Ponnambalam: "ஷூட்டிங் ஸ்பாட்ல குடிப்பேன்னு கதை சொல்லிட்டு இருக்காங்க!" - பொன்னம...
நெல்லை: SIPCOT நில எடுப்பிற்கு இழப்பீடு தர மறுப்பு; தலைகீழாக நின்று போராடிய ஓய்வுபெற்ற நல்லாசிரியர்
மதுரை மாவட்டம், தென்றல் நகரைச் சேர்ந்தவர் செல்லதுரை. நல்லாசிரியர் விருது பெற்ற உடற்பயிற்சி ஆசிரியரான இவர், தேசிய தடகள பயிற்றுநராகவும் இருந்து வந்துள்ளார்.
இவருக்குச் சொந்தமான 8 ஏக்கர் நிலம், நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகேயுள்ள பிரான்சேரி கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தில் சிப்காட் தொழிற்பேட்டையின் தேவைக்காக மூன்றரை ஏக்கர் நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்துள்ளது.
அதற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.30 லட்சம் தருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அந்தப் பணத்தைப் பெறுவதற்கு செல்லதுரை விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், விண்ணப்பத்தில் இருக்கும் பெயரும், நிலப் பட்டாவில் உள்ள பெயரும் மாறுபட்டிருப்பதாகக் கூறி நிலத்துக்கான பணத்தைத் தர முடியாது என அதிகாரிகள் கூறினார்களாம்.
இந்த நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த செல்லதுரை, ஆட்சியர் அலுவலக வாயிலில் திடீரென்று தலைகீழாக நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டார். தலைகீழாக நின்றபடியே தனது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை உடனடியாக நேராக நிறுத்தி விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து செல்லதுரை கூறுகையில், “என்னுடைய தந்தை பெயரிலான நிலத்தை அரசு எடுத்துக் கொண்டது. அதற்குரிய ரூ.30 லட்சம் இழப்பீட்டுத் தொகையைத் தராமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர்.
எனது தந்தையின் பெயர் அருளப்பன் என விண்ணப்பத்திலும், மரிய மிக்கேல் என்று பட்டாவிலும் பெயர் இருப்பதாகக் காரணம் கூறுகிறார்கள். ஆனால், இரண்டு பெயர்களைக் கொண்டது ஒரே நபர்தான் என்பதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளேன். ஆனாலும், அதை ஏற்க மறுத்து பணத்தைத் தராமல் கடந்த 4 ஆண்டுகளாக என்னை அலைக்கழிக்கிறார்கள்” என்றார்.

இதனையடுத்து செல்லதுரையிடமிருந்து மனுவைப் பெற்ற வருவாய்த்துறை அதிகாரிகள், தொடர்புடைய அதிகாரியான நில எடுப்பு தாசில்தார் ஜெயலட்சுமியிடம் விசாரித்தனர்.
அப்போது, நில எடுப்பு தொடர்பான கோப்புகளை எடுத்து, செல்லதுரையின் தந்தையின் பெயர் 2 வெவ்வேறு பெயர்களாக இருப்பதால் தவறான நபர்களிடம் இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தில் பணத்தை ஒப்படைத்துள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவுப்படி அத்தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியதையடுத்து செல்லதுரை அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.















