காதலர் தினம்: புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீரிலீஸ் படங்கள்! - ...
தயாரிப்பாளர் சங்க விவகாரம்: ராஜேஸ்வரியின் புகார்! - போலீஸ் நடவடிக்கைக்கு பரிந்துரைத்த மகளிர் ஆணையம்
’தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தன்னை நீக்கியதுடன், அங்கு பல பேர் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வைத்தார்கள்' என மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்த தயாரிப்பாளர் ராஜேஸ்வரி மனு மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்.
ராஜேஸ்வரி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் கதிரேசன் இருவர் மீதும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்துள்ளது.
முன்னதாக இரு தரப்புக்கும் சம்மன் அனுப்பி விசாரித்த நிலையில், நேற்று ஆணையம் தனது இறுதித் தீர்ப்பை வழ்ங்கியுள்ளது.

பதிவுத்துறை இயக்குனருக்கு அனுப்பியிருக்கும் பரிந்துரையில், `சங்கங்களில் பெண்களின் சுதந்திரம் மற்றும் மாண்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி' கூறியுள்ளது.
சினிமா கட்டுப்பாட்டில் வரும் செய்தி மற்றும் விளம்பரத் துறை செயலாளருக்கும் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைத்துள்ளது.
ராஜேஸ்வரி மகளிர் ஆணையத்தில் அளித்த புகார் தொடர்பாக ஏற்கனவே விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
’சுமார் 100 பேர் முன்னிலையில் மன்னிப்பு கேட்கச் சொன்னாங்க. நானும் மன்னிப்பு கேட்டேன்’ எனக் கண் கலங்க நம்மிடம் பேசியிருந்தார் அவர்.
தற்போது ஆணையத்தில் அவருக்குச் சாதகமாக தீர்ப்பு வந்திருக்கும் சூழலில் அவருடன் பேசினோம்.

‘’அவங்க சொன்ன எதையும் ஆணையம் ஏத்துக்கலை. பெண்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு தர்ற இந்த அமைப்பின் தீர்ப்பு மீது சம்பந்தப்பட்டவங்க என்ன நடவடிக்கை எடுக்கறாங்கன்னு பார்த்துட்டு, என்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்னனு முடிவு செய்யணும்.
ஒரு சங்கம்னா செயலாளர் பதவி ரொம்ப முக்கியமானது. அந்தப் பதவியில இருந்துகிட்டு ‘பெண்களை ஒழுங்கா மதிக்கலை நீங்க’னு இந்த மாதிரி ஒரு கண்டனத்தை வாங்கறதே எவ்வளவு அவமானம் தெரியுமா?
சங்கத்தை மட்டுமல்ல சினிமாவையே கெடுத்து நாசம் பண்ணி வச்சிருக்காங்க. அரசு சினிமாவுக்கு எவ்வளவோ செய்ய நினைக்குது. ஆனா அதையும் செய்ய விடாம, சினிமாவே தயாரிக்காதவங்களையெல்லாம் உறுப்பினராச் சேர்த்துக்கிட்டு அவங்க பண்ற அடாவடி கொஞ்ச நஞ்சமல்ல. ஆனா இதே நிலை நீடிக்காது. எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரும்’ என முடித்துக் கொண்டார்.

















