"கேலி செய்வது கோழைத்தனம்" - குஷ்பு மகள்களுக்கு நடந்த உருவக்கேலிக்கு நடிகை ராதிகா...
அரசு வேலைக்காக தாயைக் கொன்ற சட்டக்கல்லூரி மாணவி; தந்தையையும் கொன்றாரா? விசாரணையில் பகீர் தகவல்கள்
ஜெய்ப்பூரில் அரசு வேலை மற்றும் சொத்துக்காக தனது தாயைக் கொலை செய்ததாக 23 வயது இறுதி ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி ஆயுஷி சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கூலிப்படையை நியமித்து தனது உறவினர்கள் துணையோடு ₹7 லட்சம் கொடுத்து தனது தாயார் நீரஜ் சர்மாவைப் படுகொலை செய்தார். ஆயுஷியின் தந்தை கடந்த ஆண்டு காலமானார். அதனைத் தொடர்ந்து கருணை அடிப்படையில் ஆயுஷியின் தாயார் நீரஜ் சர்மாவிற்கு கோர்ட்டில் வேலை கிடைத்தது.
ஆயுஷியின் தந்தை விஜய் சர்மா ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் கோர்ட் மாஸ்டர் ஆகப் பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டு, நீண்ட நாள் உடல்நலக்குறைவுக்குப் பிறகு அவர் இறந்ததாகக் கருதப்பட்டது.
ஆயுஷி தனது தாயார் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட பிறகு, அவருடைய தாய்மாமா போலீசில் ஒரு புதிய புகார் அளித்துள்ளார்.

விஜய் சர்மாவுக்குப் பக்கவாதம் ஏற்பட்டபோது, ஆயுஷியும் அவருடைய மைத்துனரும் சேர்ந்து அவரை மூன்று மாதங்கள் ஒரு ரகசிய மருத்துவமனையில் மறைத்து வைத்து சிகிச்சை கொடுத்ததாகக் கூறியுள்ளார்.
பின்னர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட விஜய் சர்மாவின் உணவுக் குழாயை ஆயுஷி திட்டமிட்டு அகற்றி, அவரைக் கொலை செய்ததாக மாமா குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து ஜெய்பூர் போலீசார் தற்போது இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் ஏற்கனவே உள்ள கொலை வழக்கோடு இணைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்துக்களை அபகரிக்கவும், அரசு வேலையைப் பெறவும் ஆயுஷி சர்மா திட்டமிட்டுத் தனது பெற்றோர் இருவரையுமே அடுத்தடுத்துக் கொலை செய்துள்ளார் என்று ராகேஷ் சர்மா அளித்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சர்மாவுக்குப் பக்கவாதம் ஏற்பட்டபோது, ஆயுஷியும் அவரது மைத்துனர் பால்ராமும் நிலைமையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். குடும்பத்தினரின் உதவியை நாடாமல், அவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசிய மருத்துவமனைக்கு மாற்றினர்.
மூன்று மாத கால ரகசியம்
மூன்று மாதங்களாக தந்தை எங்குச் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற விபரத்தைத் தனது தாய் நீரஜ் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து ஆயுஷி முற்றிலும் மறைத்து வைத்தார். தாய் நீரஜ் இது குறித்துத் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்டபோது, அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகக் கூறி மழுப்பினார்.
ஒருவழியாக குடும்பத்தினர் விஜய் சர்மாவை வீட்டிற்கு அழைத்து வந்தபோது, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. அவருடைய பல முக்கிய உடல் உறுப்புகள் ஏற்கனவே செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.
ராகேஷ் சர்மாவின் புதிய புகாரின்படி, உடல்நிலை பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக இருந்த விஜய் சர்மாவின் உணவுக் குழாயை ஆயுஷி திட்டமிட்டு வலுக்கட்டாயமாக அகற்றினார். இதுவே அவரது நேரடி மரணத்திற்கு வழிவகுத்தது என்று ராகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்
நீரஜ் சர்மாவின் கொலை வெறும் தனிநபர் குற்றமல்ல, அது ஒரு கூட்டுக்குடும்பச் சதி என்று போலீஸார் குறிப்பிட்டனர். இந்தக் கொடூரக் கொலையின் பின்னணியில் ஆயுஷி சர்மாவுடன் சேர்ந்து, அவரது மைத்துனர் பால்ராம்மற்றும் அவரது தந்தை மோகன் ஆகிய மூவரும் சேர்ந்து சதி செய்து இப்படுகொலையைச் செய்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சொத்துப் பகிர்வு ஒப்பந்தம்:
பல கோடி ரூபாய் மதிப்புள்ள நீரஜ் சர்மாவின் குடும்பச் சொத்துக்களைத் தங்களுக்குள் பிரித்துக் கொள்வது என்று இந்த மூவரும் முன்கூட்டியே ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு, அதன் பிறகே இந்தத் திட்டமிட்ட கொலையை அரங்கேற்றியுள்ளனர் என்று போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
நீரஜ் சர்மாவைக் கொலை செய்வதன் மூலம், அவரது நீதிமன்ற அரசு வேலையைக் கருணை அடிப்படையில் ஆயுஷி பெற முயன்றுள்ளார். அதே நேரத்தில், சொத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மோகனும் பால்ராமும் எடுத்துக்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.














