செய்திகள் :

அதிமுக: `எமெர்ஜென்சி ஆதரவு; பாஜக-வின் நட்பு; யாருக்குமில்லா அந்த துணிச்சல்!' | கூட்டணி சர்க்கஸ் 5

post image

ஏறுகிற மேடையிலெல்லாம் 1967 மற்றும் 1977 இல் நிகழ்ந்ததைப் போன்ற மாற்றம் 2026 லும் ஏற்படும் என தவெக தலைவர் விஜய் பேசி வருகிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் 1967 இல் திமுகவும் 1977 இல் அதிமுகவும் கூட்டணி வைத்தே தேர்தல்களை எதிர்கொண்டு முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தன. அதிலும் `தோல்வியையே சந்தித்திடாத தலைவர்' என போற்றப்படும் எம்.ஜி.ஆர், தான் அமைத்த கூட்டணிகளாலயே தோல்வியை சந்தித்த வரலாறும் உண்டு.

சிவாஜி,கலைஞர்,எம்.ஜி.ஆர்
சிவாஜி,கலைஞர்,எம்.ஜி.ஆர்

கூட்டணியிலிருந்துதான் தொடங்கியது..!

அதிமுகவின் தேர்தல் பயணமே கூட்டணியிலிருந்துதான் தொடங்கியது. 1972 இல் திமுகவுடன் ஏற்பட்ட பிணக்கில் அதிமுகவை தொடங்குகிறார் எம்.ஜி.ஆர். திண்டுக்கல் இடைத்தேர்தல்தான் அதிமுக சந்தித்த முதல் தேர்தல். அந்தத் தேர்தலையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவுடன்தான் இறங்கி எம்.ஜி.ஆர் வென்றார். அதேமாதிரி, 1977 நாடாளுமன்றத் தேர்தலையும் கூட்டணியுடன்தான் எதிர்கொண்டார்.

1975 இல் எமெர்ஜென்சியை அமல்படுத்தியதால் இந்திரா காந்தி மீது கடும் அதிருப்தி நிலவியது. திமுக எமெர்ஜென்சியை கடுமையாக எதிர்த்தது. திமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், அதிமுக இந்தியா ஒருமைப்பாட்டுடன் இருக்க வேண்டுமெனக் கூறி எமெர்ஜென்சியை முழுமையாக ஆதரித்தது.

அ.இ.அ.தி.மு.க

அதேமாதிரி, இந்திரா காந்தி மாநில கட்சிகளையெல்லாம் தடை செய்யப் போகிறார் என ஒரு தகவல் பரவவே, கட்சியின் பெயரை அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என மாற்றினார். மத்தியில் வலுவாக இருக்கும் சக்திகளோடு கரம் கோத்து நிற்பதில் எம்.ஜி.ஆர் எப்போதுமே தெளிவாக இருந்தார்.

அதன்படிதான் எமெர்ஜென்சிக்கு பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸூடன் கூட்டணி வைத்தார். இந்தியா முழுவதும் காங்கிரஸூக்கு பெருத்த அடி விழ, தமிழகத்தில் மட்டும் தலைகீழாக நடந்தது. அதிமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான இடங்களை வென்றது. திமுக - ஜனதா கூட்டணிக்கு பலத்த தோல்வி. ஆனால், அகில இந்திய அளவில் ஜனதாவின் மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.

திமுக - ஜனதா கூட்டணி
திமுக - ஜனதா கூட்டணி

அந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே சட்டமன்றத் தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் இந்திரா காங்கிரஸை கழட்டிவிட்டு விட்டு கம்யூனிஸ்ட்டுகளோடு மட்டும் தேர்தலை சந்திக்கிறார் எம்.ஜி.ஆர்.  அதிமுகவுக்கு பெரு வெற்றி. எம்.ஜி.ஆர் முதன் முதலாக முதல்வர் ஆகிறார். தஞ்சாவூர் தொகுதியில் எம்.பி ஆக இருந்த எஸ்.டி.சோமசுந்தரத்தை அமைச்சரவையில் சேர்த்தார் எம்.ஜி.ஆர். தஞ்சாவூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் இந்திரா காந்தி போட்டியிட விரும்பினார். ஆனால், மொரார்ஜி தேசாயின் அழுதத்தால் எம்.ஜி.ஆர் இந்திரா போட்டியிட ஆதரவு தெரிவிக்க மறுக்கிறார்.

இது அதிமுக - காங்கிரஸ் இடையேயான பிளவை மேலும் அதிகரித்தது. ஜனதா ஆட்சி கவிழ்ந்து 1980 இல் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. இந்த முறை எம்.ஜி.ஆர் ஜனதாவுடன் கூட்டணி வைத்தார். இந்திரா காந்தி திமுகவுடன் நெருங்கினார். இந்தத் தேர்தலின் முடிவுகள் எம்.ஜி.ஆருக்கு பெருத்த அதிர்ச்சியை கொடுத்தன. வெறும் இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டுமே அதிமுக வென்றது. தவறான கூட்டணி, பொருளாதாரரீதியிலான இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு போன்றவை எம்.ஜி.ஆருக்கு பின்னடைவை கொடுத்தது.

எம்.ஜி.ஆரின் ஆட்சி கலைக்கப்பட்டது

காங்கிரஸ் மீண்டெழுந்தது. இந்திரா காந்தி பிரதமரானார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் ஆட்சிக் கலைப்புகள் அரங்கேறியது. எம்.ஜி.ஆரின் ஆட்சியும் கலைக்கப்பட்டது. தமிழகத்துக்கு சட்டமன்றத் தேர்தல் வந்தது. திமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. தலா 109 தொகுதிகள் எனப் பிரித்துக் கொண்டனர். இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆர் கம்யூனிஸ்ட்டுகளுடன் கூட்டணிக்கு சென்றார். 'என்ன பாவம் செய்தேன்? எதற்காக என்னுடைய ஆட்சி கலைக்கப்பட்டது?' என எம்.ஜி.ஆர் மக்களிடம் நியாயம் கேட்டார். மக்கள் எம்.ஜி.ஆருக்கு பெரு வெற்றியை கொடுத்தனர்.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் தன்னுடைய ஆட்சியை கலைத்த அதே இந்திராவுடனும் காங்கிரஸூடனும் நெருக்கமானார். ஈழத்தமிழர் விவகாரங்கள் குறித்து இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கைகள் அதிமுகவையும் காங்கிரஸையும் கூட்டணி நோக்கி நகர்த்தின. 1984 இல் இந்திரா காந்தி பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார். ராஜிவ் காந்தி பிரதமரானார்.

இதே காலக்கட்டத்தில்தான் எம்.ஜி.ஆரும் நோயுற்று அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்கிறார். ராஜிவ் மத்திய அரசை கலைக்கிறார். எம்.ஜி.ஆர் தமிழக அரசை கலைக்கிறார். 1984 இல் நாடாளுமன்ற தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் ஒரு சேர வருகிறது. அதிமுக காங்கிரஸ் கூட்டணி பெருவாரியாக வெற்றி பெறுகிறது. 400+ தொகுதிகளோடு ராஜிவ் மத்தியில் ஆட்சியமைத்தார். 132 தொகுதிகளோடு எம்.ஜி.ஆர் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தார்.

அதிமுக ஜெ. அணி vs அதிமுக ஜா அணி

மூன்றாண்டுகள் எந்த சிக்கலும் இல்லை. 1987 இல் எம்.ஜி.ஆர் காலமானார். அதிமுக ஜெ. அணி ஜானகி என இரண்டாக பிரிகிறது. ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு மட்டுமே ஆதரவு என ராஜிவ் கூறுகிறார். 1989 தேர்தலில் காங்கிரஸ் தனித்து நிற்கிறது. திமுக வெல்ல, ஜெ.அணி அதிமுகவை கைப்பற்றுகிறது.

1991 தேர்தலில் அதிமுகவும் காங்கிரஸூம் மீண்டும் கூட்டணி சேர்ந்தன. ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பில் உயிரிழக்கிறார். அனுதாப அலையில் அதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு பெரு வெற்றி கிடைக்கிறது. அதிமுக 164 தொகுதிகளில் வெல்கிறது. 91-96 ஆட்சியில் அதிமுகவின் மீது கடும் அதிருப்தி. வளர்ப்பு மகன் திருமணம், வாச்சாத்தி சம்பவம், ஊழல் குற்றச்சாட்டுகள் என மக்கள் மத்தியில் அந்த ஆட்சி மதிப்பிழந்தது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

மேலும் 'ராஜிவ்வின் ரத்தத்தால் நாங்கள் வெல்லவில்லை' என ஜெயலலிதா கூறியது காங்கிரஸ்க்காரர்களை கடுப்பேற்றியது. அதிமுகவுடன் கூட்டணி வேண்டாமென போர்க்கொடி தூக்கினர். காங்கிரஸின் தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி செல்லவே விரும்பியது. காங்கிரஸ் உடைந்தது. தமாகா வை மூப்பனார் தொடங்கினார். திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். ரஜினி அதிமுகவுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தார். அதிமுக வெறும் 4 இடங்களில் மட்டுமே ஜெயிக்கிறது. காங்கிரஸின் ஸ்கோர் 0.

1998 இல் பாஜகவுடன் கூட்டணி சேர்கிறது அதிமுக. அதிமுக -பாஜக கூட்டணிக்கு பெரு வெற்றி கிடைத்தது. 96 தேர்தல் முடிந்த இரண்டே ஆண்டுகளில் அதிமுகவுக்கு கிடைத்த ஆதரவு பிரமிக்க வைத்தது. ஆனால், அதிமுக ஆதரவுடன் நடந்த வாஜ்பாயின் அரசு 13 மாதங்கள் மட்டுமே நீடித்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் 1 வாக்கில் பெரும்பான்மையை தவறவிட்டு ஆட்சி பறிபோனது. வாஜ்பாய் அரசுக்கு எதிராக நின்றது அதிமுக. பாஜக ஆட்சி போக காரணமாக இருந்ததால் காங்கிரஸ் அதிமுகவோடு இன்னும் நெருக்கமானது.

மேலும், திமுக பாஜக கூட்டணிக்குள் சென்றது. இது தமாகாவையும் அதிமுக பக்கமாக நகர்த்தியது. 2001 தேர்தலில் காங்கிரஸ், தமாகா, பாமக, கம்யூனிஸ்ட்டுகள் என பெரிய கூட்டணியை அமைத்தார் ஜெயலலிதா. அந்த வலுவான கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. 132 தொகுதிகளில் அதிமுக வென்றது.

அதிமுக - பாஜக
அதிமுக - பாஜக

இந்த ஆட்சிக் காலத்தில் மதமாற்ற தடைச்சட்டம், ஆடு, கோழி வெட்ட தடை என வலதுசாரித்தனத்தோடு சில திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தார். இதனால் பாஜக அதிமுகவோடு இணக்கம் காட்டியது. 2004 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியிலிருந்து திமுக வெளியேற, அதிமுக பாஜகவோடு சேர்ந்தது. அந்தத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அத்தனை தொகுதிகளையும் வென்றது. அதிமுகவுக்கு படுதோல்வி.

2006 சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறது அதிமுக. இது ஒரு பொருந்தா கூட்டணி. 2001-06 ஆட்சிக்காலத்தில் வைகோவை பொடாவில் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் வைத்தார் ஜெயலலிதா. அதிமுகவை பாசிச அரசு என வைகோ விமர்சித்தார். ஆனால், தேர்தலுக்கு முன்பாக எல்லாவற்றையும் மறந்துவிட்டு இருவரும் கூட்டணி வைத்தனர். கூட்டணி டேக் ஆப் ஆகவில்லை. திமுக ஆட்சியைப் பிடித்தது.

இந்த காலக்கட்டத்தில்தான் விஜயகாந்தும் வளர்ந்தார். 2006 தேர்தலில் 8% வாக்குகளை எடுத்த தேமுதிக 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 10% வாக்குகளை எடுத்தது. ஆட்சியைப் பிடிக்க விஜயகாந்தின் உதவி தேவை என்பதை ஜெயலலிதா உணர்ந்தார். சோ வழி விஜயகாந்துக்கு தூது விடப்பட்டது. தேமுதிகவுக்கு 48 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் சேர்ந்து ஒரே ஒரு பொதுக்கூட்டத்தில் மட்டுமே கலந்துகொண்டனர். ஆனாலும், இந்த கூட்டணி களத்தில் பெரியளவில் எடுபட்டது. அதிமுக 150 தொகுதிகளில் வெல்ல தேமுதிக 29 தொகுதிகளில் வென்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார்.

தேர்தலுக்கு பிறகு விஜயகாந்துக்கும் ஜெயலலிதாவுக்கும் முட்டிக் கொண்டது. சட்டமன்றத்திலேயே நாக்கை துறுத்தினார் விஜயகாந்த். கூட்டணி முறிந்தது. தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் ஐக்கியமாகினர்.

தேமுதிக | விஜயகாந்த்
தேமுதிக | விஜயகாந்த்

துணிச்சலான முடிவு

ஜெயலலிதா கூட்டணியையே வெறுத்தார். 234 தொகுதிகளிலும் இரட்டை இலையில் போட்டி என முடிவெடுத்தார். 1967க்குப் பிறகான அரசியலில் எடுக்கப்பட்ட மிகப்பெரும் துணிச்சலான முடிவாக அது பார்க்கப்பட்டது. 2014 இல் மோடியா லேடியா எனக் கேட்டு 37 தொகுதிகளில் பெற்ற வெற்றி ஜெ.வுக்கு பெரிய தெம்பை கொடுத்திருந்தது. இன்னொரு பக்கம் திமுக - காங்கிரஸ் ஒரு கூட்டணி. மூன்றாவது அணியாக மக்கள் நலக்கூட்டணி. மூன்றாவது அணி பிரித்த வாக்குகள் திமுகவுக்கு பின்னடைவாக அமைந்தது. அதிமுக 136 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. வாக்குவங்கியும் 41% ஆக அதிகரித்தது.


2016-ல் ஜெயலலிதா காலமாகிறார். அதிமுக சில துண்டுகளாக உடைகிறது. எடப்பாடி தலைமையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெருத்த தோல்வி. 2021 தேர்தலிலும் என்.டி.ஏவுக்குள்ளேயே அதிமுக தொடர்ந்தது. டிடிவியை கூட்டணிக்குள் கொண்டு வர அமித் ஷா விரும்புகிறார். எடப்பாடி கட்டையைப் போடுகிறார். கூட்டணி உடன்பாடு எட்டப்படாததால் தேமுதிகவும் கூட்டணியை விட்டு வெளியேறியது. இன்னொரு பக்கம் கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ், விசிக, மதிமுக என வலுவான கூட்டணியை வைத்திருந்தது திமுக. எதிர்பார்த்தப்படியே திமுக வெற்றி. ஆனால், அதிமுக மோசமாக தோற்கவில்லை. என்.டி.ஏவுக்கு 75 தொகுதிகள் கிடைத்தது. திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் வாக்கு வித்தியாசம் 3% மட்டுமே.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய எடப்பாடி மெகா கூட்டணி அமைப்பேன் என்றார். யாரும் அவரை நம்பி வரவில்லை. தேமுதிக மட்டுமே வந்தது. மீண்டும் தோல்வி. இந்த முறை பல இடங்களில் அதிமுகவை பாஜக மூன்றாம் இடத்துக்கு தள்ளியது.

வலுவான கூட்டணியில்லாமல் 2026 தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்கிற யதார்த்தம் எடப்பாடிக்கு புரிந்தது. புதிததாக கட்சி ஆரம்பித்த விஜய் அதிமுகவோடு கூட்டணிக்கு வருவார் என அவரை விமர்சிக்காமல் அமைதி காத்தார். விஜய் பிடிகொடுக்காமல் நகரவே வேகவேகமாக டெல்லிக்கு பயணித்து அமித் ஷாவுக்கு பொக்கே கொடுத்து மீண்டும் என்.டி.ஏவில் சேர்ந்தார்.

அமித்ஷா
அமித்ஷா

ஆறு மாதமாக பிக் அப் ஆகாமல் இருந்த அந்த கூட்டணியில் ஜனவரிக்கு மேல்தான் கொஞ்சம் வெளிச்சம் தெரிந்தது. அன்புமணி என்.டி.ஏவுக்குள் வந்தார். டிடிவி பழையதை எல்லாம் மறந்து கைக்கோத்தார். ஆனால், இன்னமும் அந்த கூட்டணி முழுமை பெறவில்லை. தேமுதிக இன்னமும் முரண்டு பிடிக்கிறது. கிருஷ்ணசாமி இன்னமும் முடிவை அறிவிக்கவில்லை. வருகிறவர்களையெல்லாம் வண்டியில் ஏற்றும் மனநிலையில் இருக்கிறார் எடப்பாடி (ஓ.பி.எஸ் தவிர்த்து). ஆனாலும் இன்னும் சிலர் தண்ணி காட்டிக் கொண்டே இருக்கின்றனர்.

மத்தியில் ஆளும் அரசுக்கு எம்.ஜி.ஆர் எப்போதுமே இணக்கமாக இருக்கும் மனநிலையிலேயே இருந்திருக்கிறார். அதற்காக அதிமுகவின் தனித்தன்மையையும் அதன் மீதான பிடிமானத்தையும் எம்.ஜி.ஆர் விட்டதில்லை. ஜெயலலிதா மத்திய அரசை எதிர்த்து நின்றிருக்கிறார். அதற்காக கடுமையான எதிர்வினைகளையும் சந்தித்திருக்கிறார். ஆனால், மத்தியில் ஆளும் கட்சியினர் ஆதிக்கம் செலுத்த எப்போதும் விட்டதில்லை. டெல்லி போயஸ்கார்டனை தேடி வந்தது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் ஜெயலலிதா மட்டும் பார்க்க முடியவில்லை என்கிற மத்திய அமைச்சர்களின் விரக்தி குரலை மறக்க முடியுமா? எடப்பாடி எம்.ஜி.ஆரும் கிடையாது. ஜெயலலிதாவும் கிடையாது. ஆனால், அவர்களின் வழி நின்று அதிமுகவை ஒரு ஆதிக்க சக்தியாக நிலைநாட்ட குறைந்தபட்ச முயற்சிகளையாவது எடுக்க வேண்டும் என்பதே ரத்தத்தின் ரத்தங்களின் விருப்பம். எடப்பாடி அதையாவது செய்கிறாரா என்பதுதான் கேள்விக்குறி!

(தொடரும்)

`கூட்டணி ஆட்சியா ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்!' - ஸ்டாலினுக்கு காங்கிரஸ் பதிலடி

'India Today' ஊடகத்தின் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருந்தார்.அவரிடம் காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "ஆட்சியில் பங்க... மேலும் பார்க்க

"தவெகவினர் மீது நாங்கள் தாக்குதல் நடத்தினோமா? நடந்தது இதுதான்"- அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

துறைமுகம் தொகுதியில் கருத்துக்கணிப்புக்காக சென்ற தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்டிருந்தனர். இந்த தாக்குதலில் அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவாளர்கள்தான் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனிடையே... மேலும் பார்க்க

'நேரு தவிர்த்ததையும் சேர்த்து' - வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும்? - மத்திய அரசின் நெறிமுறைகள்!

வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு இது.இதையொட்டி, வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும் என்கிற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். > 'மதச்சார்ப்பற்ற தேசம்' என்று முன்னாள் பிர... மேலும் பார்க்க

'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது, ஆனால்.!' - காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து ஸ்டாலின்

'India Today' ஊடகத்தின் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார். அவரிடம் காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "ஆட்சியில் ப... மேலும் பார்க்க

Naravane: பரபரப்பைக் கிளப்பும் 'Four Stars of Destiny'; நாரவனேயின் 'ஒற்றை' வாக்கிய பதில் என்ன?

இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நாரவனேயின் புத்தகம் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி'. இந்தப் புத்தகம்தான் கடந்த வாரத்தில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைப் பரபரப்பாக்கி வர... மேலும் பார்க்க