"உதயநிதியின் பேச்சு வன்மத்தின் உச்சம்; விஜய் எங்கள் பிரச்னையை உடனே.!" - இயக்குந...
ஆடி, மகாளய, தை அமாவாசைகளுக்கு இணையான சனி அமாவாசை; 2 அமாவாசைகள் வரும் 'அதிக' மாதம் - எச்சரிக்கை தேவை?
ஒரு மாதத்தில் ஓர் அமாவாசை மற்றும் ஒரு பௌர்ணமி திதி வரும். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வரும். இப்படிப்பட்ட மாதங்கள் சிறப்பானவை.
சாந்திரமானம் எனப்படும் சந்திர நாட்காட்டியின்படி இதை 'அதிக மாதம்' என்பார்கள். அதாவது சாந்திரமானப்படி அமாவாசைக்கு அடுத்த நாள் ஒரு மாதம் பிறக்கும். அடுத்துவரும் அமாவாசையோடு அந்த மாதம் முடியும். அந்த வகையில் வரும் தமிழ் மாதமான வைகாசி மாதத்தின் இரண்டாம் நாள் (மே - 16 ) அன்று அமாவாசை வருகிறது. அடுத்த நாள் சாந்திரமான மாதம் (அதிக ஜேஷ்ட மாதம்) பிறக்கிறது. இதற்கு அடுத்த அமாவாசை தினமான வைகாசி 31 - ம் தேதியோடு (ஜூன் 14) அந்த மாதம் முடிவடைகிறது. சரியாக சொன்னால் இந்த ஆண்டு சாந்திரமான மாதங்கள் 13. இதை தமிழ் மாதங்கள் ஏதேனும் ஒன்றில் இரண்டு அமாவாசைகள் வருவதைக் கொண்டு எளிமையாக அறிந்துகொள்ளலாம்.

இந்த மாதத்துக்கு மல மாதம் என்றும் பெயர் உண்டும். மலம் என்றால் அழுக்கு. மனதில் உள்ள அழுக்குகளை எல்லாம் போக்கிக்கொள்ள உதவும் மாதம் என்பதால் இதற்கு மல மாதம் என்றும் சொல்வார்கள். இந்த மாதமானது புரட்டாசி, ஆடி, மார்கழி மாதங்கள்போல் வழிபாட்டுக்கு உரியவை என்கின்றன. இந்த மாதம் முழுவதும் நாம் இறைவழிபாடு செய்ய வேண்டும். இந்த மாதத்தில் தினமும் அதிகாலையிலேயே நீராடி சூரிய வழிபாடு செய்தால் ஆரோக்கியம் மேன்மை அடையும் என்கிறார்கள். இந்த மாதம் மந்திர ஜபங்கள் செய்ய அவை ஸித்தியாகும். இப்படிப்பட்ட புண்ணியமான 'அதிக' மாதத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்ய வேண்டாம் என்றே அறிவுறுத்துகின்றன ஞான நூல்கள். அதற்குக் காரணம் இறைவழிபாட்டுக்கே முக்கியத்துவம் என்னும்போது பிற விஷயங்களில் மனம் செல்லக் கூடாது என்பதுதான்.
அந்த வகையில் இந்த மாதத்தில் வரும் இரண்டு அமாவாசைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. முதல் அமாவாசை சனிக்கிழமை வருகிறது. பொதுவாக சனிக்கிழமைகளில் வரும் அமாவாசையை மிகவும் உத்தமமானது என்பார்கள். ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசைக்கு இணையான பலனைக் கொடுப்பது சனி அமாவாசை. இந்த நாளில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தால் அதன் பலன் பன் மடங்காகக் கிடைக்கும். குறிப்பாக சனிக்கிழமை வருவதால் சனிபகவானுக்கும் பிரீத்தியாக இது கருதப்படுகிறது. சனிபகவானுக்குரிய தானியம் எள். எள் கொண்டுதான் தர்ப்பணங்கள் செய்வோம். அப்படிச் செய்யும்போது சனிபகவான் மனம் மகிழ்வார் என்கின்றன ஜோதிட நூல்கள்.

பெரும்பாலானவர்கள் அஷ்டம சனி, ஏழரைச்சனி, கண்டகசனி ஆகியவற்றால் நிறைய கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் எல்லோரும் கட்டாயம் இந்த சனி அமாவாசையில் அவர்கள் முன்னோர்களை வழிபட சுப பலன்கள் பெருகும். மேலும் முன்னோர்கள் வழிபாட்டால் சனிபகவான் திருப்தி அடைவார்.
சனி அமாவாசை மே 16 அன்று நாள் முழுவதும் இருக்கிறது. அந்த நாளில் பரணி நட்சத்திரமும் கிருத்திகை நட்சத்திரமும் உள்ளன. இப்படிப்பட்ட அற்புதமான நாளில் காலை 8.30 மணிக்கு மேல் உச்சிப் பொழுதுக்கு முன்பாகத் தர்ப்பணம் செய்ய வேண்டும். வீட்டில் தர்ப்பணம் கொடுப்பவர்கள், அரிசி, வாழைக்காய் போன்றவற்றை பிறருக்கு தானமாகக் கொடுத்தல் அவசியம். இயன்றவர்கள் அன்னதானம் செய்தல் சிறப்பு.

இந்த நாளில் செய்யும் தான தர்மங்கள் பன்மடங்கு நன்மைகள் கிடைக்கும். ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ வாய்க்கும் இப்படிப்பட்ட அபூர்வ அமாவாசை தினங்களைத் தவறாமல் பயன்படுத்திக்கொண்டு முன்னோர்களை வழிபடுவதன் மூலம் வேண்டும் வரம் பெறலாம்.


















