Blast: "எனக்குள் இருந்த பயத்தை போக்கிய அர்ஜுன் சாருக்கு நன்றி" - 'ஆக்ஷன் அவதாரம்...
அதானி மீது இருந்த மொத்த வழக்கையும் க்ளோஸ் செய்த அமெரிக்கா - ட்ரம்ப் முக்கிய பங்கு?| Full Detail
கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானியை தொடர்ந்து கொண்டிருந்த அமெரிக்க நீதித்துறையின் அனைத்து குற்றச்சாட்டுகளும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
என்ன குற்றச்சாட்டு?
2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை, இந்தியாவில் மிகப்பெரிய சோலர் ஒப்பந்தத்தைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலரை லஞ்சமாக வழங்கினார்கள் கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி.
இந்த ஒப்பந்தத்தைக் காட்டி, அமெரிக்க முதலீட்டாளர்களிடம் பல பில்லியன் டாலர்களை அதானி பெற்றார் என்பது தான் அந்தக் குற்றச்சாட்டு. அதாவது இதனால் அமெரிக்க முதலீட்டாளர்கள் பாதிக்கப்படலாம் என்பதால் இந்த வழக்கு தொடரப்பட்டது.

ஏன் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது?
அமெரிக்காவின் நீதித்துறை தொடர்ந்த அந்த வழக்கு தான் தற்போது முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இதற்கு மிக முக்கியமாக மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன...
ஒன்று, இதில் அமெரிக்காவிற்கு பெரியளவில் தொடர்பு இல்லை.
இரண்டு, இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி செல்ல போதுமான சாட்சியங்கள் இல்லை.
மூன்று, இந்தியாவில் நடந்த ஒரு விஷயத்திற்கு அமெரிக்காவில் வழக்கு நடப்பதா என்கிற கேள்வி.
இதனால், அமெரிக்கா நியூயார்க்கில் நடந்த இந்த வழக்கு 'முற்றிலுமாக தள்ளுபடி' செய்யப்பட்டுள்ளது. முற்றிலுமாக தள்ளுபடி என்றால் இந்த வழக்கை மீண்டும் தொடர முடியாது என்று பொருள்.
இவ்வளவு எளிதாக அனைத்து வழக்குகளும் எப்படி தள்ளுபடி செய்யப்பட்டன?
ஒருவேளை, அமெரிக்காவின் வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தின் கீழ், கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி மீது வழக்கு தொடரப்பட்டிருந்தால், அதில் இருந்து எளிதில் வெளிவந்திருக்க முடியாது.
ஆனால், இருவர் மீது தொடரப்பட்டதோ, செக்யூரிட்டி மற்றும் Wire மோசடி மட்டும் தான். அதனால், கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இன்னும் சில வழக்குகளும்...
அதானி மீது நீதித் துறையின் சோலார் ஒப்பந்த மோசடி குற்றச்சாட்டு மட்டுமில்லை. இன்னும் சில வழக்குகளும் இருந்தன.
அமெரிக்காவின் நீதித் துறை தொடர்ந்த மாதிரியே, அமெரிக்காவின் அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமும் (SEC) சோலார் மோசடி குறித்து சிவில் வழக்கை தொடர்ந்திருந்தது.
ஆணையத்தின் வழக்கிற்கு 'தவறு செய்தோம்... செய்யவில்லை' என்கிற எந்தவொரு பதிலும் இல்லாமல், கௌதம் அதானி 6 மில்லியன் டாலர் தருவதாகவும், சாகர் அதானி 12 மில்லியன் டாலர் தருவதாகவும் ஒப்புகொண்டுள்ளனர்.
அதனால், அந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்கா தடை செய்துள்ள ஈரான் எல்.பி.ஜியை இறக்குமதி செய்ததாகவும் அதானி குழுமத்தின் மீது வழக்கு தொடர்ந்தது அமெரிக்கா. அந்த வழக்கிற்கு 275 மில்லியன் டாலர் செட்டில் செய்வதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
இதனால், இந்த வழக்கும் தற்போது க்ளோஸ் ஆகியுள்ளது.
அதானி தரப்பு கூறியது என்ன?
சோலார் மோசடி வழக்கு அமெரிக்காவில் தொடரப்பட்டதில் இருந்தே, அதானி குழுமம் கூறியது...
இந்த மோசடி என்பது இந்தியாவிற்கும், இந்திய நிறுவனத்திற்கும் சம்பந்தப்பட்டது ஆகும். இந்தச் சோலார் பத்திரங்கள் அமெரிக்காவின் பங்குச்சந்தையில் வர்த்தகம் ஆகவில்லை.
மேலும், எந்தவொரு அமெரிக்க முதலீட்டாளர்களும் நஷ்டத்தை சந்திக்கவில்லை. அமெரிக்க முதலீட்டாளர்களிடம் கொடுத்த காண்ட்ராக்ட்டில் என்ன கூறப்பட்டிருந்ததோ, அது அப்படியே நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தான் அதானி குழுமத்தின் வாதம்.

ட்ரம்ப் என்ட்ரி
ஆனால், அதானி குழுமத்தின் வாதமோ, செட்டில்மென்டோ மட்டும் அனைத்து வழக்குகளில் இருந்தும் அதானி குழுமத்தைக் காப்பாற்றி இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பங்கும் இருப்பதாக கூறப்படுகிறது.
ராபர்ட் கியுஃப்ரா - இவர் தான் அமெரிக்காவில் அதானியின் வழக்கறிஞர். இத்துடன் அவரது புரொபைல் முடிந்துவிடவில்லை. இவர் ட்ரம்பின் வழக்கறிஞரும் கூட.
கடந்த வாரம் நியூயார்க் டைம்ஸில் வெளியான செய்தி படி, ராபர்ட் ட்ரம்பிடம் பேசியுள்ளார்.
அதாவது, அதானி அமெரிக்காவில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய விரும்புகிறார். ஆனால், இந்த வழக்குகளால் அவரால் முதலீடு செய்ய முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.
இந்த இடத்தில் ட்ரம்பின் 'Make America Great Again' கொள்கையைக் கனெக்ட் செய்து பார்க்கலாம்.
இதனால் கூட, அதானியின் அனைத்து வழக்குகளும் க்ளியர் ஆகியிருக்கலாம் என்கிற பேச்சும் அடிப்படுகிறது.
எது எப்படியோ, அமெரிக்காவில் இருக்கும் அனைத்து வழக்குகளும் மூடப்பட்டுள்ளதால், அதானி குழுமத்திற்கு ஏகப்போக ப்ளஸ்... அதானி குழுமம் உலகம் முழுக்க தனது கால் தடத்தைப் பதிக்கலாம்... வழக்குகள் முடிந்ததால், முதலீடுகளும் அதிகரிக்கும் என்கிறார்கள்.



















