Ponnambalam: "ஷூட்டிங் ஸ்பாட்ல குடிப்பேன்னு கதை சொல்லிட்டு இருக்காங்க!" - பொன்னம...
`பறவைக் காய்ச்சல் பரவுதே, இறைச்சி, முட்டை, பால் சாப்பிடலாமா?' பயமா இருக்கா? | Q&A
தமிழ்நாட்டில் இப்போது பெரிய அலாரமாக இருக்கிறது 'பறவைக் காய்ச்சல்'.
இதனால், 'சிக்கன் சாப்பிடக் கூடாது..', 'பால், முட்டை மூலமும் பறவைக் காய்ச்சல் பரவலாம்' போன்ற செய்திகள் மக்களிடையே இருந்து வருகிறது.
மக்களின் பயத்திற்கு விடையளிக்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
`பறவைக் காய்ச்சல் என்றால் என்ன ?'
``பறவைக் காய்ச்சல் என்பது H5N1 என்று சொல்லக்கூடிய ஃப்ளூ வைரஸால் ஏற்படும் ஒரு வகை காய்ச்சல் ஆகும்.
இந்த வைரஸ் பெரும்பாலும் பறவைகளைத் தான் தாக்குகிறது. இதனால், அவைகளுக்கு மரணம் கூட ஏற்படலாம்.'
`பறவைக் காய்ச்சல் பறவைகளிடம் மட்டும் தான் காணப்படுமா?'
`இல்லை. பறவைக் காய்ச்சல் பறவைகள் மற்றும் அனைத்து பாலூட்டி விலங்குகளிடமும் காணப்படும்.'
`இந்தக் காய்ச்சல் எப்படி மனிதர்களுக்கு பரவுகிறது?'
`இறந்த பறவைகள் அருகில் செல்வது... அவைகளைத் தொடுவது போன்றவைகளால் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவலாம். இதனால், இறந்த பறவைகளின் அருகில் மனிதர்கள் செல்லாமல் இருப்பதும்... அவற்றை தொடாமல் இருப்பதும் நல்லது.'
`பறவைக் காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், இறைச்சி, முட்டை போன்றவற்றை சாப்பிடலாமா?'
``இது போன்ற வைரஸ்களுக்கு வெப்பம் என்பது பெரிய எதிரி. எந்தளவுக்கு எதிரி என்றால், இந்த வைரஸ்களால் மனிதர்களின் உடல் வெப்பத்தைக் கூட தாங்க முடியாது. அதனால், இது குறித்து பெரிதாக அச்சப்படத் தேவையில்லை.
இறைச்சி, முட்டை, பால் என எதுவாக இருந்தாலும், நல்ல சுட வைத்து... நன்கு வேக வைத்து அல்லது பொரித்து... சமைத்து சாப்பிட்டால் வைரஸ் பரவாது.
ஆனால், கட்டாயம் பச்சையாக முட்டை, பால் எடுத்துக்கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள்."

``பறவைக் காய்ச்சல் வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவுமா?"
``நிச்சயமாக இல்லை. பாதிக்கப்பட்ட பறவை அல்லது விலங்கைத் தொட்டால் மட்டுமே இந்த வைரஸ் பரவுமே தவிர, ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு இது பரவாது."
``பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?"
``ஏதேனும் பறவை அல்லது விலங்கை நேரடியாக தொட்ட பின் ஏற்படும் காய்ச்சல், கண் எரிச்சல், உடல் வலி இவை எல்லாமே பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறி.
அதனால், இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரிடம் செல்வது நல்லது."
``பறவைக் காய்ச்சலில் இருந்து எப்படி எச்சரிக்கையாக இருப்பது?"
``ஏதேனும் பறவையோ, விலங்கோ இறந்து கிடந்தால், உடனடியாக கால்நடை அவசர உதவிக்கு போன் செய்யுங்கள். நீங்கள் உங்கள் கைகளில் தொடுவது ஆபத்தானது. "
``பறவைக் காய்ச்சலால் உயிருக்கு ஆபத்து வருமா ?"
``பறவைக் காய்ச்சலுக்கான நோய் எதிர்ப்பு சக்தி மனிதர்களுக்கு இல்லை. இதனால், சற்று எச்சரிக்கை தேவை. இதைத் தவிர்த்து பீதி எல்லாம் அடைய தேவையில்லை."




















