வரும் செயற்கைத்தனமான மிகை நடிப்பிற்குக் கண்டிப்புடன் நோ சொல்லியிருக்கலாம்.
சேட்டை மிகுந்த பெண்ணாகவும், வாழ்க்கையைப் பற்றி சத்யாவுக்குப் பலவற்றை உணரச் செய்யும் பொறுப்பான பார்ட்னராகவும் நடிப்பில் தடம் பதித்து, தமிழ் சினிமாவிலும் க்ரீன் சிக்னல் பெறுகிறார் அனஸ்வரா ராஜன்.
சத்யாவின் முதல் காதலியாக வரும் காவ்யாவுக்கு நடிப்பில் பெரியளவில் வேலை இல்லை என்றாலும் இரண்டாம் பாதி காட்சிகளில் நிறைந்த முகபாவனைகளால் நம்மைக் கவர்கிறார்.

இவர்களைத் தாண்டி பள்ளி நண்பர்களாக வரும் ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன் ஒரே சமயத்தில் சிரிப்பொலி எபிசோடுகளுக்கும், எமோஷனல் பக்கத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
அக்காவாக வரும் ஆர்.ஜே. ஆனந்தி, ஆசிரியராக வரும் சரவணன் ஆகியோர் அவரவர் பங்களிப்பை நல்கியிருக்கிறார்கள்.
பள்ளிக் கால 'நாஸ்டால்ஜியா' காதல், இளைஞனான பிறகு மலரும் மாடர்ன் காதல் என்று நகரும் இந்தக் காதல் படைப்பைப் புத்துணர்ச்சியுடன் கொண்டு சென்றிருக்கிறது ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா.
முதல் பாதி காமெடிக்கான களம், இரண்டாம் பாதி எமோஷனுக்கான களம் என நேர்த்தியாகப் பிரித்து கத்தரி போட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் சுரேஷ் குமார்.
டஸ்டர், ஸ்லாம் புக், 1100 மொபைல், ஹீரோ சைக்கிள் எனக் கலை இயக்குநரின் சின்னச் சின்ன வேலைப்பாடுகளும் நம் முன் அழகிய நினைவுகளை மலரச் செய்கின்றன.
ஷான் ரோல்டன் இசையில், பாடல்களில் 'ஐயோ காதலே' பாடல் நம்மைத் துள்ளலோடு ரசிக்க வைக்க, யுவன் சங்கர் ராஜா குரலில் 'எதுக்குத்தான் இந்தக் காதல்', ஆதித்யா ஆர்.கே குரலில் 'மறந்து போச்சு' ஆகிய பாடல்கள் சார்ட்பஸ்டர்களாக நம்மைத் தொற்றிக் கொள்கின்றன.
காதல் மலரும் தருணம், மோதல், ஃபெயிலியர் எனக் காதலின் 360 டிகிரி கோணத்திற்கும் தனது பின்னணி இசையால் உயிரூட்டியிருக்கிறார் ஷான் ரோல்டன்.
மழித்த முகம், ஒட்டு வைத்த தாடி எனச் செயற்கையாகத் தெரியும் பள்ளி நண்பர்களுக்கான ஒப்பனையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சத்யா - மோனிஷாவின் கதாபாத்திர விவரிப்பு, இருவரும் இணைந்து புரட்டும் அழகிய நினைவுகள் நிறைந்த முதல் காதல் கதை என்பதாகக் கலகலப்புடன் தொடங்குகிறது படம்.
ஸ்லாம் புக், ஃப்ளேம்ஸ் பார்ப்பது, முதிர்ச்சியின்றி பதின் வயதில் காதலுக்காகச் செய்யும் சேட்டைகள் போன்ற விஷயங்களை ஏற்கனவே பல காதல் படங்களில் பார்த்துப் பழகியிருந்தாலும், அவற்றில் ஆங்காங்கே சில ஒன்லைன் காமெடிகளையும், எமோஷனையும் சேர்த்து ரசிக்க வைத்தபடியே நகர்கிறது திரைக்கதை. 'பாலாஜி' பெயர் கலாட்டாக்களும் சுவாரஸ்ய ரகளை!
இப்படியான ஃபீல்குட் வழித்தடத்தில் நம்மைக் கூட்டிச் செல்லும் திரைக்கதை, திடீரென இரண்டாம் பாதியில் மையக்கதையிலிருந்து விலகி சில தேவையில்லாத எமோஷனல் காட்சிகளில் சுழல ஆரம்பிப்பதோடு, அதீத செயற்கைத்தனமும் எட்டிப் பார்க்கிறது.
இந்த வழக்கமான மோதல் - காதல் ரூட்டை விடுத்து வேறு ஐடியா பிடித்திருக்கலாமே பாஸ்?! 'அவள் வருவாளா' பாடல் பயன்படுத்தப்பட்டிருக்கும் எபிசோடும் படம் அதுவரை இருக்கும் தன்மையிலிருந்து விலகிப் போவது ஏமாற்றமே!
மெசேஜைப் படிப்பது, வளராத 90ஸ் கிட்ஸாகவே திரிவது என நாயகன் பாத்திரமே 'ரெட் ஃப்ளேகாகவே' வெளிப்படுகிறது. முன்னாள் காதலி எபிசோடு மட்டுமே உரைநடைக்கு இடையே நிற்கும் கவிதையாக வசீகரிக்கிறது.
இரண்டாம் பாதியில் வரும் கேமியோ, களத்திற்கு அந்நியமாக இருந்தாலும் நம்மை சர்ப்ரைஸ் செய்வது ஆறுதல்! பெண்களின் நிதர்சன காதல் பக்கத்தையும், அவர்களின் மனவோட்டங்களையும் இயல்பான வகையில் பதிவு செய்யும் இடத்திற்குப் பாராட்டுகள். காதல் மீது கட்டமைக்கப்படும் வழமையான புனிதங்களை மையக்கதை உடைப்பதும் நச்!
அதேபோல யூகிக்கும்படியான, அரதப்பழசான இறுதிக்காட்சிதான் என்றாலும், அதற்கு முந்தைய காட்சிகளில் வரும் ரகளைகள் அதை ரசிக்க வைக்கின்றன.

முதல் பாதியில் நம்மைச் சிரிக்க வைத்து, இரண்டாம் பாதியில் ஆங்காங்கே நெகிழ வைத்தாலும், பழைமையான காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் கொஞ்சம் தூசி தட்டியிருந்தால் இந்த 'ஸ்லாம்புக்' இன்னுமே நெகிழ்ச்சி அளித்திருக்கும்.


















