RCB VS MI: "எதுவுமே வேலை செய்யல, இப்படியே போனா வேலைக்கு ஆகாது.!"- ஹர்திக் பாண்ட...
'அம்மாவுக்கான கண்டுபிடிப்பு' - 6வது படித்த நெசவாளர் பத்மஸ்ரீ விருது பெற்ற நெகிழ்ச்சிக் கதை தெரியுமா?
தினமும், அன்றைய நாளுக்கான சவால்கள் நமக்கு மலை போலத் தோன்றலாம். ஆனால், எந்தவொரு முறையான தொழில்நுட்பக் கல்வியும் இல்லாத, வெறும் 6-ம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு சாதாரண நெசவாளர், தனது தாயின் உடல் வலியைப் போக்க ஒரு பொறியியல் அற்புதத்தையே நிகழ்த்திய கதை நமக்கு அளப்பரிய உத்வேகத்தைத் தரும்.
அவர்தான் `லட்சுமி ஆசு இயந்திரம்’ (Laxmi Asu Machine) என்னும் மாபெரும் கண்டுபிடிப்பை உலகுக்கு அளித்த தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சிந்தகிண்டி மல்லேசம் (Chintakindi Mallesham).

தெலுங்கானா மாநிலம், யாத்தாத்ரி புவனகிரி மாவட்டத்தில் (முன்பு நல்கொண்டா) உள்ள ஷரஜ்பேட்டை என்னும் சிறிய கிராமத்தில் ஒரு எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் சிந்தகிண்டி. இவரது தந்தை லட்சுமிநாராயணா, தாய் லட்சுமி.
வறுமை காரணமாக இவரால் 6-ஆம் வகுப்புக்கு மேல் கல்வியைத் தொடர முடியவில்லை. படிப்பைக் கைவிட்டுவிட்டு, தனது குடும்பத் தொழிலான புகழ்பெற்ற `போச்சம்பள்ளி இக்காட்' (Pochampally Ikat) பட்டுப்புடவை நெய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கினார்.
போச்சம்பள்ளி பட்டுப்புடவைகளை தறியில் நெய்வதற்கு முன்பாக `ஆசு' (Asu) என்ற ஒரு கடினமான நூல் சுற்றும் செயல்முறையைச் செய்தாக வேண்டும். நான்கு அடி நீளமுள்ள ஒரு மரச்சட்டத்தில், இரண்டு முனைகளிலும் உள்ள முளைகளில் பட்டு நூலை கைகளால் பலமுறை சுற்றிச் சுற்றி வளைக்க வேண்டும்.
ஒரு புடவைக்கான ஆசு செயல்முறையை முடிக்க, ஒரு நெசவாளர் தனது கைகளை சுமார் 9,000 முறை அங்குமிங்கும் அசைக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு புடவைகளுக்கு நூல் சுற்ற, மல்லேசத்தின் தாய் லட்சுமி தினமும் சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திற்கு தன் கைகளைத் தொடர்ந்து அசைத்து வந்தார். இதனால் அவரது தோள்பட்டை மற்றும் முழங்கைகளில் கடுமையான வலியும் வீக்கமும் ஏற்பட்டது.

தன் தாய் படும் இந்தத் துயரத்தைக் கண்ட மல்லேசம், 1992-ம் ஆண்டு தனது 20-வது வயதில் ஒரு சபதம் எடுத்தார். "என் தாயின் வலியைப் போக்க, இந்த வேலையைச் செய்யும் ஒரு இயந்திரத்தை நானே கண்டுபிடிப்பேன்".
பொறியியல் பற்றிய எந்தவொரு அடிப்படை அறிவும் இல்லாத ஒரு இளைஞன் இயந்திரம் கண்டுபிடிக்கப் புறப்பட்டான். ஆசு செயல்முறையின் இயக்கத்தை 5 வெவ்வேறு பகுதிகளாகப் பிரித்து, மரச்சட்டங்களில் இயந்திர பாகங்களைப் பொருத்தத் தொடங்கினான்.
தொழில்நுட்ப அறிவு இல்லாததால் பலமுறை தவறான பாகங்களை வாங்கி, தான் சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தை இழந்தான்.
1996-ல் தனது 24-வது வயதில் ஸ்வர்ணா என்பவருடன் திருமணம் நடந்தது. கணவனின் லட்சியத்தின் புரிந்துகொண்ட ஸ்வர்ணா, தன்னிடம் இருந்த சேமிப்புப் பணத்தைக் கொடுத்து உதவினார். 1997-க்குள் 5 பாகங்களில் 3 பாகங்களை வெற்றிகரமாக முடித்துவிட்டார் மல்லேசம். ஆனால், அதன்பிறகு அவரிடம் இருந்த பணம் முழுமையாகத் தீர்ந்துபோனது.
ஊர் மக்களின் ஏளனமும், வறுமையும் கழுத்தை நெரித்ததால், இயந்திரத்தின் பாகங்களை ஒரு அறையில் பூட்டிவிட்டு, கிராமத்தை விட்டு வெளியேறி ஹைதராபாத் சென்றார். அங்கு ஒரு எலக்ட்ரீஷியனிடம் தினக்கூலி வேலைக்குச் சேர்ந்தார். பகலில் கூலி வேலை, இரவில் இயந்திரக் கண்டுபிடிப்பு எனத் தனது லட்சிய நெருப்பை அணையாமல் பாதுகாத்தார்.

பிப்ரவரி 1999-ல், ஹைதராபாத்தின் பாலநகர் பகுதியில் உள்ள ஒரு இயந்திரப் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு இயந்திரத்தின் இயக்கம் (movement) அவர் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருந்த கேள்விக்கு விடையைக் கொடுத்தது.
நூலை முளையில் சுற்றி, நழுவாமல் சரியாகக் கீழே இறக்குவதற்கான நுட்பம் அதுதான் என்பதை நொடியில் புரிந்துகொண்டார். அன்றே அந்தப் பாகத்தை வாங்கி, தனது இயந்திரத்தில் பொருத்தினார். அவர் உயிரைக் கொடுத்து உருவாக்கிய அந்த இயந்திரம் எந்தக் குறையுமின்றி கச்சிதமாக இயங்கியது!
தனது தாயின் பெயரையே அந்த இயந்திரத்திற்கு `லட்சுமி ஆசு இயந்திரம்’ எனச் சூட்டினார் மல்லேசம். கைகளால் ஒரு புடவைக்கான ஆசு செயல்முறையை முடிக்க 6 மணிநேரம் ஆகுமென்ற நிலையை மாற்றி, வெறும் ஒன்றரை மணிநேரத்தில் அந்த வேலையை முடித்துவிடலாம் என்பதை இந்த இயந்திரம் சாதித்துக் காட்டியது.
இதன் மூலம் ஒரு நாளைக்கு 8 புடவைகள் வரை நெய்ய முடியும் என்ற நிலை உருவானது மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான நெசவாளர் பெண்களின் உடல் வலியும் நிரந்தரமாகத் தீர்ந்தது.
அவரது இந்த மாபெரும் தியாகத்தையும், கண்டுபிடிப்பையும் பாராட்டி, இந்திய அரசு 2017-ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ வழங்கி கௌரவித்தது. உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிகையின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்களின் பட்டியலிலும் இடம்பிடித்தார். 2019-ம் ஆண்டு இவரது வாழ்க்கைப் போராட்டத்தை மையமாக வைத்து `மல்லேசம்’ (Mallesham) என்ற திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

முறையான கல்வி இல்லை, பணம் இல்லை, தொழில்நுட்ப அறிவு இல்லை, சுற்றத்தாரின் ஆதரவு இல்லை... ஆனாலும் இவை எதுவுமே மல்லேசத்தின் பயணத்தில் தடையாக மாறவில்லை.
தன் தாயின் மீதான அன்பும், இலக்கின் மீதான அசைக்க முடியாத விடாமுயற்சியும் மட்டுமே அவரை ஒரு வரலாற்று நாயகனாக மாற்றியது. நமக்கான இலக்கை நோக்கிப் பயணிக்கும்போது பல தடைகளும், விமர்சனங்களும், தோல்விகளும் வரலாம்.
ஆனால் மல்லேசத்தைப் போல முழு நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்பட்டால், உழைப்பிற்கான வெற்றி ஒருநாள் தேடி வரும் என்கிற நம்பிக்கையுடன் இன்றைய நாளைத் தொடங்குவோம்!



















