செய்திகள் :

`பசில வந்த பிள்ளைக.!' - தாயே வண்டி மலைச்சியா, வண்டிமலையான்... நீங்கதான் துணை' | ஆங்காரிகளின் கதை 5

post image

நாட்டார் தெய்வங்கள் யாவும் புராணங்கதைகள் வழியாக திடீரென உருவாகி வழிபடப்படுபவை அல்ல. சமூக மற்றும் சாதிய அதிகாரங்களுக்கு எதிராக சமரிட்டு பலியான மனிதர்களின் ரெத்த சாட்சியங்களாக நிற்க கூடியவை. இத்தெய்வங்கள் குறித்த கதைகள் வாய்மொழிக்கதைகளாக நிலைப்பெற்றாலும் சடங்குகளின் வழி அதன் உண்மைத் தன்மையை கண்டறிய முடிகிறது. 

நாட்டார் சடங்குகள் நிகழ்காலத்தில் பல முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் சமூக அரசியலின் ஒரு அங்கமாகவே இன்றளவும் இச்சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. 

தனக்கு நேர்ந்த அநீதிக்கெதிராக, அதிகார ஆணவத்திற்கெதிராக உக்கிரக் கோவத்தோடு நீதிகோரும் இத்தெய்வங்களை அறிந்து கொள்வது காலத்தின் தேவையாகிறது. 

நாம் இதுவரைக்கும் சாதி, சமூகம் மீறிய காதலுக்காக ஆணவக்கொலை செய்யப்பட்டவர்கள், ஆண் என்ற அதிகாரத்தை மீறியதற்காக கொல்லப்பட்டவர்களின் கதைகளைத் தான் பார்த்தோம். ஆனால், இச்சமூகம் குற்றம் என்றும் சொல்லும் ஒரு செயலை செய்தற்காக கொல்லப்பட்ட தெய்வங்களின் கதை தான் இது. 

பாளையங்கோட்டையில் உள்ள வண்டி மலைச்சியம்மன்
“ தாயே வண்டிமலைச்சியா... வண்டி மலையான் எந்த வண்டியையும் மறிக்காம நல்லபடியா போய்ச் சேரட்டும். எங்களுக்கு ரெண்டுபேருந்தான் துணை நிக்கனும்”ன்னு தூரமா வண்டில போறவுங்க எல்லாரும் தாயையும், வண்டிமலையானையும் கையெடுத்து சாமிகும்பிட்டு தான் வண்டியவே எடுப்போம்.

கதையைச் சொல்லுதேன் கேளுங்க, 

“ பஞ்ச காலத்துல தாயையும் தகப்பனையும் இழந்த பிள்ளைளுவ ஆம்பள ஒண்ணும் பொம்பள ஒண்ணும் சாப்பாட்டுக்கு வழியில்லாம  கால் நடையா நடந்து போயிருக்காவ. ஒரு வா தண்ணி வாயில படல,  நிக்கக்கூட தெம்பு இல்லாம அண்ணந்தங்கச்சி ரெண்டுபேரும் பசியில யாரோ வீட்டு தெரணையில போய் உட்காந்திருக்காவ.

பக்கத்துல சட்டை நெய்த சத்தம் கேட்டுருக்கு. உடனே பாவப்பட்ட பிள்ளைளுவ ரெண்டும் உள்ள போய் அவங்க நூலுக்கு பசைப்போட காய்ச்சி வச்சிருந்திருக்கிற மண்சட்டிய எடுத்து மடக்கு மடக்குன்னு பசியில குடிச்சிருக்கு. அவங்க பாவு போட உட்காந்திட்டு கஞ்சியைத்தேடயில அது வெறுஞ்சட்டியா இருக்கு. நம்ம பாவு போட வச்சிருந்த கஞ்சியை இது ரெண்டும் குடிச்சிருச்சேங்கிற கோவத்துல அந்த சனம் முழுக்க பாவுக்கம்ப வச்சி இந்த ரெண்டு பச்சப்பிள்ளைகளையும் அடிச்சிருக்கு.

நாங்குநேரியில் அமைந்திருக்கும் வண்டி மலைச்சியம்மன் சிலை

ஏற்கெனவே பசில வந்த பிள்ளைக அவங்க அடிச்ச அடியிலயே கீழ உழுந்து அப்படியே செத்துப்போயிருக்கு. 

அதுக்கப்பறம் அந்த சனம் நெஞ்ச துணிமணிகளை ஏத்தி கொண்டு போற வண்டிய இந்த பிள்ளைக ரெண்டும் வழிமறிச்சிருக்கு. நம்ம கொன்ன பாவத்துனால தான் இப்படி நடக்குன்னு புரிஞ்சிக்கிட்ட சனம், அண்ணன் தங்கச்சி ரெண்டுபேத்துக்கும் கோயில் எடுத்து கும்பிடுததா வாக்கு குடுத்திருக்காங்க. வெட்டவெளியில விழுந்து செத்ததுனால அப்படியே படித்திருக்க மானிக்கு தான் அந்த சாமி இருக்கும்.

அவங்கள போகவுடாம மாட்டுவண்டிய வண்டிமறிச்சனால அதுக்கு வண்டி மறிச்சின்னு பேருவந்திருக்கு. இவங்கள செங்குந்தர் சமூகத்தைச் சேர்ந்தவங்க தான் கும்பிட்டுட்டு வர்றாங்க"

வழிபாட்டுச் சடங்குமுறையும் தோற்றக் கதைத் தொடர்பும்: 

வண்டிமலைச்சியம்மன் கோவில் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நகலாபுரம், செங்கோட்டை, நாகர்கோவில், எட்டயபுரம் என பல்வேறு பகுதியில் நெசவுத் தொழில் செய்யும் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் இருக்கிறது. இது நெசவாளர்களின் குல தெய்வமாகவும் வழிபடப்படுகிறது. 

கள ஆய்வின் போது வள்ளியூரிலிருந்து நாங்குநேரி செல்லும் வழியில் ரோட்டோரத்தில் சுடலை மாடன் தெய்வத்தின் பீடத்தை காண முடிந்தது. அதன் அருகில் சென்று பார்த்த போது சிவப்பு சேலை அணிந்த ஒரு பெண் வெட்ட வெளியில் படுத்துக்கிடக்கும் காட்சியில் சிலை ஒன்று இருந்தது. அந்தச் சிலை குறித்து விசாரிக்கும் போது இது வண்டிமலைச்சியம்மன் என்றும் 

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள காக்காச்சி மலையிலிருந்து பிடிமண் எடுத்து கட்டப்பட்டதாக அருகிலிருந்தவர்கள் கூறினர். அந்தச் சிலை குறித்த வேறு தகவல்கள் கிடைக்கவில்லை.

பெரும்பாலான வண்டிமலைச்சியம்மனும் வண்டிமலையானும் ஒன்றாக படுத்திருக்கும் படியான சிலைகளே இருக்கிறது. ஆனால் செங்கோட்டை போன்ற பகுதியில் வண்டி மலைச்சியம்மன் தனியாக இருக்கிறது. இன்னும் சில இடங்களில் வண்டி மலைச்சியம்மனும், வண்டிமலையனும் நிமிர்ந்து இருக்கும் படியான சிலைகளை காண முடிகிறது.  இவ்வாறான கோவில்களில் இத்தெய்வங்களின் மாற்றுக் கதை வடிவங்களும் சொல்லப்படுகிறது. அவை மேட்டிமைத் தன்மையோடு செவ்வியல் கூறுகளோடு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

வண்டிமலைச்சியம்மன் வழிபாட்டில் எட்டையபபுரம் பெரிய தெருவில் உள்ள கோவிலில் உள்ள வண்டிமலைச்சியம்மன் கோயில் கொடையின் போது இரவில் படையலாகச் சோறு படைக்கப்படும். அப்போது பாவுக்கம்பினால் படையல் சோறில் அடித்துப் பாவுக்கம்பின் தடம் பதியும் வழக்கம் முன்னர் இருந்துள்ளதாக பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் தன்னுடைய ‘ ஆணவக்கொலைச் சாமிகளும் பெருமிதக்கொலை அம்மன்களும்’ புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். 

இச்சடங்கியல் நிகழ்வு தோற்றக்கதையோடு தொடர்புடையதாகவே இருக்கிறது. மலைபோல் வண்டியை மறிச்சி நின்றதானால் வண்டிமலைச்சி என்றும், வண்டி மலைச்சி என்பதே திரிந்து வண்டி மறிச்சியாக மாறியதாகவும் கூறுகின்றனர்.  பண்பாட்டு ஆய்வாளர் தொ. ப ‘அது வண்டி மலைச்சி அல்ல; பண்டி மலைச்சி. பண்டி என்றால், பெருத்த வயிறு. அந்த அம்மன் மலைத்துப் படுத்திருப்பதால் மலைச்சி. அந்த அம்மனின் பெயர் ‘பண்டி மலைச்சி’  என்று சொல்கிறார்.

பாளையங்கோட்டையில் உள்ள வண்டி மலைச்சியம்மன் கோவில்

பசி பொறுக்காமல் நெசவாளர்கள் வைத்திருந்த பாவுக்கஞ்சியை எடுத்து குடித்ததற்காக அவர்கள் அடிக்கிறார்கள். பசியோடு இருந்ததனால் அவர்கள் அடியை பொறுக்க முடியாமல் வண்டி மலைச்சியும், வண்டி மலையனும் இறந்து போகிறார்கள். ஆத்திரத்தால் நிகழப்பட்ட சம்பவத்தால் குற்றவுணர்வு மற்றும் பயத்தின் காரணமாக இத்தெய்வத்தை நெசவாளர்களே வழிபடுவதை அறிய முடிகிறது. இத்தெய்வம் குறித்த மாற்றுத் தோற்றக்கதைகள் ஆகம விதிகளோடு பொருத்தி செவ்வியல் தெய்வங்களோடு இணைக்கப்பட்டு  உண்மைத் தன்மையை மாற்றி பரப்பபடுகிறது. ஆகையால் இத்தெய்வத்தின் வழிபாட்டில் பல்வேறு மாறுபாடுகள் காணப்படுகிறது.

(ஆங்காரிகள் வருவார்கள்)

`ஒத்த தங்கைய ஈட்டியால கொல்லுறீங்களே...' ஆணவக்கொலை செய்யப்பட்ட பூச்சியம்மனின் கதை |ஆங்காரிகளின் கதை 4

பூச்சியம்மனின் கதைஆங்காரிகளின் கதை 4“ வலுத்திலுத்தும் தங்கையவள் வர மாட்டேனென்றதினால் கழுத்தறுத்து வெட்டினார்கள் காரிகையை அன்னேரம். வெட்டுப்பட்ட அவள்தலைதான் வேகமாக உருண்டைதையா!…” - பூச்சியம்மன் வில்லுப... மேலும் பார்க்க

கேரளா: 'உலகில் மிக உயரமான கண்ணகி சிலை' - ஆற்றுகால் பகவதி கோயிலில் ரூ.3.5 கோடியில் அமைக்கத் திட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் பெண்களின் காவல் தெய்வம் எனப் போற்றப்படுகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் நடக்கும் பொங்காலை வழிபாட்டி... மேலும் பார்க்க

தைப்பூசம்: 'வேலும் மயிலும் பறபறக்க' - மருதமலை முருகன் திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் | Photo Album

தைப்பூசம் : பழநி முருகனைப் பற்றிய இந்த அபூர்வ தகவல்கள் நீங்கள் அறிந்ததுண்டா? மேலும் பார்க்க

வடலூர்: வள்ளலார் 155வது ஜோதி தரிசன விழா | Photo Album

வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார்... மேலும் பார்க்க

தைப்பூசம்: முருக பக்தர்களுக்காக இரவு முழுவதும் திறந்திருந்த தேவாலயம்! - வெளிப்பட்ட மதநல்லிணக்கம்

தைபூசத் திருவிழா, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும் ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தைப்பூசத் திருவிழா, நாளை பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறுகிறது. தைப்பூசத் திருவிழாவிற்காக அறுபடை... மேலும் பார்க்க

ஆங்காரிகளின் கதை 03 : அண்ணன்களால் அடித்துக்கொல்லப்பட்ட பொண்ணு - முத்தாரம்மன் தெய்வமான கதை!

முத்தாரம்மன்!ஆங்காரிகளின் கதை 03‘கிட்டத்தட்ட ஒரு 150 வருசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது'``புதுப்பட்டிக்கு தெக்க இருக்க சீத்தார்க்குளத்துல கவுண்டர் ஜமீன்தாரு ஒருத்தர் இருந்தாரு. அந்த ஊருக்கிட்ட கொ... மேலும் பார்க்க