"மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி பேச்சை காங்., கேட்டிருந்தால் இந்நேரம்..."...
அழகி: ஒரே வாக்கியத்தில், வாழ்வின் மொத்தக் காதலையும் தந்துவிடுகிறாள் | `சினி'ஸ்கோப் 02 | ஆதி தாமிரா
கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!
”உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா சண்முகம்? யாரு யாரைத்தான் மனசுல நினைக்கல? கல்யாணம் ஆனப்பிறகு எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட வேண்டியதுதானே? எனக்கு மட்டும் உன் நினைப்பு இல்லையா? அதை எப்போவோ, எங்கேயோ விட்டுட்டு வந்துட்டேன். எனக்கு பயமா இருக்கு சண்முகம்! என் வாழ்க்கைதான் ஒண்ணுமில்லாம போச்சு, தெருவுக்கு வந்துட்டேன். ஆனா உனக்கென்ன? உன்னை உயிருக்குயிரா பாத்துக்குற நல்ல மனைவி, பொக்கிஷமா ரெண்டு குழந்தைங்க…”
என்று சொல்லிவிட்டு, அவன் முகத்தை ஏறிட்டு அழுத்தமாகச் சொல்கிறாள்,
”நீ நல்லாருக்கணும் சண்முகம்!”

‘நீ நல்லாருக்கணும் சண்முகம்’ என்று தனம் சொல்கிற வார்த்தைகள் நம் இதயத்தைத் தைக்கின்றன. அதில் நம் கண்கள் குளமாகி மனம் கனத்துப்போகிறது. அந்த ஒரு வாக்கியத்தில், அவள் வாழ்க்கையின் மொத்தக் காதலையும் அவனுக்குத் தந்துவிடுகிறாள்.
காதலின் தனித்துவமே இந்த அற்புதமான பிரதிபலன் எதிர்பாராத வாழ்த்துதான்! அது தியாகம் கூட அல்ல! மனமார்ந்த வாழ்த்து!
’நான் வாழ்வை இழந்துவிட்டேன். பரவாயில்லை, எப்படியோ போகிறேன். ஆனால், நீ சீரும் சிறப்புமாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அது நானே அப்படி வாழ்வதற்கு ஒப்பானது. அதற்கொரு பங்கம் நேர்ந்துவிடக்கூடாது’ என்று நினைப்பதுதான் நம்மை நேசிப்பவர்களுக்கு நாம் தரும் மிக உயர்வான வாழ்த்து.
ஒரு மனிதன், சக மனிதனுக்கு இதை விடச் சிறப்பான ஒரு பரிசை வழங்கிவிட முடியுமா என்ன?!
சண்முகத்திடம், தனத்தின் நினைவாக இருந்தது அவளது ஒரு ஜோடி காலணிகள் மட்டுமே! அதைத் தூக்கிப் பழைய பொருட்கள் சேகரிப்பவனிடம் போட்டுவிடுகிறாள் தனம். அதையறிந்த சண்முகத்துக்குத் தவிப்பு. காதலையே இழந்த பிறகும், அதை நினைவூட்டிகொண்டிருக்கும் இப்படியான பயனற்ற சின்னப் பொருட்களை, மடிப்புகளில் கிழிந்துபோன கடிதங்களை இழப்பதில் நமக்கு சம்மதமிருப்பதில்லை. இறுதிவரை அதைப் பிடித்துக்கொண்டே இந்த வாழ்க்கையைக் கடந்துவிட வேண்டும் என்று நினைக்கிறோம்.
அப்படியான ஒரு பிடிமானத்தை இழந்த தவிப்பு சண்முகத்திடம்!
கோபமாக வந்து தனத்திடம், அதைக் கொடுத்துவிடும்படிக் கேட்கிறான். அப்போது, மகனைத் தவிர இந்த வாழ்க்கையில் ஒன்றுமே இல்லாத, அந்தக் கிராமத்துப் பெண் தரும் பதில்தான் அது.

சண்முகம் எனும் ஒரு விலங்கு நல மருத்துவர், அவரது மனைவி வளர்மதி, மூன்று குழந்தைகள் என்று ஓர் அழகான குடும்பம். சண்முகத்தை அந்த மூன்று குழந்தைகளில் மூத்தவனான சிறுவன் பாலு, ’சார்’ என்று அழைக்கிறான். அவன் மட்டும் ஏன் அந்தக் குடும்பத்தில் தனித்துத் தெரிகிறான்? அவன் ஏன் அவரை சார் என்று அழைக்கிறான், அவன் யார் எனும் கேள்வியுடன் தொடங்குகிறது படத்தின் கதை.
பிளாஷ்பேக்கில் 70களின் தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடமும், கிராமத்துச் சிறார்களும், ஆசிரியர்களுமாய் அதுவரை நாம் திரையில் பார்த்திராத புதிய, அழகிய காட்சிகள் அணிவகுக்கின்றன. பாரதிராஜா, முதன்முறையாக திரையில் கிராமங்களைக் கொண்டுவந்தார் என்பார்கள். அதன்பின், பலரும் கிராமங்களை இன்னும் நெருக்கமாக, உயிர்ப்போடு காண்பித்தார்கள். அதில் இந்த அழகி படத்துக்கும், இதன் இயக்குநர் தங்கர் பச்சானுக்கும் ஒரு பங்கிருக்கிறது.
’ஏ ப்ளஸ் பி ஹோல்ஸ்கொயர் பார்முலா சொல்லுட்டி, தேகத்துல கொஞ்சமாச்சும் சூடு சுரணை இருக்கணும், படிக்க வாறியளா? மினுக்குறதுக்கு வாறியளா? இவனும் இதே கிளாஸுதான படிக்கான்’ என்று வட்டார வழக்கில் திட்டும் கணக்கு வாத்தியாராக, 70களின் பள்ளி ஆசிரியரைக் கண்முன்னால் கொண்டுவந்தார் ஜார்ஜ் மரியான்.
சண்முகம், கட்டையன், காக்காயன் என அத்தனை பேருக்கும் காலம் நம்மை என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறது என்றியாத பள்ளிப் பருவம் அது. அந்த அறியாமைதான் எத்தனை அழகானது! '
ஏழ்மை நிறைந்த அந்தக் கிராமத்து மாணவர்களோடு, பெற்றோரை இழந்து, தாத்தா-பாட்டியின் கவனிப்பில் வளரும் தனம் வந்து இணைந்துகொள்கிறாள். அவளது உடையும், வனப்பும், அழகும் பிறரிலிருந்து வேறாக இருக்கிறது. அதில் சற்றே செல்வச்செழிப்பு இருக்கிறது. அனைவரும் அவளால் ஈர்க்கப்படுகிறார்கள்.
சண்முகமும்தான்!
காலங்கள் ஓடுகிறது. சண்முகம், தனத்தின் மீதான ஈர்ப்பைக் காதலாக வளர்த்தெடுக்கிறான். அவளுக்கும் அவன் மீது ஒரு ஈடுபாடு இருக்கிறது. ஆனால், பத்தாம் வகுப்போடு நட்பும், பழக்க வழக்கமும் குலைகிறது. மேற்படிப்புக்குச் சண்முகம் சென்னை சென்று சில ஆண்டுகள் கழித்துத் திரும்புகையில் தனம், அவளுடைய வாழ்க்கைப் புயலில் சிக்கிச் சின்னாபின்னமாகியிருக்கிறாள். சொத்துக்களை இழந்து, அக்காவை இழந்து, அக்காவின் கணவரையே மணமுடித்து வாழத் தொடங்கியிருக்கிறாள். அதைக் காணும், சண்முகம், மனதைத் தேற்றிக்கொண்டு அவளை விட்டுவிலகி அவனது வாழ்க்கையைத் தொடர்கிறான். ஆனால், காலம் அவர்களை அப்படியே விட்டுவிடுவதில்லை.

நகர வாழ்க்கையின் ஒரு நாளில், சண்முகம் சிக்னலில் காத்திருக்கும் போது ஒரு விபத்தில் சிக்கிக் காயம்பட்டிருக்கும் ஒரு சிறுவனைக் காண்கிறான். அவனே பாலு. பல்லாண்டுகளுக்குப் பிறகு, அச்சிறுவனின் அம்மாவாக தனத்தை, அங்கே ஒரு சாலைத்தொழிலாளியாகப் பார்க்கிறான்.
கணவனை இழந்து, மகனை வைத்துக்கொண்டு ஒரு கூலித்தொழிலாளியாக, நடைபாதைக்குடிசையில் வாழும் பெண்ணாக நிற்கிறாள் தனம். அப்படி ஒரு சூழல் எந்தக் காதலனுக்கும் வரக்கூடாது. தனலட்சுமியாக நந்திதா தாஸ் நடித்திருந்தார்.
நந்திதா, ஒரு பன்மொழி சினிமா நடிகை மட்டுமல்ல, சினிமா இயக்குநர், நாடக எழுத்தாளர், நாடக நடிகை மற்றும் சமூக ஆர்வலர் எனும் பன்முகம் கொண்டவர். அவரால் தனம் கதாபாத்திரத்துக்கு அப்படியொரு மறக்கமுடியாத வடிவத்தைத் தர முடிந்திருந்தது. ரத்தம் வழியும் பாலுவை மடியில் போட்டுக்கொண்டு அழும் காட்சியில் நந்திதா, யார் மனதை விட்டும் அகலாத ஒரு துயர ஓவியத்தைத் தீட்டிவிடுகிறார்.
தனத்தை அங்கேயே, அப்படியே விட்டுவிட்டுப்போக யாருக்குத்தான் மனம் வரும்? தன் நண்பர் ஒருவரின் வீட்டில் வேலைக்காரியாக தனத்தைப் பணியமர்த்தி, பாலுவின் படிப்புக்காக உதவி, அவளுக்கு சற்றே மேம்பட்ட ஒரு வாழ்க்கை வாழ உதவுகிறான் சண்முகம். ஆனால் அங்கோ, நிலைமை இன்னும் மோசமாகிறது. அவளுக்கு உணவும், பாதுகாப்பும், பிள்ளைக்குக் கல்வியும் கிடைத்தாலும், அங்கே அவளது சுயமரியாதைக்குக் களங்கம் ஏற்படுகிறது.
கூலித் தொழிலாளியாக நடைபாதையில் வாழ்ந்த போதுகூட அவள் சுயமரியாதையோடு வாழ்ந்தாள். சண்முகம் இன்னும் காயப்பட்டுப்போய், அடுத்தத் தவற்றைச் செய்கிறான். அவளைத் தன் வீட்டுக்கே வேலைக்காக அழைத்துப்போகிறான். அதன்பின் என்னவாயிற்று என்பதுதான் படத்தின் முடிவு.

சண்முகமாக பார்த்திபன் நடித்திருக்கிறார். அவரது சினிமா வாழ்க்கையின் முக்கியமான படமாக அழகி அமைந்திருக்கிறது. அவரது வழக்கமாக சேட்டைகள் அனைத்தையும் ஓரம்கட்டி வைத்துவிட்டு, அமைதியான சண்முகம் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருப்பார்.
சண்முகத்தின் மனைவியாக தேவயானி. கணவன் மீதும், குழந்தைகள் மீதும் அளவுகடந்த அன்பு இருப்பினும், தன் வேலையை விட்டுக்கொடுக்காத ஒரு உறுதியான பெண் பாத்திரத்தில் தேவயானி கச்சிதமாகப் பொருந்திப்போயிருப்பார். எந்த விகல்பமும் இல்லாமல், அவர் தனத்தை வீட்டு வேலைக்கு வைத்துக்கொள்ளும் போதும் கடைசியில், அவருக்கு ஏற்படும் தவிப்பை வெளிப்படுத்தும் போதும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இளையராஜாவின் உயிரோட்டமான இசை இந்தப் படத்தை இன்னொரு தளத்துக்குக் கொண்டு சென்றது. நடைபாதைக் குடிசையின் வாசலில், சோற்றைப் பொங்கியபடியே தன் நிலையை விளக்கிவிட்டு, சண்முகத்தைத் தான் ஆக்கிய உணவை, ‘மாங்கால்லாம் போட்டு இதெல்லாம் ஒரு குழம்புன்னு வைச்சிருக்கேன், சாப்பிடுறியா’ என்று சாப்பிடத் தருகிறாள்.
அப்போது மழை பெய்ய ஆரம்பிக்கிறது. எல்லோரும் சிதறி ஓட, அவன் சாப்பிட வசதியாக, ஒரு தடுப்பைக் குடையாகப் பிடித்துக்கொண்டு நிற்கிறாள் தனம். அவள் கையால் அவனுக்கு ஒரு வாய் சோறு தந்து மகிழக்கூட வாய்க்காத நிலையின் துயரம் அவளது கண்களில் தெரியும். அப்போது ஒலிக்கத் தொடங்கும் இளையராஜா எழுதிப் பாடிய ‘உன் குத்தமா, என் குத்தமா…’ எனும் பாடல், சண்முகத்தின் கண்ணீரோடு சேர்த்து நம்மையும் அப்படியே அந்த மழையினில் கரைத்துவிடுகிறது.

மொத்த படத்திலும் தனம் மகிழ்ச்சியாக இருக்கும் மிகச்சில இடங்களுள் ஒன்று, சண்முகம்-வளர்மதியின் படுக்கையறையில் அவர்களின் திருமணப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு கற்பனையில் அவள் சஞ்சரிக்கும் நிமிடங்கள். அங்கே இளையராஜாவின் வரிகளில், சாதனா சர்கம் பாடிய, ’பாட்டுச் சொல்லி’ பாடல் இடம் பெற்றிருக்கிறது. அகன்ற கண்களுடன் நந்திதா அகம் மலர்ந்து நிற்கும் அந்தப் பாடல் காட்சி ஓர் அழகான அனுபவம்.
இந்தப் படம் வெளியான ஆண்டு 2002. படத்தை எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியவர் தங்கர் பச்சான். ’கல்வெட்டு’ எனும் பெயரில் அவர் எழுதிய சிறுகதையைத்தான் இப்படி ஒரு திரைக்கதையாக விரித்திருக்கிறார் தங்கர் பச்சான்.
உதயகீதா சினி கிரியேஷன்ஸ் சார்பில் உதயகுமார் படத்தை தயாரித்திருந்தார். எடிட்டிங் பி.லெனின்-விடி.விஜயன். இசை இளையராஜா.
பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, விவேக், சாயாஜி ஷிண்டே முதலானோர் நடித்திருந்தார்கள். இந்தப் படம், அந்த ஆண்டுக்கான சிறந்த தமிழ்ப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருதினை வென்றது.
நடைபாதையில் தனத்தைச் சந்தித்துவிட்டு, கிளம்பும் தருணத்தில் ‘இனி என்னால் நிம்மதியாகத் தூங்க முடியாது’ என்கிறான் சண்முகம். பார்க்கும் நம்மாலேயே முடியாத போது, அவனால் மட்டும் எப்படி முடியும்?
சண்முகத்திற்கு மட்டுமல்ல, படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியேறிய ஒவ்வொரு ரசிகனுக்கும் 'அழகி' ஒரு தீராத துயரத்தைக் கடத்திவிட்டுத்தான் போனாள். அந்த வலிதான் இத்தனை ஆண்டுகள் கடந்தும் அவளை நாம் நினைவின் ஏதோ ஒரு மூலையில் சுமந்து கொண்டிருக்கிறோம்.!
(தொடரும்)














