நெல்லை: SIPCOT நில எடுப்பிற்கு இழப்பீடு தர மறுப்பு; தலைகீழாக நின்று போராடிய ஓய்வ...
`அன்று திரையில் பார்த்த இடம் இன்று.!' - சினிமா ஸ்பாட்களுக்கு டைம் ட்ராவல் செய்யும் ஜெயகார்த்திக்!
சோசியல் மீடியாவில் `கோவூர் மீம்ஸ்’ ஜெயகார்த்திக் என்பவர் அன்றும் இன்றும் எனும் தலைப்பில் சினிமாவில் ஒரு படத்தின் காட்சியில் வந்த முக்கிய இடம் இன்று எப்படி இருக்கிறது என நாஸ்டாலஜியா பதிவிட்டு வருகிறார். அவரின் பதிவுகள் அதிகம் கவனம் ஈர்ப்பவையாக இருக்க `கோவூர் மீம்ஸ்’ ஜெயகார்த்திக்கிடம் பேசினோம்..
``நீங்க யார்? என்ன பண்ணுறீங்க? உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..?"
``என் பெயர் ஜெயகார்த்திக், நான் freelancing முறையில் architectural designs work பண்ணிக்கிட்டு இருக்கேன். பேசிக்கலா நான் சிவில் இன்ஜினியரிங் முடிச்சிருக்கேன்."
``இந்த நாஸ்டாலஜி ஐடியா எப்படி தோன்றியது?"
`` பொதுவாக ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்னுல ஆர்வம் இருக்கும், சிலர் சினிமா போவாங்க, டைம் கிடைச்சா பீச் போவாங்க, நான் டைம் கிடைச்சா கூகுள் மேப்பில் இடங்கள் எப்படி மாறி இருக்கு அப்படின்னு பாத்துட்டு இருப்பேன், இப்போ இல்ல, சிறுவயதிலிருந்தே காலத்தை பின்னோக்கி பார்ப்பதில் ஆர்வம் அதிகம், படங்கள் கூட டைம் ட்ராவல் படங்கள் தான் அதிகமாக பார்ப்பேன், அப்படி தோன்றியது தான் இந்த `அன்றும் இன்றும்' அப்படிங்கற ஒரு ஐடியா.

இதுலையே அடுத்த எதாவது வைத்திருக்கிறீர்களா?
``இப்போதைக்கு போஸ்ட் மற்றும் ரீல் போட்டுக்கிட்டு இருக்கேன், நிறைய பேர் இதை எப்படி செய்றீங்க எப்படி கண்டு பிடிக்கிறீங்க அப்படின்னு தொடர்ந்து கேக்குறாங்க, அதனால் அதை நான் எப்படி கண்டுபிடிக்கிறேன் அப்படிங்கறத detailed வீடியோவா போடலாம்னு ஒரு ஐடியா இருக்கு."

``யாரெல்லாம் பாராட்டுனாங்க?"
``ஆரம்பித்தது முதலே நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது, இன்றும் கிடைக்கிறது, பொதுவாக நெகட்டிவ் கமெண்ட்ஸ் நமது பக்கத்தில் அதிகமாக பார்க்க முடியாது, அந்த அளவிற்கு மக்கள் விரும்புவது எனக்கு பாராட்டு என்று நினைக்கிறேன்."
``அதிகபட்சமாக எவ்வளவு தூரம் போயிருப்பீங்க?"
`` ஆரம்பத்தில் இந்த எண்ணம் தோன்றியதே கூகுள் ஸ்ட்ரீட் வியூ மூலமாகத்தான், காலம் மாற்றத்தில் இடங்கள் எப்படி மாறி இருக்கிறது என்பதை ஸ்ட்ரீட் வியூவில் நான் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது இதை ஏன் திரைப்படத்தில் லொகேஷன் உடன் ஒப்பிட்டு காட்டக்கூடாது என்ற எண்ணம் தோன்ற இதனை ஆரம்பித்தேன்.
மக்களிடம் வரவேற்பு அதிகமாக இருந்ததால் தற்போது சமீபகாலமாக சென்னை யை சுற்றி இருக்கும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று போஸ்ட் போட ஆரம்பித்துள்ளேன், இனி வரும் காலங்களில் தமிழ்நாடு முழுக்கவும் நேரடியாக செல்லலாம் என்ற ஒரு எண்ணம் மட்டும் இருக்கிறது."

``செலிபிரிட்டி பேசிருக்காங்களா?"
``நேரடியாக பேசினார்களா? என்று கேட்டால் இதுவரை இல்லை, ஆனால் நம்மை ஃபாலோ செய்யும் போது அது அவர்களுக்கு பிடித்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது, அந்த வகையில் பல செலிப்ரிட்டிகள் என்னை ஃபாலோ செய்கிறார்கள். குறிப்பாக இயக்குனர் அட்லி, அருண் மாதேஸ்வரன், ராம்குமார் பாலகிருஷ்ணன், எடிட்டர் டி எஸ் சுரேஷ், அனிதா சம்பத், vj விஜய் உள்ளிட்ட நிறைய சினிமா பிரபலங்கள் என்னை ஃபாலோ செய்து இருப்பது எனக்கு பெரும் ஊக்கத்தை அளித்தது."
``இப்படி பன்றதால உங்களூக்கு என்ன கிடைக்குது. செலவுக்கு என்ன பண்றீங்க?"
இதன் மூலம் இதுவரை வருமானத்திற்கு நான் முயற்சி செய்யவில்லை, கிட்டத்தட்ட 3 லட்சம் ஃபாலோவர்கள் (insta 190k, facebook 100k )வைத்துள்ள போதும், ஒரு ப்ரொமோஷன் வீடியோ கூட நான் எடுத்து பண்ணியது கிடையாது, நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள், ஆனால் அது பாலோவர்களை திசை திருப்பி விடுமோ, நம்மை எதற்கு நம்பி பாலோ செய்திருக்கிறார்கள் அதற்கு பதில் இதை செய்யலாமா என்ற குழப்பத்தில் இதுவரை செய்யவில்லை, அதனால் இதன் மூலம் வருமானம் என்பது இல்லை.

இதற்காக மொபைல் மைக் இதெல்லாம் என்னுடைய செலவிலேயே பார்த்துக் கொள்கிறேன். நாம ஒரு அக்கவுண்ட் வெச்சிருக்கோம் இதற்கு எதாவது தினமும் ஒன்று போட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இதை நான் ஒரு மன நிறைவுக்காக செய்து வருகிறேன.
``உங்களோடத காப்பி பண்ணி இன்னொருவர் பண்ண வாய்ப்பிருக்கு? அதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீர்ங்க?"
``வாய்ப்பு இருப்பது மட்டுமல்ல, பல பேர் அப்படி செய்து கொண்டிருக்கிறார்கள், ஒருவரைப் பார்த்து ஐடியா எடுத்துக்கொண்டு அதை தன்னோட முயற்சியில் வித்தியாசமாக edit செய்து கொடுப்பது சரி என்பது என்னுடைய கருத்து, அப்படியும் சிலர் செய்கிறார்கள் அவர்களுக்கு எனது பாராட்டு, ஆனால் சிலர் நான் மணிக்கணக்கில் நேரங்களை செலவு செய்து கண்டுபிடித்து போடும் இடங்களை அவர்கள் கண்டுபிடித்தது போல போடுவார்கள், அது மட்டும் மனதிற்கு சற்று சங்கடமாக இருக்கும். மற்றபடி இதில் என்ன சொல்வதற்கென தெரியவில்லை.

ஆனால் இதில் நகைப்புக்குரிய சில விஷயங்கள் உண்டு. காரணம் நான் கண்டுபிடித்த பல இடங்கள் அது அந்த இடம்தான் என்று அவர்களால் நிரூபிக்கவே முடியாது என்பதை 100 சதவீதம் என்னால் சொல்ல முடியும். காரணம் அதில் கிடைக்கும் clue எனக்கு மட்டுமே தெரியும். அதுவும் வேற ஒரு சீன்களில் இருக்கும். நான் இரண்டு மூன்று cross செக் செய்து பதிவிடுவேன், அதை அவர்கள் வீடியோவாக எடுத்து, அவர்கள் கண்டுபிடித்தது போல போடுவார்கள். அப்போது அதை பார்த்து மக்களுக்கு நிச்சயம் தெரியும் என்று கடந்து சென்று விடுவேன்.
ஆனால் நான் இப்படி ஆரம்பிக்கும் பொழுது எந்த ஒரு மொழியிலும் யாரும் இந்த முயற்சியை செய்யவில்லை. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் மட்டுமல்ல மலையாளத்தில் மட்டுமல்ல ஹிந்தியிலும் நிறைய பேர் போட ஆரம்பித்து விட்டார்கள் அதை நீங்களும் பார்த்திருப்பீர்கள்."
``வீடியோ வ்லாக் போடலாமே?"
``மேலே சொன்னது போல அடுத்த முயற்சியாக அந்த ஐடியா இருக்கிறது."
``நீங்ங தனியா செய்றீங்களா இல்ல டீமா இருக்கீங்களா?"
``நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள், ஆனால் இதற்கு என்று நான் இதுவரை டீம் வைத்துக் கொண்டதில்லை, காரணம் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு வேலையில் இருக்கிறார்கள்,
ஃபாலோவர்களில் பல பேரு என்னுடன் சேர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். எதிர்காலத்தில் நிச்சயம் ஒரு நல்ல டீம் அமையும் என்று நம்புகிறேன்."
``ஒரு இடத்தை கண்டுபிடிக்க என்ன ஹோம் ஒர்க் பண்றீங்க?
``முதலில் எந்தத் திரைப்படமோ அந்த திரைப்படத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை பிரேம் பை பிரேம் பார்க்கத் தொடங்குவேன், அதில் வரும் வெளிப்புற பட காட்சிகள் வரும் நேரங்களை குறித்துக் கொண்டு, பின்பு ஒவ்வொரு இடமாக கூகுள் ஸ்ட்ரீட் view வில் தேட ஆரம்பிப்பேன்.
என்னுடைய முதல் குறிக்கோள் நான் தேர்வு செய்யும் இடம் இதற்கு முன்பு யாரும் எந்த ஒரு சோசியல் மீடியாவையும் பதிவு செய்திருக்கக் கூடாது என்பதை உறுதி செய்து கொள்வேன். பொதுவான டூரிஸ்ட் ஸ்பாட், சூட்டிங் ஸ்பாட், இது அனைவருக்கும் தெரிந்தது. அதனால் இதை எல்லாம் தவிர்த்து விடுவேன், மீதமுள்ள யாரும் பார்த்திராத இடமாக தேர்வு செய்து

அதில் கிடைக்கும் visual clues அதாவது கோவில், மலை, ரோடு, ஏரி உள்ளிட்டவைகளை வைத்து கண்டுபிடிக்க துவங்குவேன். சில நேரம் சுலபமாக கிடைக்கும், சில நேரம் மணிக்கணக்கில் நாட்கள் கணக்கில் ஏன் வாரக் கணக்கில் கூட ஆகும், அப்படி பல இடங்களில் நான் தேடி கண்டுபிடித்து போட்டிருக்கிறேன்,
குறிப்பாக விஜயகாந்த் சார் பாடல்... `நீ பொட்டு வைத்த தங்க குடம்' location, செந்தில் கவுண்டமணி பேருந்து மேலே ஸ்ரீதேவி போட்டோ வைத்து பேசி செல்லும் இடம், சிவாஜி அவர்கள் நடித்த `படிக்காத பண்ணையார்'... இது மாதிரியான பல லொகேஷன் மிகவும் சிரமப்பட்டு நாட்கள் கணக்கில் தேடி கண்டுபிடித்து ரீல் ஆக பதிவு செய்து இருக்கிறேன்.

``இந்த மாதிரி இடங்களை தேடி போகும்போது உங்களுக்கு கிடைத்த மறக்க முடியாத அனுபவம்?"
`` கால மாற்றங்கள் தான், பழைய வயல்வெளிகள் தற்போது concrete வீடுகளாக மாறி இருப்பது சற்று ஆச்சரியத்தை கொடுக்கும், ஆனால் இதெல்லாம் வளர்ச்சியின் ஒரு அங்கம் தான் என நாம் புரிந்து கொள்ள வேண்டும், நான் ஒருபோதும் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல.. இதன் மூலம் அந்த நேரங்களில் நமக்கு நடந்த ஏதாவது நினைவுகள் இருக்கும் அதை நினைத்து பார்ப்பதற்காக, காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது, அதனால் வாழ்க்கையை எந்த ஒரு பெரிய வெறுப்புணர்வு இல்லாமல் லேசாக கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த முயற்சி." என்று முடிகிறார்.

















